Monday, December 30, 2019

காண்

எழுச்சி காண்
இதயக் குரல்களின்
வேகம் காண்
ஒத்த உணர்வுகளின்
துடிப்பு காண்
வீதி வந்த
வீரியம் காண்
அக்னி பார்வையில்
ஆயிரம் செய்திகள் காண்
போர்க்குணம்
என்
வேர்க்குணம்
எனச்சொல்லும்
போராளிகள் காண்
கூரிய சிந்தையின்
உரசல் காண்
நெருப்புச் சொற்களின்
உண்மை காண்
சாயா நெஞ்சின்
சத்தம் காண்
விட்டுக்கொடுக்கா
உரிமை காண்
விலகிச் செல்லா
நேர்மை காண்
கவனம் குவிக்கும்
சினம் காண்
காண்…காண்…காண்...

Friday, December 20, 2019

வேடிக்கைப் பார்க்கிறீர்கள்

வேடிக்கைப் பார்க்கிறீர்கள்
ஒவ்வொன்றாய்க்
களவாடப்படுகின்றன
உங்கள் கண்கள்
களவாடப் போவது வரை
பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா

 

Monday, December 16, 2019

பறவை


சுவரில்
வரைந்த பறவை
எதிரே இருந்த
மரத்தில் போய்
அமர்ந்துகொண்டது
பிறகு வானத்திற்குப்
பறந்துவிட்டது
இப்போது
வரைந்துகொண்டிருக்கிறேன்
பறவையோடு
பறந்துகொண்டிருக்கும்
வானத்தை
-    ராஜா சந்திரசேகர்


Friday, December 06, 2019

*சிவப்பு நிற ஃபிரிட்ஜ்!

சற்றே உடல் பெருத்த
குழந்தை போன்றது
அந்தச் சிவப்பு நிற பிரிட்ஜ்

வீடு மாற மாற
அதுவும் இடம் மாறும்

பிரிட்ஜின் மீது
மூன்று படங்கள் ஒட்டப்பட்டிருந்தன

கால ஓட்டத்தில்
படங்களிலிருந்த ஒவ்வொருவரும்
இறந்து போயினர்

நீண்ட காலம்
சுணக்கமின்றி
வேலை செய்து வந்த பிரிட்ஜ்
ஒரு நாள் இறந்து போனது

பேரம் பேசி
அதை வாங்கிய இரண்டு பேர்
(படங்களைப் பிய்த்துப்போட்டுவிட்டு)
சிவப்பு சவப்பெட்டியைப் போல
அதைத் தூக்கிச் சென்றனர்

- *ஆனந்த விகடனில்(4.12.19) வெளியானது.