Thursday, October 30, 2014

நான் பார்க்க வந்தவர்

தாமதமாகவே கிளம்பினேன்
நேரே
இடுகாடு வந்துவிட்டேன்
அங்கும் தாமதமாகிவிட்டது
மின் தகனச் சடங்கு
முடிந்திருந்தது
எல்லோரும் போயிருந்தார்கள்
தனியாய்
ஒற்றை ஆளாய்
நின்றிருந்தேன்
சார் யாரப் பாக்கணும்
நான் பார்க்க வந்தவர்
போய் விட்டார்
சொல்லிவிட்டு நடந்தேன்

Wednesday, October 29, 2014

நாங்கள் எங்களுடன்

நான் தனிமையுடன்
பேசினேன்

தனிமை இரவுடன்
பேசியது

இரவு என்னுடன்
பேசியது

நாங்கள் எங்களுடன்
பேசினோம்

Monday, October 20, 2014

சாலை

கலைந்து கிடக்கிறது சாலை 
எவ்வழிப் போவது 
என்ற வரியை 
அழிக்கிறேன் 

Friday, October 10, 2014

மழை நாளில்

கவிதை எழுதுவாள் கௌரி 
ஒரு மழை நாளில் 
அவளுக்குக் குழந்தைப் பிறந்தது 
கண்களில் நீர்த் துள்ள 
இப்படி எழுதினாள் 
மழை நாளில் 
மழையைப் பெற்றெடுத்தேன் 
(கௌரிக்கு)

Wednesday, October 08, 2014

உளி

என்னை உளியாக்கி 
தன் கையில் எடுத்து 
கனவை உடைக்கப் 
பார்க்கிறது இரவு 
கனவு உளியைக் கைப்பற்ற 
எதுவுமற்று 
விழிக்கிறது இரவு 
புரண்டு படுக்கிறேன்
இன்னொரு கனவுடன் 

Friday, October 03, 2014

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1111-

வாசிக்காத புல்லாங்குழல் 
வனத்தில் எறிந்த போது 
இசைத்தபடியே விழுந்தது

1112-

நீண்ட நேரமாக 
நடந்து கொண்டிருக்கிறேன் 
எங்கு போக வேண்டும் என்று 
மறந்து போய் விட்டது

1113-

ஆறுதல் பரிசை 
ஆகாயம் போல் 
வாங்கிக் கொள்கிறீர்கள் 
அந்த நேரத்தில் 
இறந்து போகிறது 
உங்கள் சிறகு




கண்ணீருக்கும் பசிக்கும்

கண்ணீருக்கும் பசிக்கும்
இந்த இரண்டு
சொற்களுக்குள்
கவிதை இருக்கிறதா
தெரியாது
சொன்னவள் இருக்கிறாள்

Wednesday, October 01, 2014

வரும் சத்தம்

வரும் சத்தம் 
நெருங்கி வர 
ரயிலில் 
பயணம் செய்வதாக 
நினைத்தபடியே அவன் 
தண்டவாளங்களுக்கிடையில் 
நடந்து கொண்டிருந்தான்

சிறகைத் தருவாயா

உன் சிறகைத் தருவாயா
நான் அணிந்துப் பறக்க
வானம் கேட்டது
இல்லை
வானம் கேட்பது போல்
பறவை நினைத்தது
மழைத்துளி அதன்
நினைவின்
மேல் விழ
வேகம் கொண்டு போனது