Saturday, September 15, 2007

குழந்தைகள் உலகம்

தாளில் வரைந்த
வட்டத்தைத்
தள்ளிவிட்டாள் அம்முக்குட்டி

வெளியேறிய வட்டம்
சக்கரமானது

சமையல் கட்டில்
நுழைந்த சக்கரத்தைச்
சத்தம் போட்டாள் அம்மா

அங்கிருந்து
திரும்பிய சக்கரம்
அப்பா காலைத் தட்டியது

பூனை என்று
பயந்த அப்பா
உடனே உதைத்தார்

அடிபட்டு
முனகிய சக்கரம் எழுந்து
வீடு முழுதும்
விளையாடியது

கைதட்டிய அம்முக்குட்டி
சக்கரத்தைக் கூப்பிட்டாள்

முகதிருத்தத்தில் காயமாகி
ரத்தம் துடைத்து
வெளியே வந்த அப்பா
கிறுக்கலை நிறுத்திப்
படிக்கும்படித் திட்டினார்

அப்பாவைப் பார்த்த
அம்முக்குட்டி
வரையத்தொடங்கினாள்
பெரிய மீசை கொண்ட
பூனையை

Saturday, September 08, 2007

துக்கம் தராத பாடல்

தூக்கமற்ற இரவில்
வயலினைப் பார்க்கிறன்
இசைக்கலைஞன்

நதி எனப்பாய்ந்த
இசை ஊற்றுகள்
மறுபடி நனைக்கின்றன

இமைகளை
சேர்க்க விடாத இரவு
சத்தமிடுகிறது

தனக்குள் விழித்திருக்கும்
முகம் தெரியாத ஒன்றை
வாசிக்க விரும்புகிறான்

குழந்தையாகிறது
கைகளில் வயலின்

அடிவானத்தில்
வண்ணங்கள் பூசும்
விடியலைப் பார்த்தபடி
இசைக்கிறான்
யாருக்கும் துக்கம் தராத
ஒரு பாடலை

மழை வடிவில்...

மழை வடிவில்
கடவுள் வந்திருந்தார்
ஒழுகும் கூரை
உள்ளே இருப்பவர்களைப் பார்க்க

ஞாபகம் இருக்கிறது

ஞாபகம் இருக்கிறது
அவன் காசு கேட்கவில்லை
பசியை சொல்லவில்லை
தெருமுனையில்
குளிரில் விரைத்து
இறந்து போன கிழவன்
ஒரு கை நடுங்க
மறுகை கோர்த்து
அய்யா... ஒரு போர்வை
இருந்தா கொடுங்க
பல சமயம்
என்னிடம் கேட்டது
ஞாபகம் இருக்கிறது

Tuesday, September 04, 2007

இருள்பை

திரும்பிய இரவில்
இருளைக் கத்தரித்து
ஒரு பை செய்தேன்
ஒவ்வொரு பயமாய்
அதில் போட்டு வந்தேன்
வழி நெடுகிலும்
வீட்டை அடையும்வேளை
எதிர்படும் யாரிடமாவது
பையை மாற்றிவிடத் திட்டம்
என் நீளமான விசிலுடன்
சேர்ந்திருந்தன
வேறு சில குரல்களும்
ஒன்றை ஒன்று தின்ன
ஆரம்பித்த பயங்கள்
இல்லாமல் போயின
இருள்பை பிய்ந்து
இரவோடு போனது
கதவு திறந்து
கூப்பிட்டது வீடு
விசிலில் இணைந்திருந்தது
பாடலின் பல்லவி