Tuesday, December 13, 2022

சாவிகள்

சையத் அலி

அவர் பெயர்

 

அவர் இன்ஷா அல்லா

சொல்லும்போது

இசைகேட்பது போலிருக்கும்

 

டூப்ளிகேட் சாவி

செய்வதில் நிபுணர்

 

அவர் விரல்களில்

சாவி சிற்பமாகும்

 

குழந்தைபோல்

சொன்னதைக் கேட்கும்

 

வலியின்றிப் பூட்டுகள்

வாய் திறக்கும்

 

அடிக்கடி சுருட்டுப் பிடிப்பார்

சுருட்டின் புகை வளையங்கள்

காற்றில் சித்திரங்களாகிப் பறக்கும்

அப்போது ஏதாவது சொல்லுவார்

 

அவர் எளிய வார்த்தைகள்

சாவிபோல் எண்ணங்களைத் திறக்கும்

 

நான் எதுவும்

அவரிடம் சாவி போட்டதில்லை

ஆனாலும் பழக்கம்

அடிக்கடி பேசுவதுண்டு

 

ஒரு தேநீர் சந்திப்பில்

அவரிடம் கேட்டேன்

 

மனதின் மர்மத்தைத் திறக்க

ஏதேனும் சாவி இருக்கிறதா

 

சுருட்டின் புகை

அதிர்ந்து பறக்கச் சிரித்தார்

பிறகு சொன்னார்

 

மனது திறந்தேதான் இருக்கிறது

மர்மம்தான்

நம் கண்களுக்குப் புலப்படாமல்

மாறிக்கொண்டே இருக்கிறது