Tuesday, April 26, 2022

ஒருவரும் இல்லை

 என்னோடு உறங்கிக்கொண்டிருந்தவர்

சொல்லிக்கொள்ளாமல்

அமைதியாகப் போய்விட்டார்

இறந்துவிட்டார்

நானும் இறந்துகொண்டிருக்கிறேன்

சொல்லிச் செல்ல

அருகில் ஒருவரும் இல்லாமல்

எப்போது பூமிக்குத் திரும்புவீர்கள்

 உங்கள் ஒப்பனையும் நடிப்பும் அருமை

உங்கள் வசனங்கள் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன

மேடை முழுதும் புயல்போல் ஆக்கிரமிக்கிறீர்கள்

உங்கள் கர்ஜனை அரங்கை விழுங்குகிறது

இமைமூடாது என்னென்னவோ செய்கிறீர்கள்

சபையோரை உறங்கவிடாமல் பார்த்துக்கொள்கிறீர்கள்

காட்சிகளும் திரைக்கதையும் உங்களுக்கு

வளைந்துகொடுக்கின்றன

நீங்கள் நிமிர்ந்து நடிக்கிறீர்கள்

பலவிதமாய் நடிக்கிறீர்கள்

மிதக்கிறீர்கள்

பறக்கிறீர்கள்

உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்க வேண்டும்

மனிதனாக எப்போது

பூமிக்குத் திரும்புவீர்கள்

Wednesday, April 20, 2022

யாரோ

மலையுச்சிக்கு வந்து

மலையோடு

ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டு

செல்போனைக் கீழே வைத்துவிட்டு

மெல்ல மூச்சை

உள்ளிழுத்து வெளிவிட்டு

குதித்துவிட்டான்

சற்று நேரம் கழித்து

மேலேறி வந்த பெரியவர்

வியர்வையைத் துடைத்து

செல்போனைக் கையில் எடுத்து

சுற்றும் முற்றும் பார்த்துச் சொல்கிறார்

“யாரோ மறந்து வச்சிட்டுப் போயிட்டாங்க’’

“யாரோ வச்சிட்டுக் குதிச்சிட்டாங்க’’

நடுக்கத்துடன் மலை சொன்னது

அவருக்குக் கேட்கவில்லை

 


Tuesday, April 19, 2022

மூதாட்டி

 ஆளரவமற்ற இடத்தில்

ஆலயத்தின் மூலையில்

இமைமூடி

தவம்போல் அமர்ந்திருக்கும்

மூதாட்டியின் கண்களிலிருந்து

வழிகிறது நீர்

அவள் மேல்

அசைகிறது ஒளிக்கீற்று

பெருவயதுக்காரி

கண் திறக்கும்போது

பிரபஞ்சம்  சிறிதேனும்

பேரன்பைத் தரக்கூடும்

Sunday, April 10, 2022

துயரமும் வலியும்

 துயரமும் வலியும்

ஒவ்வொருவராக விடைபெற்றுக்கொண்டார்கள் நானும் விடைபெற வேண்டும் என்னிடமிருந்து வலியும் துயரமும்

Friday, April 01, 2022

காலம் சுழல்கிறது

அவர் பேசுவதைக் குறைத்துக்கொண்டார்

இவர் பேசுவதில்லை

மற்றவர் குறுஞ்செய்திகளும் குறைந்துபோனது

இன்னொருவர் அன்பிரண்ட் செய்துவிட்டார்

உள்ளேன் அய்யா என்பது போலிருந்த அன்பும்

ஓடி எங்கோ ஒளிந்துகொண்டது

எதிர்படும் ஒருவர் தெருமாறிச் செல்கிறார்

குற்றப்பத்திரிக்கை வாசிப்பவர்

மன்னிப்பைக் கடலில் எறிந்துவிட்டு வாக்கிங் போகிறார்

சுவரெழுப்பிக்கொண்டவர்கள் கொஞ்சம் பேர்

ஜன்னலில்லாத சுவர்கள் என்பது வருத்தமான தகவல்

விஷேசங்களில் சந்தித்தால் உண்டு

விஷேசங்களுக்கான அழைப்புகள் வருவது குறைந்துபோனது

அல்லது விஷேசங்கள் ரகசியமானது

முகம் தெரியாதவர் புன்னகைக்கிறார்

கடவுள் பிரார்த்தனையைக் கேட்டுக்கொண்டார்.

மற்றபடி காலம் சுழல்கிறது

இசைத்தட்டு போல

அதில் எனக்கான இசையைக் கேட்டுக்கொள்கிறேன்

குட்டிமழைக் கூப்பிடுகிறது

புழுக்கத்தை ஆற்றிக்கொள்ளக் கொஞ்சம் போய்

நனைந்துவிட்டு வர வேண்டும்.