Monday, October 31, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

730-

நான் வளர்க்கும்
பெருங்கனவு
எனை
வளர்த்தெடுக்கும்
உலகளவு

731-

சிறு கல்
எறி

பெரு மலை
பிடி

732-

ஆத்மாவைத்
தொலைக்காதவனை
பிரபஞ்சம்
தொலைப்பதில்லை

*குட்டி தேவதைகள்

மருத்துவர் அழைப்புக்காகக் காத்திருக்கிறேன்

என் எண் வரவில்லை
அதனால் இன்னும் கூப்பிடவில்லை

வலியை ஆறுதல்படுத்தியபடி
நினைவால் தடவிக்கொடுத்தபடி
அமர்ந்திருக்கிறேன்

மருந்து நெடி கூடிய அந்த ஹாலில்
ஆடி ஓடிக் கொண்டிருக்கிறாள் ஒரு சிறுமி

அம்மாவிடம் ஓடுவதும்
அவள் கையிலிருக்கும் குழந்தையை
முத்தமிடுவதுமாய்

அந்த பட்டாம் பூச்சியின் அசைவுகள்
வலியை மறக்கச் செய்கின்றன

பரவும் மணம் போல
அவள் வாசனையை
எல்லாக் கண்களும் முகர்கின்றன

அவள் பெயர் கேட்கத் தோன்றுகிறது

குட்டி தேவதைகளுக்குப் பெயர் எதற்கு
மனம் ஒரு பதிலையும் தருகிறது

ஒருவர் அவளைப் பிடித்து பெயர் கேட்கிறார்

சம்பிரதாயக் கேள்விகளை நிராகரிப்பவள் போல
சொல்ல முடியாது எனச் சிரித்தபடியே ஓடுகிறாள்

அந்த சிரிப்பில் சிதறி விழுகின்றன
சில பெயர்களும் கொஞ்சம் இசையும்

என் கையிருக்கும் புத்தகத்தைப் பார்த்து ஓடி வருகிறாள்

இதில் பொம்மைகள் இல்லையே என்கிறாள்

உள்ளே பொம்மைக் கதைகள் இருக்கின்றன என்கிறேன்

ஒரு கதை சொல்லச் சொல்லிக் கேட்கிறாள்

என் பொய்கள் ஏதோ ஒரு கதையை
அழைத்து வரத் தொடங்கினேன்

ஒரு தேசத்துல ஒரு குட்டி இளவரசி இருந்தா
அவ பேரு…பேரு…ம்….சின்ட்ரலா…

அம்மா இந்த மாமா என் பேரச் சொல்றாரு
எனச் சொல்லியபடியே ஓடினாள்

உண்மையான என் பொய்க்கு
நன்றி சொல்லியபடியே
கண் துளியைத் துடைக்க
என் எண்ணை சொல்லிக் கூப்பிட்டார்கள்

முழுதுமாய் நீங்கிய வலியுடன்
நுழைந்தேன் மருத்துவர் அறைக்குள்

*தினகரன் தீபாவளி(2011)மலரில் வெளியானது

*அதனதன் இடத்தில்

கோயிலுக்கு வந்த எல்லோரும்
பிரார்த்தனை செய்து கொண்டார்கள்

பிரசாதம்
பகிர்ந்து கொண்ட நேரத்தில்
மகளிடம் தந்தைக் கேட்டார்

நீ என்ன
பிரார்த்தனை செய்து கொண்டாய்

அதிக மார்க் எடுக்க வேண்டும் என்றா

டாக்டர் ஆக வேண்டும் என்றா

வெளிநாடு போக வேண்டும் என்றா

எல்லாவற்றிற்கும்
இல்லை என்று தலையாட்டிவிட்டு
பிறகு சொன்னாள்

இந்த கோயில் யானையை
உடனே கொண்டுபோய்
காட்டில் விட்டுவிட வேண்டும் என்று
வேண்டிக் கொண்டதாக

மனிதர்கள் அதை செய்ய மாட்டார்கள்
கடவுளையும் செய்ய விட மாட்டார்கள்

சிரித்தபடி சொன்னாள்
சோகம் இழையோட

அசை போட்ட எல்லோரும்
அவளைப் பார்க்க
அவள் தூரத்திலிருந்த
யானையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்

அது தும்பிக்கை நீட்டி
அவளை அழைப்பது போலிருந்தது

வா இருவரும்
காட்டுக்கு ஓடி விடலாம் என
கூப்பிடுவது போலவும் இருந்தது

*ஆனந்த விகடன் தீபாவளி மலரில்(2011)வெளியானது

Sunday, October 30, 2011

சந்தை

இந்தச் சந்தை
அபாயகரமானது

உங்களுக்குத் தெரியாமல்
நீங்கள் விற்கப்படுவதற்குமுன்
விற்க வந்ததை
விற்றுவிட்டு
வெளியேறி விடுங்கள்

இந்த சந்தை
மிகவும் அபாயகரமானது

Saturday, October 29, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

728-

வெளியைத் தொட்டு
வெள்ளைத் தாளில் வைத்தேன்
பிரபஞ்சத்தின் நிறம்

729-

நீங்கள்
எழுதிய வரிகளில்
கடந்து போயிருக்கிறீர்களா

யானை

யானையை
வரைகிறாள் குழந்தை

குழந்தையைப் போல யானை
அவள் விரல்கள்
சொல்வதைக் கேட்கிறது

முடியும்

நீண்டுகொண்டே போகிறது
உங்கள் கதை
நிற்காமல்
எப்போது முடியும்

நீண்டு கொண்டே
போனபோதுதான் தெரிந்தது
இது பயணம் என்று

பயணம் முடியும்போது
நிச்சயம் கதையும் முடியும்

குறுஞ்செய்தி

காதல் கொல்கிறது
என்று வரும்
குறுஞ்செய்தியை
எல்லோரும் எல்லோருக்கும்
அனுப்பிக்கொண்டிருக்கிறோம்
அழிக்காமல்
காதல் வாழ்கிறது

Friday, October 28, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

717-

மழை மீதேறிப்
போன மெளனம்
பெய்தது சத்தமாக

718-

கண் மூட
நீந்தும்
மரணம் கண்டேன்

கண் மூடி
நானும்
மரணம் கொண்டேன்

719-

என்னை அழித்தும்
நான் இருந்தது

நான் அழித்தும்
நான் இருந்தது

720-

வசிக்க
நிறைய சத்தம்

வாழ
கொஞ்சம் இசை

721-

பழைய ஆறு
குளித்தெழ
புதிய நான்

722-

நீச்சல் தெரியாது
நீந்துகிறேன்
யோசனைகளில்

723-

மீன் தொட்டியிலிருந்து
தாவி
பறந்துபோய்
கடலில் குதித்தது
மீன்

724-

நகர்த்தும்
வார்த்தைகளுக்குள் ஓடும்
படைப்பின்
உந்து சக்தி

725-

கணக்கு போட்டுப்
பேசுகிறீர்கள்
எண்களாகிறது
உங்கள் மொழி

726-

ஒளி என்பது
வேறல்ல
நாம்தான்

727-

தருணங்களின் தவமே
பாய்ச்சல்
அதுவே
மின்னல் நொடி
நிகழ்வாகவும்

Wednesday, October 26, 2011

சேகுவாராவின் செருப்பு

சேகுவாராவின் செருப்பை
யாரோ திருடிவிட்டார்கள்

கல் போட்டது போல்
வந்து கலைத்தது
மீண்டும் தள்ளியது
இந்த வரி

வரியைத்
தொடர்ந்து சென்றால்
சேகுவாராவை அடையலாம்
அல்லது
செருப்புக் கிடைக்கலாம்

Sunday, October 23, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

713-

நான் அணிந்திருக்கும் உயிர்
என்னுடையதல்ல
பிரபஞ்சத்தினுடையது
வேண்டும் போது
எடுத்துக் கொள்ளும்

714-

நான் உதிர்ந்தேன்
நீ
மலர

715-

புத்தகங்களின் வனத்தில்
நானோர்
விலங்கு

716-

என் முகமூடியைப் போட்டுப்
பார்க்காதீர்கள்
கழற்றும் போது
என் முகம்
படிந்து போயிருக்கும்

Saturday, October 22, 2011

எனது பொய்கள்

இத்துடன்
எனது பொய்கள்
முடிவடைகின்றன
எனச் சொல்கிறவன்
வேறு சில
பிரமாண்டமான பொய்களுக்குத்
தயாராகிறான்

Friday, October 21, 2011

வழிப்போக்கன்

மழைக்கு
ஒதுங்குவதில்லை
வழிப்போக்கன்

கிடைத்தது

வானவில்லை வைத்து
அனுப்பிய வானம்
கிடைத்ததா

வானவில்லை
ரசித்த போது மழையும்
கிடைத்தது

ஓடும் ரயிலில்

ஓடும் ரயிலில்
கதவருகில் அமர்ந்திருந்த
பெரியவருக்கு
கொஞ்சம் தேநீரைப்
பரிமாறி கொண்டபின்
கேட்டேன்
சொன்னார்

உடம்பு சரியில்ல சார்
வாயில புண் வேற
இன்னைய பொழப்பு போச்சு
இவனுக்கு நல்ல ஓய்வு

ரயிலின்
சத்தத்தைக் கேட்டபடி
அவர் மடியில்
குழந்தை போல் கிடந்தது
புல்லாங்குழல்

Thursday, October 20, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

710-

மிச்சமிருக்கிறேன்
நான்
இது போதும்

711-

அனுமதி மறுப்பதில்லை
நிலங்கள்
நமது வாசகங்களில்
அனுமதி மறுக்கப்பட்ட
இடங்கள்

712-

பசிக்கத் தேடு
பசிக்கு
பசியே உணவு

தண்டனை

உங்கள் வியூகத்தில்
அகப்பட்டுக் கொண்டவர்களுக்கு
நீங்கள் தண்டனை கொடுத்தீர்கள்
தப்பித்துப் போனவர்கள்
உங்களுக்கு தண்டனைக் கொடுப்பார்கள்

வெளியில்

எதுவும் எழுதவில்லை
குளிர் காய்கிறேன்
மொழிக்கு வெளியில்
அமர்ந்து

Wednesday, October 19, 2011

புல் சொன்னது

புல்லிடம்
மலை பேசியது

எனக்கு கீழேதானே
நீ இருக்கிறாய்

என் உச்சியைப் பார்க்க
உனக்குத் தோன்றவில்லையா

புன்னகைத்து
புல் சொன்னது

நான் வானத்தையே
பார்க்கிறேனே

அதற்கு கீழேதானே
நீ இருக்கிறாய்

Monday, October 17, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

705-

உள் நீந்த
மீனானேன்
மீன் நீந்த
நானானேன்

706-

ஒற்றை வரி
அழைக்கும்
மற்ற வரி
மற்ற வரி
இணைக்கும்
மொத்த வரி

707-

தயக்கம்
அடியெடுத்து வைக்கும்
குழந்தையைப் போல

அடிசாய்த்து விடும்
பிசாசைப் போல

708-

என் மேல்
நின்று பார்க்க
தெரிந்தது
என் உயரம்

709-

என்ன என்று
அறியும் முன்
வழிந்தது கனவு
கண்ணீரில்

Saturday, October 15, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

700-

எனது தொப்பியின் மேல்
வானத்தை
ஒரு சிறகாக
சூடியுள்ளேன்

701-

மலையை விழுங்கிய
கனவின் உச்சியில்
நிற்கிறேன் நான்

702-

வழி
பயணச் சீட்டு
புறப்பட வேண்டும்

703-

எனது ரயில்
போய் விட்டது

எனது தண்டவாளங்கள்
இருக்கிறது

704-

அழுவதைத் தவிர
வழியில்லை

அழுகைக்கும்
வேறு வழியில்லை

Friday, October 14, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

695-

அறியேன் எனினும்
அறிவேன்

அறிவேன் எனினும்
அறியேன்

696-

குட்டி குட்டியாய்
நீந்தின கேள்விகள்
திமிங்கலப் பசியுடன்

697-

நீளும் பாதை
முடிவற்று

698-

நன்றியை
சொன்ன நேரம்
சொல்லியது
கண்ணீரும்

699-

எளிமையான கோடுகள்
ஓவியத்திற்கு
அழைத்துச் செல்லும்
நம்பிக்கை இருக்கிறது

மின்னும் வரி

நள்ளிரவில்
மின்னிய வரியை
நள்ளிரவுகளில்
தேடுகிறேன்

கிடைக்கக் காணோம்

இருளில் என்னைத்
தள்ளி விட்டு
விளையாடுகிறது
ஒளிந்து கொண்டு

Wednesday, October 12, 2011

இருக்கக் கூடும்

ஒயின் ஷாப் பாரில்
கிளாஸ் பொறுக்கி
டேபிள் துடைக்கும்
சிறுவனைப் போன்று
குடித்துக் கொண்டிருக்கும்
யாரேனும் சிலருக்கு
இருக்கக் கூடும்
படிக்கும் மகன்கள்

Tuesday, October 11, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

690-

பெருமூச்சுடன்
முடிகிறது
ஏக்கம்

691-

கனவின் பிசுபிசுப்பை
இமைகளின் இடையில்
ஒட்டிக்கொண்டு
தூங்கப் பார்க்கிறேன்

692-

ரகசிய விளக்குகள்
இருளை விட
பயமுறுத்துகின்றன

693-

ஒன்றை கவனிக்க
இன்னொன்று
கவனிக்க வைக்கும்

694-

சிறிதாய் அடிக்கடி
வரும் கேள்வி
எது பெரிது

இருந்தது

தொலைந்தது வரி
கிடைத்தன வார்த்தைகள்

பொருத்திப் பார்க்க
இருந்தது

அதே போலவும்
புதிதாகவும்

Sunday, October 09, 2011

அனுபவ சித்தனின் குறிப்புக்கள்

685-

எளிமையான
வரியின் மேல்
நான் ஊர்ந்து போகும்
சிறு எறும்பு
வேறொன்றுமில்லை

686-

காடு எரிகிறது என்று
எழுதிய வரியை
உடனே அழித்தேன்
வார்த்தைகளுக்குள்
வனம் அழிவதை
விரும்பவில்லை

687-

பெயரை
திரும்ப திரும்ப
அழிக்கிறேன்
புதிய பெயர்கள்
முளைக்க

688-

துளியை
மாபெரும்
துளியென
உடை
திரும்ப திரும்ப
உண்

689-

பூ
உடைந்தது
மணம்
உடையவில்லை

Saturday, October 08, 2011

படிகள்

படிகளை வரைந்தாள் குழந்தை
எப்போது இதில்
ஏறிப்போவாய் என்றேன்
சிரித்தபடியே சொன்னாள்
நான் இறங்கி வந்த
படிகளைத்தான்
வரைந்து கொண்டிருக்கிறேன்

Wednesday, October 05, 2011

சொல்லாமல்...பேசாமல்

ஒரு கல்லைத்
தூக்கி எறிவது போல

ஒரு கதவை
சாற்றுவது போல

சிலரை
புறக்கணித்து விடுகிறோம்

விழும் கல்
வலி சொல்வதில்லை

சாற்றப்படும் கதவு
பதில் பேசுவதில்லை

அவர்களும் அப்படிதான்
போய்க் கொண்டிருக்கிறார்கள்

வலி சொல்லாமல்
பதில் பேசாமல்

கற்றுத் தரும் வார்த்தைகள்

எதுவும் பெற்றுத் தராத
இந்த வார்த்தைகளை
வைத்துக்கொண்டு
என்ன செய்யப் போகிறீர்கள்

உங்களுக்கு வேண்டுமானால்
இது பெற்றுத் தராத
வார்த்தைகளாக இருக்கலாம்

எப்போதுமே எனக்கு இது
கற்றுத் தரும் வார்த்தைகள்

Tuesday, October 04, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

682-

சொல்லில்
சுடர் அசைந்தது
சுடரை
ஊதி அணைத்தேன்
ஆனாலும்
சொல் ஒளிர்ந்தது

683-

நடந்து விடுவேன்
நம்பிக்கை இருக்கிறது

கடந்து விடுவேன்
நம்பிக்கை நடக்கிறது

684-

வரிகள்
கண்டெடுக்கும்
என்னை