Tuesday, December 31, 2013

புல்லின் காதில்

புல்லின் காதில் 
ரகசியமாய் 
அன்பை சொன்னேன் 
அமைதியாக
கேட்டுக் கொண்டது 
அமைதியில் 
அன்பிருந்தது

Sunday, December 29, 2013

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1070-

வேடத்தைக் 
கலைத்து விட்டேன்
வண்ணங்கள் 
தங்கி விட்டன

1071-

சொல்லப்படுகிற கதைகளில் 
சொல்லப்படாத கதை 
பயணிக்கவே செய்கிறது

1072-

பெயரைக் குலுக்கினேன்
பெயர்கள் 
உதிர்ந்தன

1073-

மனதின் 
மெளன வெளிகளில் 
மிதந்து போக வேண்டும்

1074-

கூண்டோடு 
பறக்குமா பறவை 
வந்த வரி 
பறந்து போனது 
கூண்டை விட்டு 

1075-

மனதின் அடியில் 
மறைத்து வைத்தேன் 
மனதை வெளியில் 
திறந்து வைத்தேன்

கதவுகள்

சில கதவுகள் 
பூட்டியே இருக்கின்றன 

நாம் காத்துக்கொண்டே 
இருக்கிறோம் 

அவர்கள் வேறு வழிகளில் 
போய் வந்துகொண்டிருக்கிறார்கள்

முடியாது

வீங்கிப் பெருத்த 
உங்கள் கேள்விக்கு 
என்னால் 
சிகிச்சை செய்யவும் 
முடியாது 
பதில் தரவும் 
முடியாது

தற்கொலை செய்து கொள்ளப்போகும் ஒருவன்

தற்கொலை செய்து கொள்ளப்போகும்
ஒருவனை
வரைந்து முடித்தேன்
மீதி இருந்த வண்ணத்தில்
அவன் முடிவை மாற்றிக்கொண்டு
திரும்ப வேண்டும் என்ற
பிரார்த்தனை கவிதையை
எழுதி வைத்தேன் 

Saturday, December 28, 2013

இரு முனைகள்

கேள்வியின் 
இரு முனைகளிலும் 
நான்தான் 
கடந்து வருகையில் 
யாரேனும் ஒருவர் 
கண்டெடுக்கலாம் 
பதில்களை 

Friday, December 27, 2013

முதலில்/இப்போது

முதலில்
நான் இல்லை

இப்போது
நான் இருக்கிறேன்

இப்போது
நான் இல்லை

முதலில்
நான் இருந்தேன் 

Sunday, December 15, 2013

நான் மட்டுமே உள்ள அறை

நான் மட்டுமே 
உள்ள அறையில் 
என்ற வரியை 
மனதால் மட்டுமே 
வாசியுங்கள் 
நீங்கள் சத்தம் போட்டு 
வாசிக்கையில் 
வேறு சிலரும் இருப்பது 
போன்ற தொனியை 
அது தந்து விடக் கூடும்

Wednesday, December 11, 2013

நடை நுட்பம்

சந்திக்க விரும்பாமல் 
வேறு வழியில் 
திரும்பி விட்டீர்கள் 
நேற்று அந்த வழியில் 
இதே நடை நுட்பத்தைத்தான் 
பயன்படுத்தினீர்கள்

Tuesday, December 10, 2013

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1061-

சற்றே ஓய்வெடு
சொற்கள்
தியானம் செய்கின்றன

1062-

என் பெயரில் 
இப்போது நானில்லை 
புனைப்பெயரில் 
ஒளிந்திருக்கிறேன்

1063-

குதிரைகள் நிற்கவில்லை 
கனவில் ஓடுகின்றன 
வரிகளுடன் 
நானும் ஓடுகிறேன்

1064-

அரச வேடம் 
அழகாக இருக்கிறது 
அதற்காக 
வாடகை கிரீடத்தை 
வைத்துக் கொண்டே 
இருக்க முடியாது

1065-

ஆழ்மனதில் 
வீசிய கல் 
மிதந்து மிதந்து 
எதையோ தேடும்

1066-

ஒட்டக மனநிலை 
எனக்குண்டு
பாலைவனம் கடப்பது 
கடினமன்று

1067-

நான் மட்டுமே 
வந்திருக்கிறேன் 
எதற்கு என்னை 
சுற்றிப் பார்த்துக் கொண்டே 
இருக்கிறீர்கள் 

1068-

இருளும் மழையுமாக 
இருக்கிறதே 
எப்படிப் போவீர்கள் 

பிரபஞ்சத்தின் 
கருணை கொண்டு 

1069-

கிளை உலுக்க 
உதிர்கின்றன சொற்கள் 
ஒவ்வொன்றும் 
வரியின் ருசியோடு 
இனிக்கிறது









Wednesday, December 04, 2013

தியானம்

அம்மணத்தில் அமர்ந்து 
தியானம் செய்கிறேன் 
ஆடைகளின் பாரம் 
கணக்கவே செய்கிறது

Sunday, December 01, 2013

என்ன செய்யலாம்

கொலைகாரர்கள் எல்லோரும் 
தப்பித்து விட்டார்கள் 
என்ன செய்யலாம் 

வா போய் 
மது அருந்தலாம்

Saturday, November 30, 2013

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1056-

இன்னும் சொல்ல வேண்டும் 
சொற்கள் இல்லை 
நானிருக்கிறேன்

1057-

பெய்யாத மழையும் 
நனைத்தது

1058-

நினைவுகளில் தற்கொலை 
செய்துகொண்டிருந்த போதே 
அவனை நீங்கள் 
காப்பாற்றி இருக்கலாம்

1059-

குருதியில் வரைந்த 
ஓவியத்தைப் பற்றிய 
குறிப்புகள் 
அதன் கோடுகளிலேயே 
இருந்தன


1060-

ஊதி 
அணைக்கப் பார்த்து 
தோற்கிறீர்கள் 
கனவுகளில் 
அசைகிறது சுடர்


Thursday, November 28, 2013

உடைதல்

உடைந்து கொண்டிருக்கிறேன் 
நீங்கள் துண்டுகளை 
எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் 
நான் என்னை 
எண்ணிக் கொண்டிருக்கிறேன் 

Monday, November 18, 2013

மறு முறை

தலைகீழாய் 
தொங்குகிறேனா
 
நேராய் 
நிற்கிறேனா 

கேள்விகளுக்கிடையில் 
ஒரு முறை 
வெளவாலாய் பறந்தேன் 

மறு முறை 
நானாய் நடந்தேன்

Tuesday, November 12, 2013

இரு வேறு ஓவியங்கள்

இதுதான் நான் என்று
நான் வரைவதும்
இதுதான் நீங்கள் என்று
நீங்கள் வரைவதும்
ஒரே வண்ணத்தில்
வரையப்பட்ட
இரு வேறு ஓவியங்கள்

Sunday, November 10, 2013

இந்தக் கதையில்

எழுதிக் கொண்டிருக்கும் 
இந்தக் கதையில் 
எவ்வளவோ கதாபாத்திரங்கள் 

நான் அவர்களுக்குப் 
புதியவனாகத் தெரிகிறேன் 

அவர்கள் எனக்கு 
புதியவர்களாகத் தெரிகிறார்கள் 

பக்கங்கள் 
கடந்து போகையில் 
எல்லோரும் பழகி விடுவோம்

Friday, November 08, 2013

வாழ்க்கைக்கு வாருங்கள்

பார்க்க கனவைப் போல இருந்தார் நண்பர் சவப்பெட்டியில் எழுப்பி வாழ்க்கைக்கு வாருங்கள் என்று சொல்லத் தோன்றியது

சாயல்

மிதந்த யானை 
பட்டாம்பூச்சியின் சாயல் 
கொண்டிருந்தது

பதில்

உங்கள் வேட்டையை 
சுவையாக்கியது 
மான் கறி 
தாய் தேடும் குட்டிக்கு 
என்ன பதில் 
வைத்திருக்கிறீர்கள்

Sunday, November 03, 2013

யாரும் கேட்கவில்லை

யாரும் கேட்கவில்லை 
அவனுக்குத் தெரியும் 
ஆனாலும் வாசிக்கிறான் 
அவன் புல்லாங்குழலில் 
ரயில் போகிறது 
ரயிலில் 
அவன் போகிறான்

என் ஒப்பனை

உங்கள் கண்களைப் பார்த்து 
என் ஒப்பனையை 
சரி செய்து கொண்டேன் 
இப்போதும் உங்களால்
கண்டுபிடிக்க முடியவில்லை

Saturday, November 02, 2013

தப்பித்தலின் வியூகம்

அவன் தப்பித்து 
வந்து விட்டான் 
பிடியுங்கள் என்றான் 
தப்பித்து வந்தவன் 
யாரைப் பிடிப்பது 
என்ற குழப்பத்தில் 
தப்பித்து ஓடினேன் 
என்னை விரட்டியவனிடமிருந்து

என் தாழ்வாரத்தில்

என் சுயநலச் சுவரில் 
காகம் எச்சமிட்டுப் போனது 
காகத்திற்கு நன்றி சொல்லி 
சுவரை இடித்து விட்டேன் 
இப்போது என் தாழ்வாரத்தில் 
பறவைகள் தானியங்கள் 
எடுத்துப் போகின்றன   

Friday, November 01, 2013

ஒளி வட்டம்

தன் தலைக்குப் 
பின்னால் இருந்த 
ஒளி வட்டத்தை 
யாரோ திருடிவிட்டார்கள் 
என்றார் நண்பர்

உங்கள் அறிவின் வெளிச்சத்தால் 
கண்டுபிடிக்க முடியாதா 
என்றேன்

இருளடைந்த கண்களால் 
பார்த்தபடி 
எதுவும் சொல்லாமல் 
நடந்து போனார்

Saturday, October 26, 2013

தண்டவாளங்களின் பிரியம்

இந்தக் காத்திருப்பில் 
தண்டவாளங்களின் பிரியம் 
மினுமினுக்கிறது 
ரயில் தாமதம் 
பெரிதாகத் தெரியவில்லை 

Thursday, October 24, 2013

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1047-

கசங்கிய சொல் ஒன்றை 
மெல்லப் பிரிக்கிறேன் 
வெளி வரும் காற்றில் 
பாடல் கேட்கிறேன்

1048-

புல்லென அசையும் 
அமைதியின் அடியில் 
நான் உதிர்ந்து கிடக்கும் 
பனித்துளி

1049-

கால்களின் புழுதியில் 
பாதை முகம் 
பார்க்கிறது 

1050-

மீட்டெடுக்க 
தொலைந்தாக வேண்டும்

1051-

கனவில் மிதந்த சொற்கள் 
அந்திக் கருக்கலில் 
பறவைகளாயின

1052-

எப்படித்தான் 
கலைத்துப் போட்டாலும் 
இதுதான் நான்

1053-

இந்த ரொட்டி 
பசியை 
அழகாக்குகிறது

1054-

ஊதிய பனித்துளி 
நதியாகி 
என்னை மூடியது 

1055-

வழி அனுப்பி 
வைத்த கண்ணீர் 
வழி சொல்லிப் போனது





Monday, October 21, 2013

நீந்துகிறது

தூண்டிலில் 
சிக்கிய மீன் 
மரணத்தில் 
நீந்துகிறது

காலம் வைத்திருக்கும் பதில்

நாம் சந்திக்கப்போகும்
அந்த நாள்
எங்கிருக்கிறது
கேட்கிறாய்
கேட்கிறேன்
கேட்கிறோம்
காலம் வைத்திருக்கும் பதில்
விரைவில்
நம் கைக்கு
கிடைக்கக்கூடும் 

Sunday, October 20, 2013

மெளனத்தின் கேள்வி

இந்த உரையாடலை 
எப்படி முடிக்கப் போகிறோம் 

இந்த உரையாடலை 
எப்படி தொடங்கப் போகிறோம் 

நமக்கிடையில் 
மெளனம் வைத்திருக்கும் 
கேள்வி இது 

வாருங்கள் 
தொடங்குவோம் 

மெளனத்திலிருந்தும் 
கேள்வியிலிருந்தும்

Saturday, October 19, 2013

மிதக்கும் சொற்கள்

மிதக்கும் சொற்களைத்
தொட்டுத் திரும்புகிறேன்
விரல்களில் ஒட்டி இருக்கிறது
சொர்க்கத்தின் வண்ணம்

விரிந்த புத்தகம்

விரிந்த புத்தகத்தின் 
எழுத்துக்களை 
காற்று இழுத்துக் கொண்டு 
போகிறது
வெள்ளைத் தாளாக 
மாறி விட்டப் புத்தகம் 
காது கொடுத்துக் கேட்கிறது
காற்றின் பாடலை

Friday, October 11, 2013

வேறு முகம்

இந்த முகம் 
என் முகம் என்று 
வரைகிறீர்கள் 
உங்கள் வண்ணங்களில் 
ஒளிந்திருக்கிறது 
என் வேறு முகம்

என்னைக் கொல்வதற்கு முன்

என்னைக் கொல்வதற்கு முன் 
ஒரு எளிய விண்ணப்பம் 
இந்தச் சவப்பெட்டி 
எனக்குச் சரியாக இருக்கும் 
என் மரணம் உங்களுக்கு 
சரியாக இருக்குமா பாருங்கள்

Tuesday, October 08, 2013

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1036-

பஞ்சு போன்ற 
சொற்களை வைத்து 
மிதக்கப் பார்க்கிறேன் 
ஆனாலும் 
அழுத்துகிறது கனம்

1037-

மனதில் புகுந்த தூசி 
ஊதித் தள்ள
ஒளியும் வேறிடம்

1038-

மெளனம் எளிதில் 
வரைந்து விடுகிறது
சொற்களுக்குத்தான் 
வண்ணங்கள் போதவில்லை

1039-

எப்போது வேண்டுமானாலும் 
எதை வேண்டுமானாலும் 
மனம் மாற்றி மாற்றி 
வைத்துப் பார்க்கும் 
வெற்றுச் சதுரம் 
எனக்குப் பிடிக்கும்

1040-

குழந்தை வரைந்த 
கோடுகளில் 
கடவுள் நடந்து போகிறார்

1041-

பறவை இல்லாத
வானம்
துயரம் படிந்த 
கானம்

1042-

போதையிடம் கேட்டேன் 
நான் எங்கிருக்கிறேன் 

விழுந்தால் 
உடையும் உயரத்தில் 
போதை சொன்னது

1043-

துளி துளியாய் 
மனம் மேல் 
விழும் அமைதி 
சத்தம் எழுப்புகிறது

1044-

வலிகள் எனக்காக 
பிரார்த்தனை 
செய்கின்றன

1045-

விரல் நுனி 
பனித்துளி 
முழு உடல் 
வனமாக்கும்

1046-

சொல்ல என்னிடம் 
சொற்கள் இல்லை
கனவுகள் உண்டு













Friday, October 04, 2013

முன் வரி வரை

கூடுதலாக எழுதப்பட்ட 
வரியில்தான் 
நான் உன்னைக் 
கொன்று விட்டேன் 
அதற்கு முன் வரி வரை 
உயிரோடு இருந்தாய்

மிதந்தபடி

உதிர்ந்து கொண்டிருக்கும் இதழ் 
உதிர்ந்து கொண்டிருக்கும் நான் 
பார்த்துக் கொண்டிருந்தோம் 
மிதந்தபடி

Saturday, September 28, 2013

திரைக்கதைக் கலை

இல்லாததை இருப்பதாக்கும் 
திரைக்கதைக் கலை 
நம் எல்லோரிடமும் இருக்கிறது
என்றார் நண்பர்

என்னிடம் இல்லையே என்றேன் 

உடல் அதிர 
சிரித்து முடித்தார்

போல்

நதியைப் போல் 
நீந்துகிறது மீன்
மீனைப் போல் 
நீந்துகிறேன் நான்

Friday, September 27, 2013

கணக்கும் வழக்கும்

இருளிடம் கேட்டேன் 
உன்னிடம் எத்தனைக் 
கோடிப் பொய்கள் இருக்கும் 

கண் சிமிட்டிச் சொன்னது 
போட்டுவிட்டுப் போகும் 
உங்களிடம்தானே இருக்கும் 
கணக்கும் வழக்கும்

பொய்கள்

நான் பொய்களால் ஆனவன் 
எனக்கு உங்கள் 
சவப்பெட்டிப் போதும் 
என் பொய்களுக்கு 
நீங்கள் நிறைய 
மரங்களை வெட்ட வேண்டும்

Thursday, September 26, 2013

மிதந்த கனவு

கண்ணீரில் 
மிதந்த கனவு 
விழுந்து உடையாமல் 
பறந்து போனது

ஒற்றைச் சிறகில்

கிளை அசைத்துப் 
போகிறது பறவை 
ஒற்றைச் சிறகில் 
பறப்பது போல் 
உணர்கிறது மரம்

Tuesday, September 24, 2013

பலூன்

வெடிக்கவே இல்லை 
இந்த பலூனை 
இன்னும் 
ஊதிக் கொண்டிருப்பது 
சோர்வைத் தருகிறது

உள்ளிருந்த சிலை

தவம் செய்த கல்லைத் 
தள்ளி விட்டேன் 
உள்ளிருந்த சிலை 
வெளி வந்து 
நடந்து போனது

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1028-

வேறு குரலில் 
பேசுகிறீர்கள் 
உங்கள் உதட்டசைவில் 
பொய் வழிகிறது

1029-

இந்த வனத்தில் 
நான் தொலைந்து 
சில காலம் ஆகிறது 
முளைத்து 
பல காலம் ஆகிறது

1030-

இருள் பெய்கிறது
நனையாமல் 
நடக்கிறேன்

1031-

என்னைத் தொலைத்து 
பிரபஞ்சத்தைக் 
கண்டெடுத்தேன்

1032-

காத்திருந்த போது 
உறங்கிப் போனேன்
எழுந்த போது 
மறந்து போனேன்

1033-

நான் ஆடு
நீங்கள் இரக்கம் வாங்க 
வந்திருக்கிறீர்கள்

1034-

இது உனக்கு 
நான் தரும் வரிகள் 
எடுத்து சுவரில் 
மாட்டி விடாதே 
கால்களில் 
போட்டுக் கொண்டு நட

1035-

அவ்வளவு எளிதில் 
நீங்கள் என்னைக்
கடந்து போய் விட 
முடியாது.
நான் சாலையின் வேர்.

Friday, September 20, 2013

வரியின் அடியில்

இந்த வரியின் அடியில்
எதுவுமில்லை
இந்த வரியின்
நிழல்தான் இருக்கிறது
வேறு ஒரு
வரியின் வடிவில் 

Monday, September 16, 2013

வந்து சேரவில்லை

கண்ணீரால் கப்பல் செய்து 
நதியில் மிதக்க விட்டு 
மறு கரைக்கு 
ஓடிப் போய் நின்று 
வருமா என்று பார்க்கிறாள் 
வெகு நேரமாக 
நதி வந்தது 
கண்ணீர் வந்தது 
கப்பல் மட்டும் 
வந்து சேரவில்லை

மதம் பிடித்த பசி

ஒற்றை பருக்கையில் 
முழு யானையை 
அடைத்தேன் 
பிறகு உண்டேன் 
மதம் பிடித்த பசி 
மறைந்து போனது

Sunday, September 15, 2013

கல்லின் பெயர்

நீங்கள் எறிந்த கல்லில் 
உங்கள் பெயர் 
எழுதி இருக்கிறது 
ஏன் இல்லை 
என்கிறீர்கள்

மன்னிக்கவும் 
அது என் பெயர் அல்ல 
கல்லின் பெயர்

Tuesday, September 10, 2013

நன்றியின் வண்ணங்கள்

பேருந்தில் 
நின்றிருக்கும் முதியவருக்கு 
ஒரு இருக்கை வரைந்து 
அமரச் சொல்கிறாள் மான்யா  

இறங்கும் இடம் வர 
எழும் பெரியவர் 
நாற்காலியின் வண்ணத்தால்
குழந்தையின் உள்ளங்கையில் 
நன்றி என்று 
எழுதி விட்டுப் போகிறார் 

Thursday, September 05, 2013

வந்து சேர்ந்த பின்

எங்கோ போகிறது 
என் நிழல் 
எதுவும் கேளாமல்
காத்திருக்கிறேன் 
வந்து சேர்ந்த பின் 
புறப்பட வேண்டும்

உச்சியிலிருந்து

உச்சியிலிருந்து 
உங்களைத் தள்ளி விட்டேனே 
எப்படி உயிருடன் 
இருக்கிறீர்கள் 

தள்ளியபோது 
நகர்ந்து கொண்டேன் 
விழுந்து இறந்த 
நீங்கள்தான் என்னுடன் 
பேசிக் கொண்டிருக்கிறீர்கள் 

தேடுகிறாய்

உதிரம் மழையெனப் 
பெய்கிறது 
உன் ஆயுதத்திலிருந்து 
நீ தலைத் துவட்டிக் கொள்ள 
உயிர்கள் தேடுகிறாய் 

Tuesday, September 03, 2013

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1020-
தட்டினால் திறக்கத் 
தயாராக இருக்கிறது கதவு
நீங்கள் காத்துக் 
கொண்டிருக்கிறீர்கள் 
கதவு பார்த்துக் 
கொண்டிருக்கிறது

1021-

இரவைத் தொட்டு
உண்ணும் கனவுக்கு 
என் பசித் தெரியுமா

1022-

இந்த மனதைக் 
கடந்து விடுவதுதான் 
வாழ்நாள் முழுமைக்குமான 
போராட்டம்

1023-

இரவைத் தொட்டு 
உண்ணும் கனவுக்கு 
என் பசித் தெரியுமா

1024-

இந்த இருளைக் 
கடந்து வந்தது 
இருளின் ஆசிகளால்தான்

1025-

என் தற்கொலைதான் 
என் வாழ்வின் செய்தி 
என்ற வரியிலேயே அவன் 
தூக்கிட்டுக் கொண்டான் 

1026-

ஊதி நகர்த்திய மலை 
என்ற வரியை 
மலைகளுக்குச் சமர்ப்பிக்கிறேன்

1027-

கவனமாக 
என் பெயரைத் 
தவிர்க்கிறீர்கள்
மனதிற்குள் 
உச்சரித்துப் 
பார்க்கிறீர்கள்.







Sunday, September 01, 2013

மீதிக் கேள்விகள்

கையிலிருந்த ரப்பரால் 
ஒவ்வொரு கேள்வியாக 
அழித்துக் கொண்டே வந்தேன் 

ரப்பர் முடிந்திருந்தது 

மீதிக் கேள்விகளில் 
இருந்த உயிர் 
என்னைக் 
கொன்று விடுவது போல் 
பார்த்துக் கொண்டிருந்தது 

Friday, August 30, 2013

பாடம்

பறக்கும் பாடத்தைப்
பறவைக்குச்
சொல்லித் தருகிறீர்கள்
அதைச் சிறகை வெட்டும்
முன் செய்திருக்கலாம்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1016-

மறந்து போன 
இடத்தில் 
பழைய கனவொன்று 
புதிதாக 
என்னைப் பார்க்கிறது 
மறந்து விடாமல்

1017-


நின்று இளைப்பாற 
நிழலில்லை 

இந்த வெயில் 
எனக்காக 
வேறு ஏதோ 
செய்தியை 
வைத்திருக்கக்கூடும்

1018-

வட்டம் எங்கே 
என்று தேடினேன் 
மையத்தில் 
ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது 

1019-

வண்ணங்களைக் 
கொட்டிவிட்டு 
ஓவியங்களை 
எடுத்துக் கொண்டேன்



Monday, August 26, 2013

மன்னித்துக்கொள்

மனதில் சொருகப்பட்ட 
கத்திகளை எடுக்கும் போது 
நினைவில் 
உன் பெயரும் 
வந்து போகிறது 
மன்னித்துக்கொள் 

எதிரில் சந்தித்தேன்

மழையில் நனைந்து 
சென்ற கனவை 
எதிரில் சந்தித்தேன் 

தொலைவில் 
போன பின்புதான் 
தெரிந்தது 
அது என் 
கனவு என்று

Saturday, August 24, 2013

எது சரி

மிருகங்களுக்கு மத்தியில்
வாழ்கிறோம்

மிருகங்களாக
வாழ்கிறோம்

எது சரி
கேட்கிறார் நண்பர்

எது சரி
கேட்கிறேன் நான்

எது சரி
சொல்லுங்கள் நீங்கள் 

Friday, August 23, 2013

தொங்கும் சொல்

பிரபஞ்சத்தைப் பிடித்து
தொங்கும் சொல்
ஊஞ்சலாகி விடுகிறது

உடைத்த எனக்கு

உடைந்த வார்த்தைகள்
வலிகளைத்
தருவதென்னவோ
உடைத்த எனக்குதான் 

வத்திப்பெட்டி அறையில்

வானம் 
உள்ளங்கையில்
இனி இந்த 
வத்திப்பெட்டி அறையில் 
வருத்தங்களின்றி 
உறங்கலாம் 

எதை எப்போது

நாவின் அடியில் 
கத்திகள் 

நாவின் மேல் 
பூக்கள் 

பேசிடும் நாவுக்குதான் 
தெரியும் 

எதை எப்போது 
எடுக்கும் என்று

Thursday, August 22, 2013

எனக்குள்ளிருந்த யானை

மதம் பிடித்த 
திமிரை அடக்க 
பாகனானேன் 
எனக்குள்ளிருந்த யானை
வெளியேறியது

Monday, August 19, 2013

மற்ற சொற்கள்

ஒற்றைச் சொல்லை 
மீன் தொட்டியாக்கினேன் 
மற்ற சொற்கள் 
வந்து நீந்த

அந்தரங்கத்தில்

அந்தரங்கத்தில் 
தொங்குகிறது 
என் நிர்வாணம் 
ஈ மொய்க்கும் 
இறைச்சி என

Sunday, August 18, 2013

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1009-

ஒளிந்து கொண்ட
கனவுக்குள்
வனம் இருந்தது
என்னை ஒரு
சிங்கமாக்கி
வெளி அனுப்பியது

1010
நினைவில் 
தவமிருக்கும் 
கண்ணீர்த்துளி

1011-
கனவில்
தொலையுங்கள்
கனவைத்
தொலைக்காதீர்கள்

1012-
உன் மௌனத்தில்
நீந்தும் மீன்தான்
என்னைப் பார்த்து 
சொற்களைத் துப்புகிறது 

1013-

வந்து சேர்ந்த வரியில்
யாரோ இருந்து
போன தடம்

1014-

மன்னிக்கப்
பழகிக் கொண்டீர்கள்
குற்றவாளிகள் 
அதிகமாகி விட்டார்கள்

1015-

அழித்த வரி கேட்டது
என் ஆயுள்
அவ்வளவுதானா என்று












Saturday, August 17, 2013

தெரியவில்லை

பக்தனுக்கு 
கடவுள் தெரிந்தார் 

கடவுளுக்கு 
பக்தன் தெரிந்தான் 

பூசாரிக்கு 
இருவருமே தெரியவில்லை

Sunday, August 11, 2013

விடிகையில்

நள்ளிரவில் 
மிதந்து மிதந்து 
வானத்தில் போய் 
ஒட்டிக் கொண்டேன் 
விடிகையில் 
துளியாய் 
வந்து விழிந்தேன்

Tuesday, July 30, 2013

போகும் போது

மலை உச்சியில் 
ஓய்வெடுத்துக் கொண்டிருந்த 
மேகத்துடன் 
பேசிக் கொண்டிருந்தேன் 
போகும் போது 
மழையைப் 
பரிசளித்துவிட்டுச் சென்றது 

Friday, July 26, 2013

கனவு முடிந்திருந்தது

மரணத்தின் மேல் 
மரணத்தை 
அடுக்கி வைத்தேன் 
என் உயரம் 
வந்த போது 
எழுந்து விட்டேன் 
கனவு முடிந்திருந்தது

Sunday, July 21, 2013

என்னைக் கேட்காதே

முன் சொல்லிடம் கேட்டேன்
அடுத்த சொல்
என்ன என்று
அது உன் வாக்கியத்தின்
சூட்சமத்தில் இருக்கிறது
என்னைக் கேட்காதே என்றது 

Saturday, July 20, 2013

குறிப்புகள்

ஒரு குறையுமின்றி
எல்லாம் தந்து
பறக்க வேண்டாம்
எனச் சொல்லி
ஒரு பறவையை
அடைத்து வைத்திருந்தேன்

என்னை புதைக்காதே
வானத்தை நோக்கி
வீசி விடு என்ற
குறிப்புகளுடன்
இறந்து போயிருந்தது 

Friday, July 05, 2013

இவ்வளவு தூரம்

சுவடின்றி 
வெளியேறுகிறாய் 
இதற்கு நீ 
இவ்வளவு தூரம் 
வந்திருக்க வேண்டாம்

Wednesday, June 26, 2013

கதைக்காரன்

நீங்கள் யார்

கதைக்காரன்

சொல்வீர்களா

அதெல்லாம் முடியாது
வேண்டுமானால்
என் கண்களைப் பார்த்து
படித்துப் போ

Wednesday, June 19, 2013

சுடரிடம் கேட்டேன்

மனதால் உன்னை 
ஊதி அணைத்து விட்டேன் 
இன்னும் ஏன் 
அசைகிறாய் 
சுடரிடம் கேட்டேன்

அசைவது 
உன் மனம்தான் 
சுடரல்ல 
இருள் சொன்னது

Sunday, May 19, 2013

சுழலும் கேள்விகளும் பதில்களும்


நீங்கள் யார் 

நான் யாரோ 

யாரோ என்றால் 

யாரோ என்றால் 
யாரோதான் 

சரிதான் 
தெரியாத ஒன்று 
உங்களுக்கு 
எப்படித் தெரியும் 

தெரிந்தால் வந்து 
சொல்கிறேன் 

ஆமாம் 
நீங்கள் யார்

நான் யாரோ 

யாரோ என்றால் 

யாரோ என்றால் 
யாரோதான் 

சரிதான் 
தெரியாத ஒன்று 
உங்களுக்கு 
எப்படித் தெரியும் 

தெரிந்தால் வந்து 
சொல்கிறேன் 

Monday, May 13, 2013

கடைசிச் சொல்

1-

இந்த வரியை 
எப்படி நெய்தீர்கள் 

என் 
நிர்வாணத்தால்

2-

ஒவ்வொரு சொல்லும் 
உதிர்ந்து கொண்டே வர
கடைசிச் சொல் 
பறந்துவிட்டது

3-

வெறுமையை 
கையேந்தி நிற்கிறேன்
நீ அன்பை 
நிரப்பும் போது 
அது பாத்திரமாகி விடுகிறது

4-

பொய் சொல்கிறாள் 
கண்ணீர்த்துளியை 
வரைந்து விட்டு 
மழைத்துளி என்று



எழுதிக் கொண்டிருந்தேன்


நள்ளிரவில் 
மழை பெய்யும் போது 
என்ன செய்து கொண்டிருந்தீர்கள் 

எழுதிக் கொண்டிருந்தேன் 

அது மழைக்குத் தெரியுமா 

ஒன்றைப் பற்றி எழுதுவது 
ஒன்றுக்கு எப்படித் 
தெரியாமல் இருக்கும்

Sunday, May 12, 2013

எனக்குப் பசிக்கிறது


எனக்குப் பசிக்கிறது 
ரொட்டித்துண்டைத் 
தருகிறீர்களா

எனக்கும் பசிக்கிறது

அப்படியா வாருங்கள் 
நம் பசியை 
பகிர்ந்து சாப்பிடுவோம் 

வேட்டையாடும் எழுத்து


பாய்ந்து கவ்வி 
வேட்டையாடும் எழுத்து 
கவனிக்க 
மறந்து விடுகிறது 
பூவின் விரிதலையும் 
அதன் உள் மனச் 
சொற்களையும்