Sunday, September 26, 2010

வானத்தில்

வானத்தில் படுத்திருந்தேன்
எழுந்தபோது ஒட்டியிருந்தன
ஒன்றிரண்டு நட்சத்திரங்கள்
உதறிவிட்டுத் திரும்பினேன்

Saturday, September 25, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

186-

கனவில் மின்னியது
அன்பின்
சொல் ஒன்று

187-

திரும்பிப் பார்த்தேன்
வயதுகளின் பாதையில்
ஓடிவந்தபடி ஒரு குழந்தை

188-

வானம் கூப்பிட்டும்
போகவில்லை
கனவில் விழுந்த நட்சத்திரம்

189-

நேரம் இல்லை
நினைவுகளில்
சந்திப்பவர்கள்

Thursday, September 23, 2010

சிலருக்கு...

உங்களுக்கு என்ன
வேண்டுமானாலும் கேளுங்கள்
அதைத் தருகிறேன் என்றார்
ஒன்றுமே இல்லாதிருந்தவர்

விநோதமாக
அவரைப் பார்த்து
கடந்தனர் எல்லோரும்

சிரித்தபடியே
யாருக்கும் எதுவும் தேவையில்லை
நானே வைத்துக் கொள்கிறேன் என்றார்

கடந்து போனவர்களில் சிலர்
அவர் சொன்னதைச்
சொல்லிப் பார்த்துக் கொண்டனர்

உங்களுக்கு என்ன
வேண்டுமானாலும் கேளுங்கள்
அதைத் தருகிறேன்

சிலருக்குத் தந்தது போலிருந்தது

சிலருக்குப் பெற்றது போலிருந்தது

அனுபவ சித்தனின் குறிப்புகள்

183-

என்போல்
ஒற்றைக் கிளையில்
மதிய காகம்

184-

கதை சொன்ன குருவி
பறந்து போனது
என்னையும் கதாபாத்திரமாய்
எடுத்துக் கொண்டு

185-

சுற்றிலும் நாடகங்கள்
என் வேடத்தை
பலப்படுத்த வேண்டும்

Saturday, September 18, 2010

காற்றில் தைத்த சட்டை

பறந்து கொண்டிருந்த
சிறுமி சொன்னாள்
நான் காற்றைத் தைத்து
சட்டையாகப் போட்டிருக்கிறேன்

ஒரு பறவையின் லாவகம்
பறத்தலில் தெரிந்தது

அவள் சொன்ன
காற்றுச் சட்டை
பிம்பத்திற்குள் சிக்காமல்
நழுவியது

மறுநாள்
பள்ளிக்குச் சென்ற சிறுமியை
வழியில் பார்த்துக் கேட்டேன்
காற்றுச் சட்டை
எங்கே என்று

அது காற்றிலேயே இருக்கிறது
நான் பறக்க நினைக்கும்போது
அதில் புகுந்து கொள்வேன்
சிரித்து சொல்லியபடியே
ஓடிப்போனாள்

ஓடினாளா பறந்தாளா
தெரியவில்லை

(கிருத்திகாவிற்கு)

Thursday, September 16, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

182-

வன்மம் வளர்க்கும் விலங்கு
உடலெங்கும் திரிகிறது
என் பேர் சொல்லி

Monday, September 13, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

181-

யாருமில்லாத கூண்டின்
ஜன்னலோரம் அமர்ந்து
என் பாவங்களைச்
சொல்லிக் கொண்டிருந்தேன்

மணிசத்தத்தில்
நான் சொல்வது
கேட்காமல் போய்விடுமோ
என்ற அச்சம் வேறு

குரலில்
சத்தம் கூடியது

பாவங்களை
சொல்லிக்கொண்டே வர
சேர்ந்து கொண்டன
மறைந்து போனவைகளும்

யாருமில்லாத கூண்டின்
ஜன்னலோரம் அமர்ந்திருக்க
என் பாவங்கள் என்னைச்
சொல்லிக் கொண்டே வந்தன

மூச்சுவாங்கிய நிலையில்
பாவங்கள் சொல்லி
முடிக்கப் பட்டனவா
என்று படபடத்தபோது
கூண்டு மெல்ல
சவப்பெட்டியாகி
என்னை
விழுங்கிக் கொண்டது

Sunday, September 12, 2010

ஓடியவர்கள்

ஓடி விட்டனர்
மழையை ஏமாற்றாமல்
நனைந்தது குழந்தை

இசையின் பெயர்

மெல்லிய விசிலுடன்
சென்ற இளைஞனிடம்
அது பற்றிக்
கேட்க நினைத்தேன்

அவனைத் தடை
செய்ய விரும்பாமல்
நம்பிக்கை இசை
என்று பெயர்
சூட்டிப் பார்த்தேன்
சரியாக இருந்தது

அப்போது
என் உதட்டில்
ஊர்ந்த அவன்
விசில் சத்தம்
அதை ஆமோதித்தது

அனுபவ சித்தனின் குறிப்புகள்

180-

யாரிடமும்
சொல்ல முடியாத
ரகசியத்தை
சொல்லிக் கொண்டிருந்தேன்
என்னிடம்

Saturday, September 11, 2010

குழந்தையின் ஓவியங்கள்

நான் குழந்தையின் கையிலுள்ள
பென்சிலாக மாறினேன்

குழந்தை வரைந்தது

கூர்ந்து
கவனித்து
முகத்தை
முன்கொண்டுபோய்
அதுவே
ஒரு ஓவியமாகி
வரைந்தது

குழந்தையின்
கண்களுக்கும் உதட்டுக்கும்
இடையில் பரவியது
வரைந்து முடித்த
புன்னகை

பின் பென்சிலை
முத்தமிட்டு
கீழே வைத்து
வேறு ஒன்றை எடுத்து
இன்னொரு உலகத்திற்கு
செல்லத் தயாரானது

வரைந்த தாளிலிருந்து
வெளியேறினேன் நான்
குழந்தைக்கு நன்றியை
வண்ணங்களாகத்
தூவிவிட்டு

Thursday, September 09, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

177-

என்னைத் திறந்து
வெளியேறிய கனவில்
கலந்திருந்தன
கையள்ளக்கூடிய
கவிதைகளும்

178-

அழவேண்டும்
போலிருக்கிறது
எனக்கும் தெரியாமல்

179-

ஒளி வீசும் வார்த்தைகளால்
இருளை எழுதிக்கொண்டிருந்தவனை
ஒரு இரவில் சந்தித்தேன்

நான் இரவிலிருந்தேன்
அவன் பகலில் இருந்தான்

Tuesday, September 07, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

173-

அறையிலிருந்த
ஒவ்வொருவரும்
தங்களுக்குள் ரகசியமாக
சொல்லிக் கொண்டார்கள்
என்னைத் தவிர
எல்லோரும்
இறந்து போவார்கள்

174-

உடலில் வசிக்கிறது
உயிர்
உயிரில் வசிக்கிறது
மரணம்

175-

கை அள்ளிய
இருளை இறுக்க
மூச்சற்றுப் போகும் பயம்

176-
உங்களது பாத்திரம்
நிரம்பி வழிவது குறித்து
உங்களுக்கு ஆனந்தம்

எனது பாத்திரம்
நிரம்பாமல் வழிவது குறித்து
எனக்குப் பேரானந்தம்

Monday, September 06, 2010

நானும் நானும்

தூங்கும்போது
வந்த கனவில்
தற்கொலை செய்திருந்தேன்
விடிந்தபின்
இறந்துகிடந்த கனவை
தூக்கிப் போட்டுவிட்டு
வேலையைப்
பார்க்கத் தொடங்கினேன்

கேட்டபடி

அவர்கள் கேட்டபடி
திருத்தி எழுதிய கவிதையில்
ஊனம் மறைந்திருந்தது
உண்மை ஊனமாகி இருந்தது