கையிலிருந்த தினசரியில் செய்திகள் கனத்தன
எண்ணூரில்
எண்ணெய்ப் படலம்
என்னென்னவோ
சொல்கிறார்கள்
கவலை
பாரமாய் அழுத்துகிறது
ஏரிகள்
காணாமல் போய்விட்டன
கட்டிடங்கள்
முளைத்துவிட்டன
இவரைக்
கேட்டால் அவரைச் சொல்கிறார்
அவரைக்
கேட்டால் இவரைச் சொல்கிறார்
கூசாமல்
குவித்து வைத்திருக்கிறோம்
குப்பைகளையும்
பொய்களையும்
வெட்கமின்றி
உலா வருகின்றன
ஊழல்
முகங்கள்
தீர்வைத்
தர வேண்டும்
உணவுப்பொட்டலங்களோடு
முடிந்து விடுகிறது
புகைப்பட
வெளிச்சத்தில் பெருமிதங்கள்
எல்லாவற்றிற்கும்
பதில்
வைத்திருக்கிறார்கள்
கேள்வி
கேட்பவர்களின்
வாயை
மூடி விடுகிறார்கள்
இன்னொரு
தேநீர்
பெரியவரிடம்
கேட்டேன்
தலையாட்டினார்
மனுஷன்
நேர்மையா இருந்தா
நாடு
தூய்மையா இருக்கும் என்றார்
சட்டையில்
சிந்திய தேநீரைத்
துடைத்துக்கொண்டார்
அமைதியானவர்
திடீரென
வெடிப்பது
போல்
சொல்லிவிட்டுப்
போனார்
நாக்க
புடுங்கிகிட்டு சாகற மாதிரி
நாலு
வரி எழுதுங்க தம்பி
எதுவும்
தோன்றவில்லை
தினசரியில்
தொலைந்து போனவரோடு
நானும்
தொலைந்து கொண்டிருந்தேன்
No comments:
Post a Comment