நான் எழுதிக்கொண்டிருந்தபோது
ஒரு பூனை
தாவிக்குதித்து ஓடியது
மழை எட்டிப்பார்த்தது
சுவர்க்
கடிகாரம் ஒழுங்குடன் ஒலித்தது
தூரத்து டீவியிலிருந்து
குரல்கள்
படிக்கட்டில்
யாரோ
வேகமாக ஓடினார்
ஜன்னல் திரைச்சீலை
நடனமிட்டது
மேஜையை ஒரு
எறும்பு
தன் ஊர்தலில்
அளந்தது
பூச்சியை
விழுங்கிய பல்லி
மெல்ல உள்ளே
தள்ளியது
பசி வேண்டுகோள்
வைத்தது
காலிங்பெல்லை
யாரோ அடித்தார்கள்
நான் நிதானமாய்
எழுந்து போய்
கதவைத் திறந்தேன்
அவர் வேகமாக
உள்ளே வந்து
எழுத்துக்குள்
உணவை வைத்துச்
சென்றார்
-
ராஜா
சந்திரசேகர்