Thursday, August 28, 2014

இப்படித்தான்

இப்படித்தான்
இந்தக் கவிதையை
உடைத்தேன்
இத்தனை கவிதைகளாகும்
என்று தெரிந்திருந்தால்
எழுதியே இருக்க மாட்டேன்

இரண்டும்தான்

உங்கள் சொற்களில் 
விளையாடுவது 
பொய்யா சாதுர்யமா 
இரண்டும்தான் 
பொய்யின் சாதுர்யம் 
சாதுர்யத்தின் பொய் 

Friday, August 22, 2014

இறந்தும் போகிறான்

நஞ்சைக் கொடுத்து 
நகைச்சுவை உணர்வுடன் 
குடிக்கச் சொல்கிறீர்கள் 
குடிக்கிறான் 
சிரித்துச் சிரித்தே 
இறந்தும் போகிறான் 
உருக்கமாக வருகிறது 
உங்கள் கண்ணீர் 
குழந்தை அறைக்குள்ளிருந்து 
வெளி வருவதைப் போல 

Monday, August 11, 2014

உரக்கச் சொல்லுங்கள்

நான் சொற்களை 
அடுக்கிக் கொண்டிருக்கிறேன்
படித்து உங்களுக்கு 
ஏதேனும் கிடைத்தால் 
எனக்கும் உரக்கச் சொல்லுங்கள் 

உன்னால் மறுக்க முடியாது

உன் எல்லாச் சிறகுகளையும் 
வெட்டிவிட்டேன் 
நீ பறக்க முடியாது 

அதனாலென்ன 
நான் பறவை இல்லை என்று 
உன்னால் மறுக்க முடியாது 

Saturday, August 09, 2014

நடிக்க முடியாது

என்னைப் போல்
உங்களால்
நடிக்க முடியாது
உங்களைப் போல்
என்னால்
நடிக்க முடியாது
நம்மைப் போல்
யாராலும்
நடிக்க முடியாது

Tuesday, August 05, 2014

தெரிந்தார்

வலையோடு 
ஒரு மீனவரைப் 
புகைப்படம் எடுத்தேன் 
ஒரு கணம் 
நின்று புன்னகைக்கும் 
மீன் போல் தெரிந்தார்

Monday, August 04, 2014

எழுதியபடி

கதவைத் தட்டும் 
கனவுக்கும் 
கனவைத் திறந்து 
உள்ளே வரும் 
கனவுக்கும் 
இடையில் நான் 
என்ன செய்வது 
என்று தெரியாமல் 
இந்த வரிகளை 
எழுதியபடி 

சொல்

மடித்து வைக்கப்பட்ட
ஒரு சொல்லை
விரித்தேன்
வாக்கியங்களாக
நீண்டுகொண்டே போகிறது

மலைமுகட்டில்

இன்று எதையும் 
எழுதப் போவதில்லை 
இந்த மலைமுகட்டில் 
நின்றுகொண்டு 
வெள்ளைக் காகிதங்களைக் 
காற்றில் 
பறக்க விடப் போகிறேன்

Sunday, August 03, 2014

உடைந்த கனவில்

உடைந்த கனவில்
நடக்கும் இரவு
குருதிக் கசிய

வேண்டுமா என்ன

அழுகிறேன்
காரணம் எதுவுமின்றி
அழ ஏதாவது
வேண்டுமா என்ன 

என்ன செய்யப் போகிறீர்கள்

அரங்கம் நிரம்பி விட்டது 
என்ன செய்யப் போகிறீர்கள் 
வீதிக் காட்சிகளைப் 
பார்த்தபடி 
நடக்கப் போகிறேன் 

Saturday, August 02, 2014

நடிக்கிறேன்

நான்தான்
எல்லாக் கதாபாத்திரமும்
உங்களுக்குக்
களைப்புத் தட்டிவிடக் கூடாது
என்பதற்காக
முகம் மாற்றி நடிக்கிறேன்

ஒரு வியூகத்தில்

அப்படி எல்லாம் நீங்கள்
தப்பித்து விட முடியாது
ஏதாவது ஒரு வியூகத்தில்
சிக்கித்தான் ஆக வேண்டும்