அவர் கதையில்
நதி ஓடியது
அள்ளிக் குடித்தேன்
தேன் சுவை
மீன்கள் விளையாடின
அருகில் வந்தன
காது கொடுத்து
மீன்கள் சொன்னதைக் கேட்டேன்
குட்டிக்கதைகள்
தூரத்தில் ஆளின்றி
அசைந்துகொண்டிருந்தது
ஒரு படகு
குதித்து நீந்திப்போய்ப்
படகில் ஏறி அமர்ந்து
சத்தமிட்டேன்
எதிரொலித்தது
கதை எழுதியவருக்கு
அது கேட்டது
எழுதுவதை நிறுத்திவிட்டு
வரச்சொல்லிக் கையசைத்தார்
அவர் பெயரைக் கேட்டேன்
அது தேவையில்லை என்றார்
அப்படியானால்
நானும் உங்களைச்
சந்திக்கத் தேவையில்லை
எனச் சொல்லிவிட்டு
குதித்து நீந்தினேன்
நதி முடிந்திருந்தது
நிமிர்ந்து பார்த்தேன்
வெள்ளைப் பாலைவனமாக இருந்தது
எழுதியபடியே
முன்னேறிக்கொண்டிருந்தார் எழுத்தாளர்
என்னால் நடக்க முடியவில்லை
அழைத்துப் பார்த்தேன்
திரும்பவில்லை
தூரத்திலிருந்து குரல் வந்தது
உன் பெயர்தான்
என் பெயர்
பிறகு
நினைவுகளைத் தாண்டிவந்து
விட்ட இடத்திலிருந்து
எழுதத் தொடங்குமுன்
எழுதி இருந்த
சில வரிகளைப் படித்தேன்
உன்னை அடைந்தால்
நீ என்னை அடையலாம்
விடாமல் நட
விலகாமல் போ
No comments:
Post a Comment