Sunday, October 31, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

220-

மெளனமாகி விட்டது
உணரும்போதெல்லாம்
சத்தமாகி விடுகிறது

221-

கோழை வனம்
ஒரு நாள் ஆகும்
பாலை வனம்

222-

பார்க்கத் தொடங்கினேன்
பார்த்தவைகளிலிருந்து
பார்க்காதவைகளை

தீராதது

அழுத்தி எழுதிய
பெயரில் இருந்தது
அப்பாவின் அன்பு

கடிதம் படிக்க
இன்னும் கிட்டும்
தீராத சுவை

Friday, October 29, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

218-

என் ஊனம் பெறும்
ஒரு நாள் ஞானம்
அதுவரை இது
யாத்திரை காலம்

219-

அறைக்கு வந்த குழந்தை
அள்ளிப் போகிறது
இருளை

Thursday, October 28, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

215-

உடலெங்கும்
காமத்தின் ஊழிக்கூத்து
திண்டாடுகிறான்
மனப்பாகன்

216-

கைதியிடம்
விடுதலை கேட்கிறது
சிறை

217-

அவர் வருவதற்காக
நான் காத்திருக்கிறேன்
நான் வருவதற்காக
அவர் காத்திருக்கிறார்
ஒருவரை ஒருவர்
பார்த்தபடி
காத்திருக்கிறோம்

நத்தையும் நானும்

நெடுஞ்சாலையைக்
கடக்கிறது நத்தை
பதட்டமின்றி

நெடுஞ்சாலையைக்
கடந்து முடிக்கிறது நத்தை
பதட்டமின்றி

நெடுஞ்சாலையைக்
கடந்து போகிறேன் நான்
பதட்டமின்றி

Tuesday, October 26, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

214-

உடலைத் திறந்தேன்
புழுக்கம் வெளியேறியது
புழுக்கத்தை திறந்து
நான் வெளியேறினேன்

எதிர்பார்ப்பு

தொடர்ந்து வரும்
பயணியை
எதிர்பார்த்திருந்தாள்
அவள் உடலோடு
முடிந்து போயின
பயணங்கள்

சொன்னதில்லை

பெரிதாக ஒன்றும்
சொன்னதில்லை
கவிதையில்
ஆனாலும்
கவிதைகள் எப்போதும்
என்னைப் பார்த்ததில்லை
சிறுமையாய்

Monday, October 25, 2010

வனம்

அணில் விட்டுச் சென்ற
வனம்
அறையெங்கும்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

212-

சொல்லெடுத்து
தரும் சொல்
சொல்வதில்லை
சொல்லென்று

213-

சந்திக்கும் போதெல்லாம்
முடிவுக்கு வருகிறது
பிரிவு

ஒலிக் குறிப்புகள்

என்னிடம்
வனம் தந்தனுப்பிய
ஒலிக் குறிப்புகளை
வாங்கிய மகள்
குதூகலத்துடன்
இசையாக வாசித்தபோது
அதன் உச்சியிலிருந்து
விழத்தொடங்கியது
அருவி

Friday, October 22, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

208-

கல் பறக்கிறது
எனச் சொன்ன தாளை
தூக்கிப் பார்த்தேன்
பாரமாக இருந்தது

209-

வயதின் மீதேறி
விளையாடும் நான்
குழந்தையாய்

210-

நின்றாலும்
இழுத்துப் போகும்
நடையின் நடை

211-

கையசைக்க
விடைபெறும்
ரயில்

Thursday, October 21, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

203-

உங்களின் நிறம்
என்ன என்று கேட்டார்
நிறங்களின் நிறம் என்றேன்
போய்விட்டார்

204-

மொழிகள் எதற்கு
கண் துளி
சொல்லும் அன்பு

205-

உள்ளோடும் நதி
நீச்சல் பழகும்
என்னிடம்

206-

மேடையை எதிர்பார்ப்பதில்லை
தனக்குள்
ஒத்திகை செய்பவன்

207-

ஒதுங்கி நின்றால்
ஒதுக்கப்படுவாய்
மையம் கைப்பற்று

Tuesday, October 19, 2010

நடந்து கொண்டிருப்பவன்

அவன் நடந்து கொண்டிருந்தான்

நடந்து நடந்து
நடந்து நடந்து

அவன் நடந்து கொண்டிருந்தான்

இருளில்
வெயிலில்
மழையில்
வனத்தில்
மலையில் என

அவன் நடந்து கொண்டேயிருந்தான்

நடந்து முடிக்கும்
தூரப் புள்ளிகளில்
தானே நின்று
தன்னை வரவேற்று
அனுப்பியபடி

வழித் தடங்களில்
வருபவர்களுக்கான
முகவரிகளை
விட்டுச் சென்றபடி

அவன் நடந்து கொண்டிருந்தான்

தன் கால்களுக்குள் நுழைந்து
இதயம் அடைந்து
மூளையிலிருந்து வெளியேறி
நின்று போகாத மந்திரத்தை
உச்சரித்தபடி

அவன் நடந்து கொண்டிருந்தான்

கடந்து கொண்டிருந்தான்

நீங்களும் அவனை
ஏதாவது ஒரு தருணத்தில்
பார்த்துவிட முடியும்

அல்லது

ஏதாவது ஒரு கணத்தில்
அவனாக மாறிவிட முடியும்

Sunday, October 17, 2010

கூக்குரல்கள்

வேண்டான்டா
உன் அம்மாவ நீ கெடுப்பியா

உன் அக்காவ
நீ அழிப்பியாடா

உன் தங்கிச்சிய
இப்படிச் செய்வியா

அம்மாக்களும்
அக்காக்களும்
தங்கைகளும்
கற்பழிக்கப்பட்டார்கள்

கற்பழிப்பாளர்கள்
சமூக கெளவரவங்களோடு
இன்னபிற
செல்வாக்குகளோடு
வலம் வந்தனர்

இருளில்
இருளைப்போலவே
புதைந்து போயின
கூக்குரல்கள்

Friday, October 15, 2010

வார்த்தைகளும் மீன்குஞ்சுகளும்

ஆழ்ந்த தியானத்தில்
காற்றை உள்ளிழுத்தபோது
கூடவே போய்விட்டன
சில வார்த்தைகளும்

மீன்குஞ்சுகளைப் போல
சுற்றின வார்த்தைகள்

ஒரு மீன்குஞ்சு
மெல்ல நகர்ந்து
ரத்தத்தில் ஓடிய
கெட்ட கனவுகளை
உட்கொண்டது

ஒரு மீன்குஞ்சு
இதயத்தில் தங்கிக்கிடந்த
வன்மத்தை
எடுத்துக்கொண்டது

தலைக்கு வந்த ஒன்று
அங்கு படிந்து போயிருந்த
புராதன கோபங்களைத் தின்றது

தியானத்தின் மூச்சு நீள
உள் சென்ற வார்த்தைகள்
வெளி வந்து விழுந்தன
இறந்த மீன்குஞ்சுகளாய்

ஒன்று மட்டும்
காப்பாற்றச் சொல்லி
போராடியது

இறுதியில்
என் மீது ஒட்டியிருந்தது
அது வீசிச் சென்ற
மரணத்தின் எச்சில்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

201-

வாளின் கண்களால்
போரைப் பார்க்கிறேன்

202-

நான் உதிரி
உதிர்ந்து போனாலும்
மறைந்து போகாத
மகா உதிரி

Wednesday, October 13, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

200-

மையப்புள்ளிகளை
மாற்றிக்கொண்டே இருக்கிறது
வட்டம்

வட்டங்களை
மாற்றிக்கொண்டே இருக்கிறேன்
நான்

என்னை
மாற்றிக்கொண்டே இருக்கிறது
பிரபஞ்சம்

Monday, October 11, 2010

பாவனை

கல்லெறிவதுபோல்
பாவனைச் செய்கிறது குழந்தை

வலிப்பதுபோல்
பாவனைச் செய்கிறேன் நான்

குழந்தை போனபின்
பார்த்தபடி நடந்தேன்
குவிந்து கிடந்த பாவனைகளை

பறவைகள்

1-

இல்லாதபோது
அலகால் கொத்தி
தா என
ராகம் எழுப்புகிறது
ஒரு பறவை

2-

துப்பாக்கியின் குறியை
மாற்றியபடியே பறக்கிறது
இறந்துபோக விரும்பாத
ஒரு பறவை

Thursday, October 07, 2010

குழந்தைகள்

1-

குதிக்கும் போதெல்லாம்
ஆகாயத்தைக்
கையள்ளும் குழந்தை

2-

குழந்தையின் கையில்
குழந்தை போலிருக்கும்
நாய்க்குட்டியை
குழந்தைபோல்
கொஞ்ச ஆசை

கேட்டுக் கிடைத்தது
தோல்விதான்

கையசைத்துவிட்டு
ஓடுகிறாள் குழந்தை
தன் சொர்க்கத்தைத் தராமல்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

194-

மனிதனைத்
திறக்கும் சொல் ஒன்று
காலங்காலமாய்
பூட்டியே கிடக்கிறது
தன்னைத்
திறந்து கொள்ளத் தெரியாமல்

195-

கிடைக்காது என
நினைக்கும் போதெல்லாம்
கிடைத்து விடுகிறது
ஏதோ ஒன்று

196-

எழுதாத தாளில்
விரிகிறது
வானம்

197-

உங்கள் பின்னால்தான்
வந்து கொண்டிருக்கிறேன்
ஆனாலும்
உங்கள் முன்னால்
சென்று கொண்டிருக்கிறேன்

198-

நடந்து போனவர்களின்
சுவடுகளில்
படிக்க எதுவுமே இல்லை

199-

கவிதையின் அடிவாரத்தில்
படுத்துக்கிடந்தேன்
நிம்மதியைப் போர்த்தியபடி

Wednesday, October 06, 2010

பார்வைகள்

நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் தாஜ்மஹாலை
எனக்குச் சொல்ல முடியுமா
உங்கள் வார்த்தைகளின் வழியே
அதைப் பார்த்துக் கொள்கிறேன் என்றார்
பக்கத்திலிருந்த பார்வையற்ற தோழர்

என் அறிவுக்கெட்டியபடி
அந்த அதிசயத்தைச்
சொல்ல ஆரம்பித்தேன்

இசை கேட்பது போல
அவர் தலையசைத்து
உள்வாங்கியதை
பிறகு சொல்லி
சரிபார்த்துக் கொண்டார்

அவர் வார்த்தைகளின் பார்வையில்
என்னால் தரிசிக்க முடிந்தது
இன்னொரு தாஜ்மஹாலை

Monday, October 04, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

193-

ஜன்னலோரம்
அமர்ந்த பறவையை
விரட்டிவிட்டு
எல்லோருக்கும்
இடம் வேண்டும்
என்று எழுத
எப்படி மனம் வந்தது

Friday, October 01, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

190-

போய்விட்டார்கள்
காலடித்தடங்களில்
நெளிகிறது மொழி

191-

நடந்து முடிந்த
அறுநூற்று அறுபத்தாறு
குற்றங்களையும் செய்த
குற்றவாளி நான்தான்
என்னை விட்டுவிட்டு
அறுநூற்று அறுபத்தியேழாவது
நபரை கைது செய்து
விசாரித்துக் கொண்டிருக்கிறீர்கள்
ஏதோ கிடைத்துவிடும் என்ற
அதீத நம்பிக்கையில்

192-

ஓவியம் என்று
சொல்லாதீர்கள்
ஒற்றை கோட்டை
ஒற்றைக் கோடு
என்றே சொல்லுங்கள்