Thursday, September 27, 2012

யார்


பெருமூச்சின் பள்ளத்தாக்கில்
ஏக்கம் சுமந்து
நடந்து போவது யார்
நண்பா
அது நானா
நீயா
இல்லை
வேறு யாரோவா

Wednesday, September 26, 2012

மலை

கவிதையில் 
ஒளித்து வைத்த மலை 
முளைக்கிறது 
வார்த்தைகளுக்கிடையில்

Tuesday, September 25, 2012

கல்

எறிந்த கல் 
பறவையாகி 
பறக்கும் 
விழுந்த பறவை 
கல்லாகி 
இறக்கும்

குழந்தை

விற்கும் குழந்தையிடம் 
பிடிக்கவில்லை 
தேவையில்லை 
என்றாலும் 
வாங்கிச் செல்லுங்கள் 
அப்படியேத் தவிர்த்து 
நீங்கள் போகும் போது 
உங்கள் காலடியில் 
அல்லது கார் அடியில் 
அதன் நசுங்கிப் போன 
கனவொன்று இருக்கும்

Sunday, September 23, 2012

ஒளிர்கிறது

என் சொற்களை 
ஊதி அணைக்கிறாய் 
ஒளிர்கிறது 
மௌனம்

Saturday, September 22, 2012

வரைந்த போது

புத்தரை வரைந்த போது 
வண்ணம் 
தீர்ந்து போயிற்று 
அப்படியே விட்டுவிட்டேன் 
எனக்கு அவர்  
புத்தராகவும் 
பார்க்கும் ஒவ்வொருவருக்கும் 
வேறு வேறாகவும்

எங்கோ போயிற்று

இப்படித்தான் இன்றும் 
காத்திருக்கிறேன் 
காத்திருக்க வைத்துவிட்டு 
எங்கோ போயிற்று 
இந்தக் காலம்

Friday, September 21, 2012

உனக்கல்ல

நாடோடியிடம் கேட்டேன் 
அவன் பாடிய 
பாடலின் பொருளை

என் பாடல் 
வழிகளுக்கும் 
எனக்கும் 
உனக்கல்ல
சொல்லிச் சென்றான்

புதுக் கனவு

உதிர்ந்த கனவின் 
வண்ணம் 
நினைவுச் சுவரில் 
எடுத்து வரையலாம் 
புதுக் கனவை

கோரிக்கை

சைத்தானிடம் 
சமரசம் செய்துகொள்ள 
விரும்பினேன் 
அது என்னை 
சைத்தானாகச் சொல்லி 
முதல் கோரிக்கை வைத்தது

சொல்லுதல்

கால் நனைக்கும் 
அலையை 
நட்பென்றும் 
சொல்லலாம் 
ஞாபகம் என்றும் 
கொள்ளலாம்

Wednesday, September 12, 2012

எது

வருகிற வழியில் 
வருகிற வரியில் 
வழி எது
வரி எது

வாசனை


நீ அனுப்பிய புத்தகத்தில் 
எதோ ஒரு பக்கத்தில் 
உன் வாசனை இருப்பதை 
உணர்ந்தேன் 
அது எந்தப் பக்கம் என்று 
தேடித் தேடி 
புத்தகமே வாசனையாக 
மகிழ்ந்தேன் 

Sunday, September 02, 2012

ரப்பர் துண்டு

ரப்பர் துண்டிடம் கேட்டேன் 
எத்தனை அழித்திருப்பாய் 
உடனே சொன்னது 
அழித்தது நினைவிலும் 
அழிந்து போனது

குடை மனது

நனைந்தவன் சொன்னான் 
உடல் 
மழையைக் குடிக்கிறது 
என் குடை மனதுக்குப் 
புரியவில்லை

நிசப்த ஆணிகள்

நிசப்தத்தை ஆணிகளாக்கி 
என்னை 
அறைந்து கொண்டேன் 
அமைதியாக 
ரத்தம் வழிவதைப் பார்ப்பது 
அழகாக இருக்கிறது