Sunday, May 19, 2013

சுழலும் கேள்விகளும் பதில்களும்


நீங்கள் யார் 

நான் யாரோ 

யாரோ என்றால் 

யாரோ என்றால் 
யாரோதான் 

சரிதான் 
தெரியாத ஒன்று 
உங்களுக்கு 
எப்படித் தெரியும் 

தெரிந்தால் வந்து 
சொல்கிறேன் 

ஆமாம் 
நீங்கள் யார்

நான் யாரோ 

யாரோ என்றால் 

யாரோ என்றால் 
யாரோதான் 

சரிதான் 
தெரியாத ஒன்று 
உங்களுக்கு 
எப்படித் தெரியும் 

தெரிந்தால் வந்து 
சொல்கிறேன் 

Monday, May 13, 2013

கடைசிச் சொல்

1-

இந்த வரியை 
எப்படி நெய்தீர்கள் 

என் 
நிர்வாணத்தால்

2-

ஒவ்வொரு சொல்லும் 
உதிர்ந்து கொண்டே வர
கடைசிச் சொல் 
பறந்துவிட்டது

3-

வெறுமையை 
கையேந்தி நிற்கிறேன்
நீ அன்பை 
நிரப்பும் போது 
அது பாத்திரமாகி விடுகிறது

4-

பொய் சொல்கிறாள் 
கண்ணீர்த்துளியை 
வரைந்து விட்டு 
மழைத்துளி என்று



எழுதிக் கொண்டிருந்தேன்


நள்ளிரவில் 
மழை பெய்யும் போது 
என்ன செய்து கொண்டிருந்தீர்கள் 

எழுதிக் கொண்டிருந்தேன் 

அது மழைக்குத் தெரியுமா 

ஒன்றைப் பற்றி எழுதுவது 
ஒன்றுக்கு எப்படித் 
தெரியாமல் இருக்கும்

Sunday, May 12, 2013

எனக்குப் பசிக்கிறது


எனக்குப் பசிக்கிறது 
ரொட்டித்துண்டைத் 
தருகிறீர்களா

எனக்கும் பசிக்கிறது

அப்படியா வாருங்கள் 
நம் பசியை 
பகிர்ந்து சாப்பிடுவோம் 

வேட்டையாடும் எழுத்து


பாய்ந்து கவ்வி 
வேட்டையாடும் எழுத்து 
கவனிக்க 
மறந்து விடுகிறது 
பூவின் விரிதலையும் 
அதன் உள் மனச் 
சொற்களையும்

Saturday, May 11, 2013

ஒரே நேரம்


ஒரே நேரம் 
நம் இருவர் கண்ணிலும் 
கண்ணீர் 
பார்த்தபடியே 
புன்னகைக்கிறோம் 
இந்த உரையாடலை 
இதை விட நாம் 
சிறப்பாக 
முடித்திருக்க முடியாது 

Monday, May 06, 2013

விளிம்புக்குப் போகும் வரை

1-

பல்லக்கை 
பல காலமாக 
சுமந்து செல்கிறோம் 
உள்ளே இருப்பது 
சாத்தான் என்று 
உணராமல்

2-

ஒன்றும் தெரியாத என்னை 
மைதானத்தின் விளிம்பில் 
நிறுத்தி வைத்திருக்கிறீர்கள் 
விளிம்புக்குப் 
போகும் வரை  
விளையாடித்தான் 
ஆக வேண்டும்

Saturday, May 04, 2013

முகச்சாயல்

கடந்து போன நபர் 
இறந்து போன நண்பனின் 
முகச்சாயலில் இருந்தார்

ஒரு கணம் கலங்கி 
கண் துடைத்து 
அவரைப் பார்த்து 
புன்னகைக்க 
புன்னகைத்தார்

அதுவும் அச்சு அசலாய் 
நண்பனைப் போலிருந்தது

மாதவா என்று 
மனதிற்குள் 
ஒரு சத்தம் 
துள்ளி எழுந்து 
அடங்கியது

நண்பன் போய்விட்டான் 
அவர் போய்விட்டார் 
நான் போய்க் கொண்டிருக்கிறேன்

Friday, May 03, 2013

சீட்டு விளையாட்டு

சாத்தானுடன் 
சீட்டு விளையாடியது 
தப்பாய் போயிற்று 
அது என் 
தோல்விகளை வைத்து 
விளையாடிக் கொண்டிருந்தது

பதில் இல்லை

சவப்பெட்டிக்கு
வண்ணம் பூசினேன்
மரணம் அழகானதா
சவப்பெட்டிக் கேட்டது
பதில் இல்லை
கண்ணீர்த் துளி
சவப்பெட்டியின் மேல்
விழுந்தது

Thursday, May 02, 2013

நமக்குள் சுழலும் இசை

இசை நாற்காலி விளையாட்டில் 
இறுதிச் சுற்றில் 
நாம் இருவர் மட்டுமே 
ஓடிக் கொண்டிருக்கிறோம் 
எல்லோரும் வெளியேறி விட்டனர் 
இசைத்தட்டு சுழல்வதை நிறுத்தி 
நீண்ட காலமாகிறது 
நீ அமர்ந்துவிட வேண்டும் 
என்று நானும் 
நான் அமர்ந்து விட நீயும் 
ஓடிக்கொண்டிருக்கிறோம்
நமக்குள் சுழலும் இசை 
நிற்கவே இல்லை