Friday, April 27, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

881-

நகராத மனிதர்களைப் பார்த்து 
சொன்னது தேர் 
இந்த ஊரில் 
என்னையும் சேர்த்து 
எத்தனைத் தேர்கள்

882-

நான் மீனானது 
தெரியாமல் 
என்னைத் தூக்கி 
கடலில் எறிகிறீர்கள்
கரை ஒதுங்கி 
மிதப்பது 
உங்கள் ஏமாற்றம்தான்

883-

நீங்கள் துப்பிய 
எச்சியைத் துடைக்கிறேன் 
உங்கள் மேலிருந்து

884-

என் நான் 
தொலைந்து போயிற்று
இனி நான் 
நானின்றி இருக்கலாம்

885-

எதைஎதையோ 
செய்து கொண்டிருக்கிறேன்
எதை செய்ய வந்தேன் என்று 
மறந்து போயிற்று




Sunday, April 22, 2012

காலத்தின் பாசி

அழவைத்து 
துடைக்க 
கை நீட்டுகிறீர்கள் 

உங்கள் 
விரல் நுனியில் 
ஒட்டிக்கிடக்கிறது 
காலத்தின் 
சாபம் பெற்ற 
பாசி

Thursday, April 19, 2012

குரல்


கேட்க முடிகிறது
சைகையில்
உதிரும் குரல்

நான்


நான் சுமந்து
நான் சுமந்து
நான் சுமந்து
பாரமானேன்
நான் இறக்கி
நான் இறக்கி
நான் இழந்து
இலேசானேன்

Monday, April 09, 2012

எதோ ஒரு கணத்தில்

எதோ ஒரு கணத்தில் 
பூனையின் கண்களில் 
கருணையை 
அறியும் எலி
அந்தக் கணத்தைத் 
தன் தப்பித்தலுக்குரிய 
தருணமாக்கி விடுகிறது

Sunday, April 08, 2012

பெயர்கள் வழியே

என் புனைப்பெயர்கள் வழியே 
நீங்கள் என்னை 
வந்தடைய முடியாது 
திசை சிக்கலாகும் 
என் பெயர் வழியே 
நீங்கள் வந்தடைந்தால் 
திரும்பிப் போக முடியாது 
வழி மறந்து போகும்

வனம்

வனம் கட்டிப் போடும்
புல்லாங்குழலை
என்னிடம்
விட்டுச் சென்றான் வழிபோக்கன்
வாசிக்க
கட்டவிழ்ந்தது என்னுள்
இருந்த வனம்


Tuesday, April 03, 2012

நீங்கள் யார்


நீங்கள் யார் 
நான் 
உங்கள் கேள்வியில் 
முடியும் பதில் 

உங்கள் பதிலில் 
தொடங்கும் கேள்வி