Monday, March 29, 2010

வித்தை

பார்த்துக் கொண்டே
இருந்தது மொழி
தன்னை வைத்து
வித்தை காட்டுபவனிடமிருந்து
எப்படி விடுபடுவதென

Wednesday, March 24, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

61-

கணக்கு சரியாகி விட்டது
யாரும் கண்ணீர்
சிந்த வேண்டாம்

கேள்விக்குறி
தூக்குக் கயிரானது

மரணம்
விடையானது

அவ்வளவுதான்

62-

கண்மூடிப் பார்க்கிறேன்
முன்கணப் பார்வையில்
விடுபட்டுப் போனவைகளை

முன்பாகவே

பிடிவாதமாய்
என்னைப் பார்க்க
நனைந்து வந்திருந்தாய்

அறைக்குள் நீ
கொண்டு வந்த மழை
கொட்டிக் கொண்டிருந்தது
உன் பிரியங்களை
நீ சொல்வதற்கு
முன்பாகவே

Tuesday, March 23, 2010

உச்சத்தில்

உச்சத்திலிருந்த
குடிகாரன் சொன்னான்

நான் நடுக்கடலில்
கிணறு தோண்டுகிறேன்

அருகில் ஆடிய
மற்றவன் சொன்னான்

நீ மூழ்கிப்போனால்
உன்னைக் காப்பாற்ற
நீச்சல் பழகுகிறேன்

நடந்து போன பாதை

நடந்து
கடந்து
களைத்து
நடக்கப் போவது
நினைத்து
உறங்கிப்போனவனை
எழுப்பாமல்
அவனுள்
போனபடி
பாதை

Sunday, March 21, 2010

நிசப்தத்தின் கோடு

நிசப்தத்தின் கோடு
எனப் பெயரிட்டேன்

ஊர்ந்து திரும்பிப்போனது
பேனாவிற்குள்

தாளிலிருந்தது நிசப்தம்
கோட்டின் தயவின்றி

அனுபவ சித்தனின் குறிப்புகள்

56-

நான் கடவுளானது தெரியாமல்
என்னை மனிதனாகப்
பார்த்துக் கொண்டிருந்தார் கடவுள்

அவர் மனிதரானது தெரியாமல்
கடவுளாக பார்த்துக் கொண்டிருந்தேன் நான்

57-

வாருங்கள்
நம் தேடுதல் இயந்திரத்தை
கடலில் எறிந்து விட்டு
தொலைந்து போவோம்.

58-

எறும்பு வரிசையை
பார்த்தபடியே
கலைந்து போகும் எண்ணங்கள்.

59-

காற்றின் எடைக்கேற்ப
அசைகிறது
தராசுத் தட்டு

60-

இந்த சவப்பெட்டி
உங்கள் அளவுக்கு
சரியாக இருக்கிறதா

ஒரு முறை
படுத்துப் பார்த்து
தெரிந்து கொள்ளுங்கள்

அதுபோல் செய்துவிட்டு
சிரித்தபடி யோசித்தான்

சரியாக இருந்தது
மரணத்தின் ஒத்திகை

Thursday, March 18, 2010

பார்த்தல்

கரையில் அமர்ந்திருந்தனர்
இருவரும்

ஒருவன்
மீன் நீந்துவதைப்
பார்த்துக் கொண்டிருந்தான்

இன்னொருவன்
நதி நீந்துவதைப்
பார்த்துக் கொண்டிருந்தான்

Sunday, March 14, 2010

ஆப்பிள் விளையாட்டு

காருக்குள்
ஆப்பிளை தூக்கிப் போட்டு
விளையாடும்
அப்பாவும் மகளும்

சிக்னல் விழுவதற்குள்
வெளியே வந்து
விழாதா என பார்க்கிறாள்
வெயிலைத்
துடைத்தபடி சிறுமி

Monday, March 08, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

54-

கடைசியாக
என்ன சொல்ல
விரும்புகிறாய்

வலி கொல்கிறது
இன்னொரு
குண்டு பாய்ச்சி
உடனே
கொன்று விடு

55-

மணல் வெளியில்
வெயில் பாம்பு
கால் மிதிக்க
நெளியும் நழுவும்

Friday, March 05, 2010

ஜன்னல் விழியில்

அப்பா வானவில் பல
நிறத்துல இருக்கு
மழை மட்டும் ஏன் ஒரே
நிறத்துல பெய்யுது
பல கலர்ல பெய்யாதா

கேள்வியின் நிறங்கள்
அப்பாவினுள் இறங்க
பதில் தேடியபடியே
குழந்தையை சமாளிக்கிறார்

ஜன்னல் விழியில்
ரசிக்கிறது மழை
இருவரையும்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

50-

அதுவாக
போகிறது ஆமை
நாம்தான்
மெதுவாக என்று
குறியீடு செய்கிறோம்

51-

உதிர்ந்து கொண்டிருந்தது
மரம்
விழுந்து முடித்தது
இலை

52-

அவர்கள்
கண்ணீரோடு வந்தார்கள்
கடுமையான
சோதனைகளுக்குப் பிறகு
கவலை சத்து
குறைவாக இருக்கிறதென்று
திருப்பி அனுப்பபட்டார்கள்

53-

தூக்கி எறிந்த துப்பாக்கி
சொல்லிக் கொண்டே விழுகிறது
கொன்றவர்களின் பெயரை