Tuesday, March 26, 2019

பாறை விழுங்கிய உளி


பாறை விழுங்கிய உளி
சிலையின்
தொண்டைக்குள் போய்
சிக்கிக்கொண்டது
2-
மழையில் சந்தித்தோம்
சொற்கள் நனைய
பேசிக்கொண்டிருந்தோம்
3-
நினைவு
துயரத்தை
அள்ளி எடுத்து
மனதுக்கு
ஊட்டப்பார்க்கிறது
4-
காமம்
கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறது
காதல்
திறக்கலாமா வேண்டாமா என யோசிக்கிறது
5-
என் சொற்களை
உன் மெளனம்
தாய்மையுடன்
தடவும்போது
சுரக்கின்றன
அன்பின் பாடல்கள்

தண்டவாளங்களுக்கிடையில்

நடந்து போகிறவனை
விரட்டி வருகிறது ரயில்
இந்த வரிக்கு
அடுத்த வரியை
நீங்கள் எழுத விரும்பினால்
அவனைக் காப்பாற்றிவிடுங்கள்
இல்லையெனில்
இந்தத் தாளை
கிழித்து விடுங்கள்
நீங்கள் என்ன
எழுத நினைத்தீர்கள்
என்று மட்டும்
கேட்டுவிடாதீர்கள்