1
நான் மூங்கில்
நீ தொடு
புல்லாங்குழலாகிறேன்
2
மனதில்
தோட்டம் இருக்கிறது
மெளனம் பறிக்கலாம் வா
3
நம்மை அழைத்துச் செல்லும்
பாதைகளா இவைகள்
கேட்கிறாய் நீ
நம் கேள்விகளுக்கான
பதில்களும்தான்
சொல்கிறேன் நான்
4
ஒரு முறை
உன்னைப் பார்த்துவிட்டுப்
போக வேண்டும் என்று
காத்திருக்கிறேன்
நீயோ
நான் போனபின்தான்
வரவேண்டும் என்று
காத்திருக்கிறாய்
5
குறைவான சொற்களை
வைத்துக்கொண்டு
நெடுங்கவிதை
எழுத முடியாது
என்கிறேன் நான்
நெடும் பயணம்
போக முடியும்
என்கிறாய் நீ
6
சந்திப்பும்
வலிதான்
பிரிவும்
வலிதான்
வலிகளைப்
பழகலாம் வா
7
மின்னல் வெட்டிய நேரத்தில்
அணைத்துக்கொண்டோம்
நமக்குள் இருந்த மின்னல்களைக்
கண்டுகொண்டோம்
8
உன் உள்ளிருக்கும்
கண்ணீரில்
கரைய விரும்புகிறது
என் பிரார்த்தனை
9
ரூமியின்
கவிதைப் போல
புன்னகைக்கிறாய்
எளிமையின்
கனவுப் போல்
பார்க்கிறேன்
- குங்குமம்(17.2.2017) இதழில் வெளியானது -