ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Tuesday, November 27, 2012
மலர்ந்தும் உதிர்ந்தும்
மலர்தல் உண்மை
உதிர்தல் உன்னதம்
இந்த வரிகளைத்
தந்து விட்டுப் போனவரைத்
தேடிக் கொண்டிருக்கிறேன்
மலர்ந்தும்
உதிர்ந்தும்
Friday, November 23, 2012
வரியின்அடியில்
இந்த
வரியின்
அடியில்
ஓடுகிறது நதி
இந்த வரியின் மேல்
விரிகிறது மலை
மலை உச்சியிலிருந்து
நதியின் ஆழத்தில்
குதிக்கிறேன்
வேறு வரிகளோடு
வெளி வர
Thursday, November 22, 2012
இடதும் வலதும்
என் வலது பக்கம்
பயமும்
இடது பக்கம்
தைரியமும்
என் இடது பக்கம்
பயமும்
வலது பக்கம்
தைரியமும்
என் இடது பக்கம்
பயமும்
வலது பக்கம்
பயமும்
என் இடது பக்கம்
தைரியமும்
வலது பக்கம்
தைரியமும்
என் வலது பக்கம்
வலதும்
இடது பக்கம்
இடதும்
Wednesday, November 14, 2012
அனுபவ சித்தனின் குறிப்புகள்
973-
இவ்வளவு
கடுமையானதா
எழுதுவது
இவ்வளவு
எளிமையானதா
எழுதியது
974-
வளைவின்
முனைகளில் நாம்
வளைவையும்
நம்மையும்
நேராக்கும் முயற்சியில்
975-
உங்கள் முதுகில்
பாய்ந்திருக்கிறது
என் கத்தி
வீரத்திற்கான பரிசு
என் கைகளில்
976-
சுவாரஸ்யமான போட்டி
முந்திக்கொண்டிருக்கும் என்னை
முந்த விரும்பும் நான்
977-
ரயில் பெட்டிகளை
வரைகிறாள் குழந்தை
அவள் பென்சில் வழியே
ஓடிக்கொண்டிருக்கிறது ரயில்
978-
பழகிய பறவையின்
சிறகை வருடினேன்.
வானத்தின் வாசம் வீசியது
979-
இருள் மழை
கண்கள் மூடி
நனைகிறேன்
980-
எங்கிருக்கிறது
இல்லாதது
981-
மௌனத்தின்
ஆழத்தில்
ஆழத்தின்
மௌனம்
Tuesday, November 13, 2012
வரியில்
புல் விரிந்து
வனமாகும்
என்று எழுதிய வரியில்
நானே
புல்லாய்
வானமாய்
Sunday, November 11, 2012
பொய்கள்
உண்மைக்குள்
நுழையவே விருப்பம்
கால்களைச் சுற்றி
பாறாங்கற்களாய்
அழுத்துகின்றன பொய்கள்
மிதக்கும் நிலவு
இந்த ஓடையில்
மிதக்கும் நிலவோடு
எனக்கொன்றும்
இல்லை பேச
பார்ப்பதைத் தவிர
Saturday, November 10, 2012
ஆப்பிள் மரம்
நான் ஆப்பிள் மரம்
உங்களுக்கு எத்தனை
ஆப்பிள் வேண்டும்
கேளுங்கள் தருகிறேன்
சொன்னாள் குழந்தை
ஆப்பிள் மரம்தான் வேண்டும்
எனச் சொல்லி
அவளைத் தூக்கி கொஞ்ச
விடாமல் சிரித்தாள்
அவள் சிரிப்பில்
உதிர்ந்து கொண்டே இருந்தன
ஆப்பிள்கள்
Friday, November 09, 2012
கூலி
அய்யா என் வியர்வை
கேட்கும் கூலியை
உங்களால்
கொடுக்க முடியாது
நான் கேட்கும்
கூலியையாவது கொடுங்கள்
கொடுக்காவிட்டால்
வியர்வை கேட்கும்
கூலியைத் தர
வேண்டி வரும்
Monday, November 05, 2012
சித்திரம்
என்னால்
புரிந்து கொள்ள முடியாத
ஒரு சித்திரத்தை
வரைந்து வைத்திருக்கிறாய்
ஆனாலும்
உன் கோடுகள் வழியே
முழுதாய்ப் பயணித்து
திரும்பி விட்டேன்
Friday, November 02, 2012
மன்னிக்கவும்
உன் தலைக்கு வெளியே
உன் எண்ணம்
எட்டிப் பார்க்கிறது
அது ஆபத்து
உள்ளே அனுப்பு
அது ஏணியும் கூட
நான் உயரம்
ஏறிச் செல்ல
நீங்கள் சித்தரிக்கும் கருத்தில்
உங்கள் பிம்பம்
பலமற்றதாகத் தெரிகிறது
மன்னிக்கவும்
திரும்பிச் செல்கிறேன்
மலை உச்சியில்
தற்கொலையைத் தள்ளிவிட்டு
திரும்பிச் செல்கிறேன்
கடந்து போகும்
காற்றில் இருக்கிறது
என் நம்பிக்கை
முணுமுணுக்கும்
பாடல் வரிகள்
Newer Posts
Older Posts
Home
View mobile version
Subscribe to:
Posts (Atom)