Sunday, June 30, 2019

இல்லாது போன கவிதை

மலையுச்சிக்குப் போய்
தற்கொலைக் கவிதை எழுதிவிட்டு
அவன் குதித்துவிட்டான்

ஏறி வந்து
மலை மலரைப்
புகைப்படம் எடுக்கும்
புகைப்படக்காரரின்
கைகளில் போய்
அமர்கிறது
அந்தக் காகிதம்

இதழ் போல்
அதை எடுத்து
எழுதி இருப்பதைப்
படித்துவிட்டு
படபடப்புடன்
தன் உயிரைத் தேடுவது போல்
ஓடி ஓடித் தேடுகிறார்
இல்லாது போன கவிதையை


Friday, June 07, 2019

நான் வாசித்த வரிகள்

கனவிலும்
மரம் வளர்ப்போம்.
கனவுகளை
வளர வைப்போம்.

காது கொடுத்து
மரத்திடம் கேளுங்கள்
பிரபஞ்சத்தின் துடிப்பை.

முதலில்
உன் மனதிலுள்ள
கோடரியைத்
தூக்கி எறி
பின் கையிலுள்ள
கோடரி
தானே விழும்

மரங்கள்
நிமிர்ந்து நிற்கும் வாக்கியங்கள்
இதில் நாம்
இயற்கையைப் படிக்கலாம்

விதை இருந்த
உள்ளங்கையை மூடினேன்
நான் மரமானேன்.

கடவுள் அவன் கனவில் வந்து கேட்டார்
நீ வசிக்க சிறிய இடம் போதுமா
அவன் சொன்னான்
இல்லை பெரிய இடம் வேண்டும்
என்னோடு மரங்களும் வசிக்க.

(நான் வாசித்த வரிகள் -உலக சுற்றுச்சூழல் தினம் – 5.6.2019 -TREE TRUST உயிர் வாழ ஒரு மரம்.
மரம் சூழலியல் நடுவம்&நாற்றங்கால் துவக்க விழா-கோவை)