Saturday, May 31, 2014

ஒரு பெண்

வலிக்கு கண்ணீரால்
மருந்து பூசிக்கொண்டிருந்த
ஒரு பெண்ணைக் கண்டேன்
எதுவும் செய்ய முடியாமல்
மெளனமாய் பார்த்தேன்
புன்னகைத்தேன்
உன் புன்னகையும்
இப்போது என் புண்ணுக்கு
மருந்தாகி விட்டது
எனச்சொல்லி சிரித்தாள்

Friday, May 30, 2014

கண்ணீரின் உப்பு

காலை ஒளி பூக்க
கண்ணாடியை
சரி செய்து
தேநீர் அருந்தியபடி
செய்தித்தாள் வாசிப்பவர்
விபத்து
பாலியல் வன்முறை
கொலை
தற்கொலை
குழந்தை மரணம் என
பக்கங்களை
கடந்து போகிறார்
கடைசி சொட்டுத் தேநீரில்
கண்ணீரின் உப்பு
கரிக்கிறது

Thursday, May 29, 2014

ஒரு சித்திரம்

அந்த மின்விசிறி
அவளுக்கு மிகவும் பிடிக்கும்

அதை ஒரு
தொங்கும் கவிதையைப் போல ரசிப்பாள்

சுழலும் ஓவியம் போல பார்ப்பாள்

அது தரும் காற்று
தன்னோடு பேசுவது போல உணர்வாள்

பெஞ்ச் மேல் ஏறி நின்று
குதிகால் தூக்கி
எட்டிப் பிடிக்கும் குழந்தையைப் போல
அதை அழகாய் துடைப்பாள்

அப்போது ஒரு பாடலை முணுமுணுப்பாள்

குளிர் காலத்தில்
மின் விசிறி ஓய்வெடுக்கும்

ஓடாத அதன் மெளனம்
அவளை நிம்மதி
இழக்கச் செய்யும்

ஒரு முறை பழுதடைய
உடனே போன் செய்து
எலக்ட்ரீஷியனை
வர வைத்து
சரி செய்து
ஓடியவுடன்
முகம் துடைத்து
பெருமூச்சு விட்டாள்

கனவில் வரும் அம்மாவின்
கை விசிறி போல
இதன் மீதும்
அவளுக்குப் பிரியம் அதிகம்

மின்விசிறிப் பற்றி
சின்ன சின்ன கவிதைகளை
எழுதி வைத்திருக்கிறாள்

உன் காற்றைப் போல
நானும் மறைந்து போவேன்
என்ற வரியை
ஆழமாய் முணுமுணுத்தபடியே
ஒரு மழை இரவில்
அந்த மின்விசிறியில்
தொங்கிப் போனாள்



Wednesday, May 28, 2014

சொற்கள்

சொற்கள்
பாதையானதா
வாக்கியமானதா
வாக்கியத்திடம் கேட்டேன்
பாதை என்றது
பாதையிடம்  கேட்டேன்
வாக்கியம் என்றது 

Tuesday, May 27, 2014

சாய்ந்திருக்கும் சைக்கிள்

சுவரில்
சாய்ந்திருக்கும் சைக்கிள்
ஓவியம் போலிருக்கிறது
விட்டவர் வந்து
எடுத்துப் போக
எனக்கும் சுவருக்கும்
தேவைப்படுகிறது
வேறொரு ஓவியம்

Monday, May 26, 2014

இந்த அறையில்

இந்த அறையில் 
நீங்கள் என்னோடு 
பேசிக் கொண்டிருக்கிறீர்கள் 
ஆனாலும் ஒளிந்திருந்து 
வேறு எதையோ 
கேட்கவும் பார்க்கிறீர்கள்

Wednesday, May 21, 2014

சாம்பல்

மின் மயானத்தின் 
வெளியே 
காத்திருந்த போது 
என் உள்ளங்கையில் 
கொதித்து அடங்கியது
என் சாம்பல்

பொய்கள்

கதவடைக்கப்பட்ட அறையில் 
எல்லா நாற்காலிகளிலும் 
பொய்கள் அமர்ந்திருந்தன 
நின்றிருக்க விரும்பாமல் 
சாவி துவாரத்தின் வழியே 
உண்மை வெளியேறியது

Monday, May 19, 2014

பெரு வனம்

மகா கற்பனையில் 
ஒரு பெரு வனத்தை 
உருவாக்குகிறீர்கள் 
துளி ஒளி கூட 
விழாத வனம் அது 
அதனுள் போகிறீர்கள் 
ஏதாவது விலங்குகளால் 
வேட்டையாடப்படுவோம் 
என்று பயப்படுகிறீர்கள் 
பெயர் தெரியாத 
விலங்கொன்று அடிக்க 
இறந்து போகிறீர்கள் 

விழித்திருப்பவன்

விழித்திருப்பவன்
இரவை ஒரு
சிகிரெட்டைப் போல
பிடித்துக் கொண்டிருக்கிறான்
என்ற வரியை
நள்ளிரவில் தொடங்குகிறேன்
விடியலைக் கீறி
வெளிவரப் பார்க்கின்றன

மற்ற வரிகள்

Thursday, May 15, 2014

உள்ளே என்ன நடக்கிறது

உள்ளே என்ன நடக்கிறது
என்ற வரியை
வைத்துக் கொண்டு
நீண்ட நேரமாக
வெளியில் இருக்கிறேன்
உள்ளே செல்ல முடியாமல்

மலையின் கருணை

மலை உச்சி 
சொன்னது 
உன் தற்கொலையின் 
ஆழத்திற்கு 
என்னைக் கொண்டு போகப் 
பார்க்கிறாயே 
மலையின் கருணைக்கு 
நன்றி சொல்லி விட்டு 
இறங்கிப் போனான்

Wednesday, May 14, 2014

சரியான நதிகள்

மீன் தொட்டியிலிருந்து 
கடலுக்குப் 
போகும் வழியில் 
சரியான நதிகள் 
இருக்க வேண்டும் என்று 
வேண்டிக் கொள்கின்றன மீன்கள்

Tuesday, May 13, 2014

புகை

நான் புகை 
சித்திர தரிசனம் 
எனக்கில்லை

கதையிலிருந்த பாறை

கதையிலிருந்த பாறையை 
எல்லோரும் 
தள்ளிக் கொண்டிருந்தார்கள் 
பக்கங்களில் 
பறந்து கொண்டிருந்த 
பட்டாம் பூச்சி 
தூக்கிக் கொண்டு 
போய் விட்டது

Saturday, May 10, 2014

கல் புத்தகம்

எனக்குள் சிலைகள் 
எதுவுமில்லை 
நான் கல் புத்தகம்
வேண்டுமானல்
நீங்கள் படிக்கலாம் 
என்றது பாறை 
எப்படி புரட்டிப் படிப்பது 
என்று யோசித்தபடி 
பார்த்துக் கொண்டிருந்தேன்

Tuesday, May 06, 2014

பறந்து கொண்டிருக்கிறேன்

என்னிடம் 
அதிகமான ஆச்சரியக் குறிகள் 
இருக்கின்றன
உங்களிடம் 
அதிகமான கேள்விக் குறிகள் 
இருக்கின்றன
நான் பறந்து கொண்டிருக்கிறேன்
நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்

Saturday, May 03, 2014

நேற்றைய புன்னகை

நேற்றைய 
என் புன்னகை 
இன்றும் கிடைக்குமென்று 
வந்திருக்கிறீர்கள்
என் உதட்டில் 
கம்பளிப் பூச்சி 
ஊர்ந்து கொண்டிருப்பதைப் 
பார்க்கிறீர்கள்
என்ன சொல்வதென்று 
தெரியாமல் 
அவஸ்தையுடன் புன்னகைத்துப் 
போகிறீர்கள்