நாவில் ஊறிய
பொய்களைத் துப்பினேன்
எச்சிலோடு சேர்த்து
என்னை வரைய
வண்ணம் தேவையில்லை
கண்ணீர் போதும்
குழந்தைக் கேட்டாள்
நீங்கள் பார்த்த
வானவில் போல்
இருந்ததா
நான் வரைந்தது
புன்னகைத்து
அவள் கன்னம் தடவிச்
சொன்னேன்
நீ வரைந்த
வானவில் போன்றிருந்தது
நான் பார்த்தது
மேஜை மேல்
பொம்மை சிங்கம்
வனத்தின் வனப்புடன்
அசைவற்று
இருக்கும் என்னை
கூர்ந்து பார்க்கிறது
என் இந்தக்
கல் நிலை
தொடருமானால்
பெருங்கோபம் கொண்டு
பாய்ந்து வந்து
என்னைத் தின்று விடலாம்
ஒரு நாள்
யாருக்கு இதை
சொல்ல நினைக்கிறீர்கள்
யாருக்குமில்லை
எனக்குமில்லை
சொல்ல நினைக்கிறேன்
அவ்வளவுதான்
விளக்கை
ஊதி அணைத்த குழந்தை
இருளில் நடக்கிறது
சுடர் போல