சுவரில் சாய்ந்து
எங்கேயோ பார்த்து
எதையோ முணுமுணுக்கிறாய்
நான் அதற்குச்
சொற்களை யோசிக்கிறேன்
நீ கேட்டு
முணுமுணுப்பில் பொறுத்திப் பாடுகிறாய்
உயிர் பெறுகிறது
பாடல்
வியப்பு மேலிடக்
கேட்கிறேன்
இந்தப் பாடல்
எங்கிருந்து வந்தது
உன் முணுமுணுப்பிலிருந்தா
இல்லை எனத்
தலையாட்டுகிறாய்
என் சொற்களிலிருந்தா
மறுபடியும்
மறுக்கிறாய்
பிறகு எங்கிருந்து
வந்தது
கண்களைத்
துடைத்துக்கொண்டு
சொல்கிறாய்
துயரத்திலிருந்து