Saturday, April 30, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

456-

நான் எனும் சொல்
நான் சொல்ல
மொழியாயிற்று

457-

முன் கனவை நோக்கி
நான் சென்றேன்
பிற கனவுகள் வந்தன
எனை நோக்கி

458-

நான் வரைந்த பறவை
தான் அமர
வரைந்தது கிளையை

459-

இறந்த கால பிழையை
நிகழ்கால ரப்பரால்
அழிக்கப்பார்த்தேன்
முடியவில்லை
தேய்கிறது எதிர்காலம்

Thursday, April 28, 2011

விட்டு வந்த வார்த்தை

வனத்தில்
விட்டு வந்த வார்த்தை
அடுத்த முறை
சென்றபோது சொன்னது

நான் இங்குதான்
முளைத்திருக்கிறேன்
கண்டுபிடி என்று

திரும்பும் வரை
தெரிந்துகொள்ள முடியவில்லை

வெளியேறியபோது
சிரிப்பு சத்தம் வந்தது

அது வனத்திடமிருந்தா
வார்த்தையிடமிருந்தா
தெரியவில்லை

தெரியாது

நீங்கள் நல்லவர்தான்
உங்களுக்கு எதுவும் தெரியாது

நாங்கள் கெட்டவர்தான்
எங்களுக்கு எதுவும் தெரியாது

மக்கள் அப்பாவிகள்தான்
அவர்களுக்கு எதுவும் தெரியாது

ஒரு பூ

எப்போதும் போகும்
சாலை ஓரத்தில்
இப்போது புதிதாய்
பூத்திருக்கிறது
பெயர் தெரியாமல்
ஒரு பூ

Monday, April 25, 2011

இன்னொரு குழந்தை

பால்கனியிலிருந்து
நடந்துபோகும்
என்னைப் பார்த்தபடி
கை அசைக்கிறது
ஒரு குழந்தை
கண் மலர

விழுந்து இறந்துபோன
நீச்சல் குளத்திலிருந்து
மேலெழும்பி வந்து
கை அசைத்துப் போகிறது
இன்னொரு குழந்தை
கண்ணீர் உதிர

(நந்தனாவின் நினைவிற்கு)

Sunday, April 24, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

453-

வான்வெளியில்
பறந்தடங்கும்
சுட்டு வீழ்ந்த
பறவையின் சத்தம்

454-

பொறுமையின்
ஆழ்வெளியில்
படைப்பின் வெளிச்சம்

455-

கண் மூடிப் பார்த்தேன்
கண் திறந்து
என்னை பார்த்த
உறக்கத்தை

தாகம் உடையும்

காணோம் மழையை
வானம் அனுப்பிய
ஒற்றைத் துளி மட்டும்
வந்து கொண்டிருக்கிறது
தாகம் உடைக்க

வெள்ளை சுவர்

இந்த வெள்ளை சுவரில்
யாரும் எதுவும்
வரைய வேண்டாம்
இதுவே
ஓவியம் போலிருக்கிறது

Friday, April 22, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

450-

பிடிபடும்
நழுவும்
மாயமீன்
என் நீச்சல்
அழித்து

451-

நகம் வெட்ட
உடைந்து விழுந்தது
ஒளிந்து கிடந்த இருள்

452-

கண்ணாடி முன்
நிற்கிறேன்

சிறு பொய்யாய்
பிம்பத்தில்
ஊர்ந்து செல்வதைப்
பார்த்தபடி

Wednesday, April 20, 2011

ஒரு மழை நாளில்

ஒரு மழை நாளில்
பிரிந்தோம்

மழை நாட்கள்
நம்மை விட்டுப்
பிரியவே இல்லை

Tuesday, April 19, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

446-

இல்லாத எல்லையில்
இருப்பது
எல்லை இல்லாதது

447-

யாரோ விட்டுப்போன வியர்வை
மைல்கல் மேல்
உறைந்து போயிருந்தது
அதிலிருந்தன திசைகள்
கடலளவு கைகளுடன்
வழிகாட்ட

448-

போதையில்
வழி தொலைத்தவன்
தன் கால்களிடம் கெஞ்சுகிறான்
வழி பார்த்து
போகச் சொல்லி

449-

ஒரு துளியே
கடலாச்சு

Friday, April 15, 2011

இரண்டு வரிகளுக்கிடையில்

இரண்டு வரிகளுக்கிடையில்
ஓடுகிறது ஒரு நதி
எரிகிறது ஒரு காடு
சாம்பலாகிறது ஒரு கடிதம்
பேசுகிறது ஒரு பொம்மை
சிரிக்கிறது ஒரு குழந்தை
இறக்கின்றன சில வார்த்தைகள்

இரண்டு வரிகளுக்கிடையில்
தெரிகிறது ஒரு சிற்றூர்
கேட்கிறது யாழிசை
பறக்கிறது ஒரு பட்டாம்பூச்சி
நகர்கிறது ஒற்றை மண் புழு
தெறிக்கிறது ஒரு ஊற்று
அழைக்கிறது ஒரு வனம்

இரண்டு வரிகளுக்கிடையில்
ஒளிர்கிறது ஒரு கலங்கரை விளக்கு
வழி அடைகிறது ஒரு கப்பல்
கையசைக்கின்றனர் சில பயணிகள்
விழுகிறது ஒரு அருவி
பெருமூச்சு விடுகிறாள் ஒரு மூதாட்டி
உதிர்கின்றன சில கண்ணீர்த் துளிகள்
கண் திறக்கிறது ஒரு சவப்பெட்டி

இரண்டு வரிகளுக்கிடையில்
மின்னஞ்சலுக்கு பழக்கப்பட்ட விரல்கள்
நாளுக்குத் தயாரான புன்னகை
பதுங்கியுள்ளனர் சில தீவிரவாதிகள்
புதைந்துகிடக்கின்றன சில துப்பாக்கிகள்
மறைந்திருக்கின்றன சில மர்மங்கள்

இரண்டு வரிகளுக்கிடையில்
காதலை மீட்டெடுக்கிறான் ஒருவன்
குழந்தைக்கு பெயர் யோசிக்கிறாள் ஒருத்தி
தினசரியில் தன் மரண அறிவிப்பை பார்க்கிறான் பயந்தவன்
துரோகத்தின் வலிகளை விழுங்குகிறான் இழந்தவன்

இரண்டு வரிகளுக்கிடையில்
தற்கொலையைத் தள்ளிவைக்கிறான் யோசிப்பவன்
மீன்களை வரைபவள் பொறி போடுகிறாள்
தூசிமுட்டித் திணறுகிறது திருமண ஆல்பம்

இரண்டு வரிகளுக்கிடையில்
தப்பித்தவன் முகமூடியை மாற்றிக்கொள்கிறான்
கிளம்புகிறது ஒரு மலைப்பாதை ரயில்
கனவைத் திறக்கிறாள் ஒரு சிறுமி
குளிரில் நடுங்குகிறது இரவு
வார்த்தைகளை நனைக்கிறது மழை

இரண்டு வரிகளுக்கிடையில்
தனிமையை உடைக்கிறது கனவு
போதையில் ஏறுகிறான் வழி மறந்தவன்
நேரம் கொறித்தபடி பார்வையாளன்
தனக்குள் நடந்து போகிறது நெடுஞ்சாலை

இரண்டு வரிகளுக்கிடையில்
எதுஎதுவோ நிகழ்கிறது
எதுஎதுவோ மாறுகிறது
எதுஎதுவோ தொடர்கிறது
எதுஎதுவோ பிரிகிறது
எதுஎதுவோ அழிகிறது

இரண்டு வரிகளுக்கிடையில்
முடிவைத் தேடுகிறது இந்தக் கவிதை

Wednesday, April 13, 2011

வலிகள்

இரவு தன் வலியை
கனவிடம் சொன்னது

கனவு தன் வலியை
கண்ணீரிடம் சொன்னது

கண்ணீர் தன் வலியை
பூமியிடம் சொன்னது

பூமி தன் வலியை
வேரிடம் சொன்னது

வேர் தன் வலியை
பூவிடம் சொன்னது

பூ தன் வலியைச் சொல்லாமல்
உதிர்ந்து போனது

Tuesday, April 12, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

445-

நான் விழுந்ததைப் பார்த்தவர்
சிரித்துக்கொண்டே போனார்

எழுந்ததைப் பார்த்தவர்
முறைத்துக்கொண்டே போனார்

விழுந்ததற்கும் எழுந்ததற்கும்
இடையில்
நடந்து சென்றதைப் பார்த்தவர்
கைதட்டிக்கொண்டே போனார்

Saturday, April 02, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

437-

வெட்டியவன் சொன்னான்
உன் பாவங்களை
உன் ரத்தத்தால் கழுவுகிறேன்

அதிர்ச்சியுடன் எழுந்தேன்
கனவுகள்
உண்மை பேசுமா என்ன

438-

தீரா நான்
தீரா என்னில்
தீரா வேட்கையுடன்

439-

அலைந்து திரிந்து
திரிந்து அலைந்து
வந்து சேர்ந்தேன்
அலைந்து திரிய
திரிந்து அலைய

440-

கனவு அறுத்த தூக்கங்கள்
உதிர்ந்து கிடக்கின்றன
கண்ணுக்குள்

441-

மூழ்கியவர்கள் பட்டியலில்
என்னையும் சேர்க்க
முயற்சிக்கிறீர்கள்

கரை சேர்ந்த
என்னைப் பார்த்தபடியே

442-

விளக்கணைகிறேன்
இருளுடன்
பேச வேண்டும்

443-

மின்னல் ஒளி போதும்
கடக்க

மழைத்துளி போதும்
குடிக்க

444-

என் ஆழம் அறிந்தால்
உயரம் உணர்வாய்
சொன்னது மலை