வழிகள் என் முகவரிகள் * மழையில் நனைவது எப்போதும் இருக்கும் மழை நீர் அருந்துவது எனக்குப் பிடிக்கும் * இளைப்பாறும் போதெல்லாம் நான் நிழலுடன் பேசுகிறேன் மனம் மரத்துடன் பேசுகிறது * என் பயணம் அடைதலில் இல்லை தொடர்தலில் இருக்கிறது * வெகுதூரம் வந்த பின்னும் வெகு தூரம் இருக்கு இன்னும் இந்த வரி அதிகம் உறங்க விடுவதில்லை * வேகமான நடையில் இமை மூடித் திறக்க முடிகிறது தூக்கம் * கால்களுக்கிடையில் முடிகின்றன நெடும் பயணத்தின் சிறு பயணங்கள் * காதுகளை நிரப்புகிறது காற்றின் பாடல் அதில் நான் கலந்து போன ஒரு சொல் * கை வீசி நடக்கிறேன் பிரபஞ்சத்தை பின்னுக்குத் தள்ளி பிரபஞ்சத்தோடு கை கோர்த்து பிரபஞ்சத்தை எதிர்கொண்டு * 'தி இந்து'வில்(மே 10,2017) தேநீர் கவிதை பகுதியில் வெளியானது.