Sunday, May 27, 2018

உயிர்

ஏங்க அடிக்கிறீங்க?

ஏய்யா அடிக்கற?

எதுக்குடா அடிக்கற?

உயிர் பிரிந்திருந்தது.

Saturday, May 26, 2018

உங்களைக் கொல்லவேண்டும்

 #bansterlite #savethoothukudi #kumarteastall #conversationwithafriend
அதுவாகச் சரியாகிவிடும் என்றார்
மெதுவாக
இந்த மனோபாவம்தான்
நம்மைக் கொன்றுகொண்டிருக்கிறது என்றேன்
சத்தம் குறைத்துப் பேசச் சொன்னார்
உங்களைக் கொல்லவேண்டும்
போலிருக்கிறது
சைகையால் சொன்னேன்
மீதித் டீயைக் குடிக்காமல்
எழுந்து போய்விட்டார்
துக்கத்தை
விழுங்கிக்கொண்டிருந்தேன்
தேநீரைக்குடித்து
- ராஜா சந்திரசேகர்


#bansterlite #savethoothukudi #kumarteastall #conversationwithafriendஅதுவாகச் சரியாகிவிடு

Thursday, May 24, 2018

தெரியவில்லை

யாரென்று
தெரியவில்லை
எழுதியவரின்
பெயரில்லை
எழுதியதில்
அவர் இருந்தார்


Wednesday, May 16, 2018

நடுவில்

சொற்களின் நடுவில்
காற்று இருக்கிறது
புத்தகம் மிதக்கிறது



வரைந்த வானவில்

வரைந்த வானவில்லை
முத்தமிடுகிறது குழந்தை
வானம் அசைகிறது


பயணித்தல்

வெளியே பயணித்தல்
தூரங்களால் ஆனது
உள்ளே பயணித்தல்
ஆழங்களால் ஆனது


Tuesday, May 15, 2018

நீயே விழிச்சுக்கப் பாரு


நீயே விழிச்சுக்கப் பாரு
இங்கு எதுவும் சரியில்ல 
தம்பி கேளு
தண்ணிய கேட்டா
டாஸ்மாக் காட்டுறான்
தடுமாறி விழுந்தா
போட்டு அடிக்கறான்
கட்டளைக் கேட்டு
பொம்மைகள் ஆடுது
உரிமைகள் எல்லாம்
காத்துலப் பறக்குது
அரசியல் புனிதர்
ஆயிரம் பேசுறார்
உண்மைய விட்டு
உளறிக் கொட்டுறார்
விளைஞ்சப் பயிறு
வாடிக்கிடக்குது
விதைச்ச மனசு
துடிச்சிப்போகுது
உள்ளுக்குள்ள
பேசி மறைக்கிறான்
ஊமை வேஷம்
போட்டுப் போகிறான்
கார்ப்பரேட் பையில
காசு சேருது
எங்க வயித்துல
பசி ஊறுது
நிம்மதி குறைஞ்சிப் போச்சு
நினப்பு கொதிநிலையாச்சு
மனசுல கூடுது கனம்
போராடிப் பாக்குது ஜனம்
தீர்வ நோக்கி நகரல
திரைக்குள் பேரம் முடியல
எல்லாம் தப்பாப் போகுது
நாடு நஞ்சா ஆகுது
ஒழுக்கம் நசுங்கிப் போச்சு
உண்மை ஓட்டை ஆச்சு
எதுவும் சரியா நடக்கல
என்ன ஆகுமோ தெரியல
நீயே விழிச்சுக்கப் பாரு
இங்கு எதுவும் சரியில்ல
தம்பி கேளு
- குமுதம் இதழில் (16.5.201) வெளியானது -

Monday, May 14, 2018

வழிப்போக்கன்

உறங்குகிறது 
நிழல் 

இளைப்பாறுகிறது 
நாய்

கடக்கிறான்
வழிப்போக்கன் 


Saturday, May 12, 2018

சிறுபுல்

நான் சிறுபுல் 
பெருவனம் 
முத்தமிடும்போதெல்லாம் 
கூடுதலாகக் கொஞ்சம் 
அசைந்து கொள்வேன்


Monday, May 07, 2018

கருணை சிகிச்சை

மெல்லக் குனிந்து
கும்பிட்டவரின்
யானைக்காலை
தும்பிக்கையால்
தடவிக்கொடுத்தது யானை
கருணை சிகிச்சை
கிடைத்தது போல்
சந்தோஷப்பட்டார்

இருக்கை

என் இருக்கையில் 
எல்லோரும் அமர்ந்திருந்தார்கள் 
மற்ற இருக்கைகள் 
காலியாக இருந்தன

Wednesday, May 02, 2018

மன்னிப்பின் கிளைகளில்

மன்னிப்பின் கிளைகளில்
குற்றங்கள் இளைப்பாறுகின்றன
மரத்தைச் சாய்த்துவிட்டுப்
போய் விடுகின்றன