Monday, February 18, 2008

அவனைப் பற்றிய குறிப்புகள்

இரவு மூடுமுன்
மதுபானக் கடையில்
கடைசி பாட்டிலும்
திறக்கும் சமயம்
முதல் பாட்டிலும் வாங்குபவன்
சபிக்கப்பட்டவனாக
தன்னைப் பற்றித் தோன்றும்
உணர்வை வெளித்தள்ள
விடுவிடுவென
போதைக்குள் இறங்குகிறான்

முந்தைய போதைகளின்
மிச்சங்களும் சேர
தன்னைப் பெயர்த்து
எதிரில் உட்காரவைத்து
இன்னொருவருடன் பருகுவது போன்ற
தோற்றத்தைப் பெற்று
அமைதியின் ஆசிர்வாதம் கிடைத்ததாகச்
சொல்லிக்கொள்கிறான்

தன்னைக் கிளறும்
அழைப்பு மணிகளை
ஒவ்வொன்றாக
நிறுத்திக்கொண்டே வருகிறான்

கால்களின் நடனத்தில்
சிக்கி விழாமல்
கவனமாய் நடந்து
வெளியே வருபவன்
மழையைத்திட்டியபடி
நனைந்து
எதிரே போய்
ஒதுங்கி நின்று
பார்த்தபடியே இருக்கிறான்
மழைத் திரையிட்ட
மதுபானக்கடையை

Friday, February 15, 2008

கோடுகளின் இசை

வெள்ளைத் தாளைப்
பருகுவதுபோல் பூனை

பிரியம் கூடி
பூனையிடம் கேட்டேன்
உன்னை வரைந்தவரைப்
பார்க்க வேண்டும்

சின்ன சத்தங்கள் செய்தபடி
அழைத்துப்போய்
வரைந்தவரைக் காட்டியது

சூரியன் இறங்கிய
ஒளிவெளியில்
அமர்ந்திருந்தார்

கண்கள் புன்னகைக்க
வரைவதைப் பார்க்கச் சொன்னார்

பியானோவும் ஏழைச்சிறுவனும்

பார்த்தபடியே
மெல்ல இமைமூட
கேட்டது
கோடுகளின் இசை

கண்டெடுத்த
குழந்தை மனநிலையில்
கண் திறக்க
பூனை இல்லை
பியானோ காணோம்
வாசித்த சிறுவனும் இல்லை
வரைந்தவரும்

கேட்டபடி இருந்தது
நின்று போகாத
பூனையின் சத்தம்

(ஓவியர் ஆதிமூலம் நினைவிற்கு)