Thursday, December 28, 2023

நகரமும் அவர்களும்

நகரத்திற்குப் புதிதாக வந்த இளைஞன் அவன்

இந்த நகரத்துல எங்கையாவது

அன்பு தென்படுமான்னு பாத்தேன்

அது உங்க கண்ல இருக்கு என

எதிர்படும் பெண்ணிடம் சொல்கிறான்

கண்டறிந்த  பெருமிதத்தோடு

 

இதை எதிர்பார்க்காத

நகரத்திற்குப் புதிதாக வந்திருக்கும் பெண்

அவனைப் பார்க்கிறாள்

அவள் பேருந்து வருகிறது

என்ன சொல்றதுன்னு தெரியல

உங்க கண்ல

நம்பிக்கை தெரியுது

சொல்லிவிட்டு

வேகமாக ஓடிப்போய்ப்

பேருந்தில் ஏறுகிறாள்

போ

1

வழியே

வழி காட்டும்

போ

2

நிற்காதே

தேங்கிப்போவாய்

3

கண்களுக்கு

விழிப்பை

ஊட்டு

4

நீ

நடைப்போராளி

5

கால்களின்

பாடல் கேள்

இசைபோல்

நட

6

தடைக்கற்களில்

வேகத்தின் குறிப்புகள்

இருக்கட்டும்

7

மூச்சுக்காற்றுக்கு

நன்றி சொல்

உன்னை

முந்திச் செல்பவனை

முந்திச் செல்

8

நேரம் முக்கியம்

உன்னோடு

உரையாடு

போதும்

9

கேள்வி

அழைத்துப்போகும்

விடை

வேகமாக்கும்

10

களைப்படையா

கர்வம் கொள்

11

நினைவுகளில்

பயணக்குறிப்புகளை

எழுதி வை

12

இமை மூடித்

திறப்பதற்குள்

பாய்ந்து பழகு

13

கால்களைச்

சிறகுகளாக்கு

பாதைகளை

வானமாக்கு

தினசரி செய்திகள்

கையிலிருந்த தினசரியில் செய்திகள் கனத்தன

எண்ணூரில் எண்ணெய்ப் படலம்

என்னென்னவோ சொல்கிறார்கள்

கவலை பாரமாய் அழுத்துகிறது

 

ஏரிகள் காணாமல் போய்விட்டன

கட்டிடங்கள் முளைத்துவிட்டன

 

இவரைக் கேட்டால் அவரைச் சொல்கிறார்

அவரைக் கேட்டால் இவரைச் சொல்கிறார்

 

கூசாமல் குவித்து வைத்திருக்கிறோம்

குப்பைகளையும் பொய்களையும்

 

வெட்கமின்றி உலா வருகின்றன

ஊழல் முகங்கள்

 

தீர்வைத் தர வேண்டும்

உணவுப்பொட்டலங்களோடு முடிந்து விடுகிறது

புகைப்பட வெளிச்சத்தில் பெருமிதங்கள்

 

எல்லாவற்றிற்கும்

பதில் வைத்திருக்கிறார்கள்

கேள்வி கேட்பவர்களின்

வாயை மூடி விடுகிறார்கள்

 

இன்னொரு தேநீர்

பெரியவரிடம் கேட்டேன்

தலையாட்டினார்

 

மனுஷன் நேர்மையா இருந்தா

நாடு தூய்மையா இருக்கும்  என்றார்

சட்டையில் சிந்திய தேநீரைத்

துடைத்துக்கொண்டார்

 

அமைதியானவர் திடீரென

வெடிப்பது போல்

சொல்லிவிட்டுப் போனார்

 

நாக்க புடுங்கிகிட்டு சாகற மாதிரி

நாலு வரி எழுதுங்க தம்பி

 

எதுவும் தோன்றவில்லை

தினசரியில் தொலைந்து போனவரோடு

நானும் தொலைந்து கொண்டிருந்தேன்

Saturday, December 09, 2023

சித்திரங்கள்

அம்மாவின் பசிக்குப்

பொறுமை அதிகம்

உணவு கொடுக்கும்போது

வாங்கிக்கொள்ளும்

 

அப்பா கோபப்படுவதை

நிறுத்திவிட்டார்

தேவைப்படும் போது

தனியே போய்க்

கொட்டிவிட்டு வருவார்

 

மொத்த சம்பளத்தையும்

மூத்த மகன்

வீட்டில் கொடுத்துவிடுகிறார்

செலவுக்குக் கேட்டு

வாங்கிக்கொள்வார்

 

தங்கைகளுக்குத்

திருமணம் நடந்தால்

அவர் வாழ்க்கை

கூடி வரலாம்

 

மழையில்

மழையாகிவிடுகிறது வீடு

தெரியாமல் இல்லை

அதைப்பற்றி யாரும்

அதிகம் பேசுவதில்லை

 

யார் அனுமதியும் இல்லாமல்

வீட்டைச் சுற்றிவருகிறது

புதிதாய்

வந்து சேர்ந்த பூனை

 

 

 

 

உன் பெயர்தான் என் பெயர்

அவர் கதையில்

நதி ஓடியது

அள்ளிக் குடித்தேன்

தேன் சுவை


மீன்கள் விளையாடின

அருகில் வந்தன

காது கொடுத்து

மீன்கள் சொன்னதைக் கேட்டேன்

குட்டிக்கதைகள்


தூரத்தில் ஆளின்றி

அசைந்துகொண்டிருந்தது 

ஒரு படகு

குதித்து நீந்திப்போய்ப்

படகில் ஏறி அமர்ந்து

சத்தமிட்டேன்

எதிரொலித்தது


கதை எழுதியவருக்கு

அது கேட்டது


எழுதுவதை நிறுத்திவிட்டு

வரச்சொல்லிக் கையசைத்தார்

அவர் பெயரைக் கேட்டேன்

அது தேவையில்லை என்றார்

அப்படியானால்

நானும் உங்களைச்

சந்திக்கத் தேவையில்லை 

எனச் சொல்லிவிட்டு

குதித்து நீந்தினேன்


நதி முடிந்திருந்தது

நிமிர்ந்து பார்த்தேன்

வெள்ளைப் பாலைவனமாக இருந்தது


எழுதியபடியே

முன்னேறிக்கொண்டிருந்தார் எழுத்தாளர்


என்னால் நடக்க முடியவில்லை

அழைத்துப் பார்த்தேன்

திரும்பவில்லை

தூரத்திலிருந்து குரல் வந்தது

உன் பெயர்தான்

என் பெயர்


பிறகு

நினைவுகளைத் தாண்டிவந்து

விட்ட இடத்திலிருந்து

எழுதத் தொடங்குமுன்

எழுதி இருந்த 

சில வரிகளைப் படித்தேன்


உன்னை அடைந்தால்

நீ என்னை அடையலாம்

விடாமல் நட

விலகாமல் போ