Sunday, February 27, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

388-

கண்ணீர்
எனது திரவ புன்னகை
என்றான்

யாராலும் அவனை
அழவைக்க
முடியவில்லை

389-

தயங்கி தயங்கி
சொல்ல நினைப்பவனை
கைவிடுகினறன
வார்த்தைகள்

தயங்காமல்
சொல்ல நினைப்பவனை
அழைத்துச் செல்கிறது
மொழி

390-

நுனி பிடித்து
நடக்கிறேன்

நுனி என்று
எதுவுமில்லை

நடக்கிறேன்

நுனி பிடித்து

எனை பிடித்து

391-

நீங்கள் சிந்திய சொல்
முள்ளாய்
விளைந்து கிடக்கிறது
சொல்லாமல்
சென்றுவிடுங்கள்

392-

அரங்கம் முழுதும்
பார்க்க வேண்டும்
மேடையில் நிற்கிறான்
மேடை பார்க்கிறது
அவனையும்
அரங்கையும்

Saturday, February 26, 2011

வழியும் இசை

மெல்லிய
தகரத்தின் மீது
விழும் மழை
இசையாகிறது

பிறகு
வழிகிறது இசை
தகரத்திலிருந்து

போதும்

சிறு புல்

சின்னஞ் சிறு
பனித்துளி

போதும்
ரசிக்க

வேறொன்றும்
தேவையில்லை
பெரிதாய்

திரும்பிக்கொண்டிருப்பவன்

போதை கூடி
நள்ளிரவில்
வீடு திரும்பிக்கொண்டிருப்பவன்
யார் யாரையோ சபிக்கிறான்

குழந்தைக்கு வாங்கிய
பொம்மை கீழே விழ
மிதித்துவிட்டுப் போகிறான்

நசுங்கிய பொம்மையின்
உயிர் கசிந்து அடங்குகிறது

பொம்மையை அள்ளியபடியே
ஓடிக்கொண்டிருக்கிறாள் மகள்

வழிமாறிச் செல்லும்
அப்பாவை கைபிடித்து
வீட்டிற்கு கூட்டிச் செல்ல

Friday, February 25, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

383-

பூமிக்கு பாரமாக
நான் விட்டுப்போகும்
இந்த காலடித்தடங்களை
மன்னித்துவிடுங்கள்

384-

பொருளற்றது
என் வாழ்க்கை
சொல்லிச்செல்கிறான்
வழிப்போக்கன்

385-

என்னை
வழி நடத்தும்
நானை
வழி கடத்த
முடியாது
யாரும்

386-

சொல்
மேல்
சொல்
அதன்
மேல்
சொல்
சொல்
இப்படி
மேல்
மேல்
சொல்
சொல் என
அடுக்கி வைத்து
உச்சி நின்று
குதிக்கிறேன்

உடல் வாங்கிய
நீரலையில்
ஒதுங்குகிறது
ஒவ்வொரு
சொல்லும்
சத்தமற்று

387-

என்னைப் பார்த்து
நிராயுதபாணி என
முன்னேறாதீர்கள்

ஆழ்மனத்தின்
ஆழத்தில்
பதுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன
கத்திகள்

அவளுக்கு

துடைத்து துடைத்து
கண்ணாடியைப்
போட்டுப் பார்க்கிறாள்
மூதாட்டி

ஆனாலும்
உடைந்து உடைந்தே
தெரிகிறது உலகு
அவளுக்கு

ஒற்றைச் சொல்

நீ எழுதிவைத்துவிட்டுப்
போயிருக்கும்
நன்றி என்ற
ஒற்றைச் சொல் மட்டுமே
இப்போது என்னிடமிருக்கிறது

ஒரு புத்தகத்திலிருக்கும்
மொத்த வாக்கியங்களைப் போல
அது கனக்கவும்
செய்கிறது

நுட்பம்

மிருதங்கம் வாசிப்பவரின்
விரல்களுக்கும்
வாத்தியத்துக்கும்
இடையில்
நீந்தும் இசை
அவர் காதுக்கு மட்டுமே
சென்று சேர்கிறது

காற்று
பிடிக்க நினைத்து
முடியாமல் போகிறது

பின் அந்த இசையை
அவர் வாசிக்கத் தொடங்குகிறார்
நமக்காக

இன்னும் நுட்பத்துடன்
விரல்களால்
இசையை செதுக்குவதைப்போல

Tuesday, February 22, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

377-

உங்கள் கண்ணீர்
உண்மையா
பொய்யா

நான் பொய்
கண்ணீர் உண்மை

378-

கிளையில் பறவை
தொங்க வந்தவன் ரசிக்கிறான்
அலகு கொத்துவதைப் பார்த்து

379-

பனிப்பாறை மேல்
படுத்திருந்தேன்
பாறை உருகுவதை நானும்
நான் உருகுவதை
பனியும் பார்த்தபடி

380-

ஒட்டடை
படிந்த தூரிகை
ஓவியத்தைப் பார்க்காது

381-

ஒத்திகை செய்யும் மரணம்
ஒருபோதும்
நேரத்தை சொல்வதில்லை

382-

விதியை
உருவாக்குபவர்களை
விதி ஒன்றும்
செய்வதில்லை

Monday, February 21, 2011

சுவை

உண்ட சுவை பற்றி
குழந்தை சொல்ல
தாய் பெற்றாள்
தின்ற சுவை

கடைசி வரி

கடைசி வரியில்
பட்டாம் பூச்சி பற்றிய
குறிப்பு இருந்தது

படிக்கும் போதே
பறந்து போனது

வியந்து பார்த்து
தாளுக்குத் திரும்ப
வரியும் காணாமல்
போயிருந்தது

மிச்ச உயிர்

அன்பை ஆயுதமாக்கி
போர் முடித்து
வெளியேறுகிறாய்

சிந்திக்கிடக்கும்
குருதியிலிருக்கும்
மிச்ச உயிர்
துடித்து அடங்குகிறது
அனாதையாக

Sunday, February 20, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

376-

நீங்கள்
திறந்து காட்டச்சொல்லும்
இந்த பெட்டியில்
என் மரணம்
மட்டுமே இருக்கிறது

திறந்து காட்டுங்கள்

பாருங்கள்

ஒன்றுமில்லையே

அதையேதான்
நானும் சொன்னேன்

ஒன்றுமில்லாததுதான்
உங்கள் மரணமா

ஆமாம்
வாழ்க்கையும் கூட

Saturday, February 19, 2011

மிதத்தல்

மிதந்தது பூ

காற்றில் அசைந்தது

நதியின்
அலைவுக்கேற்ப
நடனம் நிகழ்ந்தது

மிதந்தது பூ

மிதந்த பூ
படகானது

படகில்
இளைப்பாறிப்போனது
பறவை

பறவை சத்தம் கேட்டு
மீன்கள் வெளிகுதித்து
படகின் சுவரோரம்
முதுகுரசிப் போயின

இப்போது
அதே பூ
படகின் மேல்

கதிர்தீண்ட
ஒளித் திவளைகளுடன்
பார்த்தது

படகோட்டி
பூவை வணங்குகிறான்

மெதுவாய் எடுத்து
படகில் அமர்ந்திருக்கும்
இளவரசி தோற்றம்கொண்ட
பெண்ணிடம் பணிவுடன்
தருகிறான்

அதிசயத்தைப் போல
அவள் வாங்கி
முகர்ந்து
ரசித்து
கூந்தலில் வைக்கிறாள்

மெல்லத் தொடுகிறாள்

படகோட்டி
படகை வேகமாக்குகிறான்

பாய்ந்து வரும் காற்று

படகை
படகோட்டியை
அவளை
அவள் கூந்தலை
அவள் பூவைத்
தீண்டுகிறது

தலையிலிருந்து
நதி விழுவதுபோல்
நதியில்
விழுகிறது பூ

விழும் லாவகத்தில்
சில இதழ்கள்
தனியாகின்றன

முதலில்
மிதந்தது போலவே
இப்போது
மிதக்கிறது பூ

அலையின்
அசைவை வாங்கி
அசைகிறது

தொலைவாகும் படகை

அதிலிருந்து
தன்னை பார்த்து
கையசைக்கும் பெண்ணை
பார்த்தபடி

மிதக்கிறது பூ

Friday, February 18, 2011

முடிவுகள்

நீ உண்ணும்
இந்தத் தூக்க மாத்திரைகள்
உன்னை
ஆழ்ந்த
மிக ஆழ்ந்த
உறக்கத்திற்கு
இட்டுச் செல்லும்

அதன் பிறகு
நீதான்
முடிவு செய்யவேண்டும்

இதை
தற்கொலையாக
மாற்றப்போகிறாயா
என்பதையும்

இல்லை
இது ஒரு
தற்செயல் என
முடிவு செய்து
வாழ்க்கைக்குத்
திரும்ப போகிறாயா
என்பதையும்

Thursday, February 17, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

373-

கண்ணீர்
கவலையின் திரவமாகவும்
காயத்தின் மருந்தாகவும்

374-

ஓய்வே
உழைக்கச் சொல்கிறது

375-

இரவின் விளிம்பில்
வழியும்
கனவு

Wednesday, February 16, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

370-

அன்பை விநியோகிக்கவே
வந்தோம்

ஆயுதத்தை
தூக்க வைத்தீர்கள்

371-

எப்படி முடியும்
இந்த கவிதை

தெரியாது

எனக்கும்
கவிதைக்கும்

372-

யாருடனும்
போட்டியிட விரும்பாதவன்
தன்னிடமே
தோற்றுவிடுவான்.

சிறுமீன்

அடுக்கி வைத்துவிட்டுப்போன
வார்த்தைகளை
திரும்பவந்து
கலைத்தது குழந்தை
கலைத்த கடலுக்குள்
நீந்தும் சிறுமீன்
நான்

Sunday, February 13, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

364-

எல்லாமே
தொடர்ந்து வரவேண்டும்

எல்லாவற்றையும்
தொடந்து செல்லவேண்டும்

தவிர்க்க வேண்டும்
இந்த நினைவை

365-

மீன்தொட்டியில்
ஊற்றுகிறாள் குழந்தை
கொண்டுவந்த கடலை

366-

கதவடைக்கிறாய்
சாவிதுவாரத்தில்
பரவும் ஒளி
திறக்கப் பார்க்கிறது
உன் இருளை

367-

இந்தப் பள்ளத்தாக்கு
கடவுள் ஊற்றிய
வண்ணங்களால்
நிரம்பி இருக்கிறது

368-

வழி தப்பும் ஆடுகளாய்
நினைவுகள் போகும்
விரட்டிப் பிடித்தாலும்
வேறிடம் மாறும்

369-

தெரிந்தே
தொலைந்திருக்கிறேன்
தேடாதீர்கள்

Saturday, February 12, 2011

உறுத்தல்

இறந்த குழந்தையின்
மீது போர்வை
சிசுவின் மரணத்தை விட
உறுத்துகிறது
கடினமான துணி

அனுபவ சித்தனின் குறிப்புகள்

359-

கண்மூடித்
தூங்குவது போல்
நடித்தேன்
எழுப்பினார்கள்

கண்மூடி
தவமிருப்பதுபோல்
நடித்தேன்
எழுப்பச் சொல்கிறார்கள்

360-

உள் நெளியும் இருள்
வழி காட்டும்
வழியெல்லாம் ஒளி
தலையாட்டும்

361-

போனபின்னும்
முளைத்திருப்பேன்
உங்களில்
ஒருவரைப் போல

362-

கல்லெறிய
சொல்லெறிந்து
போனது காகம்

363-

திருத்திக்கொள்ளலாம்
எழுதுங்கள
தேடிக்கொள்ளலாம்
தொலையுங்கள்

Friday, February 11, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

357-

கண்ணாடியில்
பார்த்த அழுக்கைத்
துடைக்க துடைக்க
அழியாமல் தெரிந்தது
என் அழுக்கு

358-

நீங்கள் நல்லவரா என்று
எனக்குத் தெரியாது

நீங்கள் நல்லவரா என்று
உங்களுக்குத் தெரியுமா

Thursday, February 10, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

354-

வேரிலிருந்து
கிளைக்குத் தாவும்
மரம்

355-

முன்வலி போலில்லை
இவ்வலி
தடவிக்கொள்ளும் ஆறுதல்
குறைக்கப் பார்க்கும்
வலியின் வலியை

356-

மெளனம் என்பது
சத்தமில்லாதிருத்தல் அல்ல
சத்தத்தின் கரையில்
பூத்திருத்தல்

நுழைவாயில்

அந்த கவிதையை
அழித்து விடுங்கள்

மெல்ல

ரப்பருக்கு எதுவும்
தீங்கு நேராமல்

இல்லை
எரித்து விடுங்கள்
ஒரு தீக்குச்சியில்
எல்லாம் முடித்துவிடும்

அந்த கவிதை
இன்னும் உங்களில்
கனக்குமெனில்
மறுபடி
எழுதிப் பாருங்கள்

வேறு ஆழத்திலிருந்து
வேறு தளத்திலிருந்து
வேறு ஒன்றிலிருந்து

வாந்தி எடுப்பதுபோல்
அதுவே
வந்து சேருமெனில்
தயங்காதீர்கள்

அதையும்
முன்சொன்னதுப்போல்
செய்துவிடுங்கள்

அழிக்க வேண்டியதை
ஆக்கிக்கொண்டிருப்பதால்
எந்த பலனும் இல்லை

பேசாமல்
வார்த்தைகளற்ற
வெளியில் பயணித்துத்
தேடுங்கள்

உடனே
திரும்பி விடாதீர்கள்

ஓடோடி வந்து
தாளில் அப்பிவிடுவதால்
ஒன்றும் நிகழ்ந்துவிடாது

சரியான சமிக்ஞை
கிடைக்குமெனில்
அப்போது எழுதுங்கள்

சிக்கி இருப்பதே
வருமெனில்
நீங்கள்
அடைபட்ட கூண்டிலிருந்து
இன்னும் வெளிவரவில்லை
என்று பொருளாகும்

காத்திருங்கள்
மெளனம் பழகுங்கள்
வார்த்தைகள் ஊடாக
உயிர் நுழைத்துப் பாருங்கள்

பிறகு எழுதுங்கள்

இந்த தொடர்ந்த
செயல்பாடுகளில்
ஒன்று நீங்கள்
முடிந்துபோய்விடுவீர்கள்

அல்லது

கவிதையின்
ஒரு புதிய நுழைவாயிலை
கண்டடைவீர்கள்

Wednesday, February 09, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

351-

இதோடு
இந்த ஆட்டத்தை
முடித்துக்கொள்ளலாம்

இரண்டுபேரும்
வெற்றிபெற்றதாக
அல்லது
இருவரும் தோற்றுவிட்டதாக
அறிவித்துவிடலாம்

352-

ஓங்கிய வாள்
பயணம் செய்யும்
காலம் கிழித்து

353-

இங்கு எல்லாமே
ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன
ஒழுங்கற்று
நுழைவீர் எனில்
சவமாய் வெளியேறுவீர்கள்

சக்கர நாற்காலியில் உறங்கும் பூனை

சக்கர நாற்காலியில்
உறங்கும் பூனையை
வரைந்த ஓவியர்
மதிய களைப்பில்
சற்று கண்மூடினார்

வெயில்பட
கண் விழித்தது பூனை

உறங்கியவரைப் பார்த்தது

நிறங்களை முகர்ந்தது

பாய்ந்து
ஓடிப்போக எழ
சக்கர நாற்காலி
மெல்ல நகர
வந்த ஒலிகேட்டு
முன்போலவே
கண் மூடியது

ஜன்னல் மோத
எழுந்த ஓவியர்
பூனைமேல் விழுந்த
வெயிலை மூடி
வண்ணங்கள் எடுத்து
பூனைக்கு இன்னும்
உயிரேற்றத் தொடங்கினார்

Tuesday, February 08, 2011

ஒற்றை வாக்கியம்

ஒற்றை வாக்கியத்தை
சிதைக்க வந்தவனிடம்
ஒரு நொடி
அதைப் படித்துவிட்டு
அழித்துக்கொள் என்றேன்

படித்துக்கொண்டிருக்கிறான்
இன்னும்
முடித்தபாடில்லை

பக்கத்தில்
துரு ஏறிக்கொண்டிருக்கிறது
அவன் ஆயுதம்

எப்போதாவது

தொட்டுப்
பார்த்திருக்கிறீர்களா

பசிக்கு
கை நீட்டும்
குழந்தையின் கையை
எப்போதாவது

Monday, February 07, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

348-

ஒரே ஒரு
கண்ணீர்த்துளியோடு
உங்கள் அழுகையை
முடித்துக் கொள்ளமுடியுமா

வாய்விட்டுச் சிரிக்கிறேன்
வரும் ஒரு துளியோடு
நிறைவடைகிறது
நீங்கள் கேட்பது

349-

என் தியானம் கலைத்து
உள்ளிறங்குகிறது
ஒரு கல்
தன் தியான
இடம் தேடி

350-

கையிலிருந்த
ஆணியை அறைய
இறங்கிக்கொண்டிருந்தது
சுவரிலும் வானிலும்

Sunday, February 06, 2011

ஒரு சிறு கோடு

முன் திட்டம்
தயாராயிற்று

புத்திசாலித்தனமாக
வீழ்த்த வேண்டும்
ஓவியரை

அணுகினேன்

உங்களிடமிருந்து
எனக்கு ஒரு
சிறு கோடு மட்டும் போதும்
ஓவியம் எதுவும் வேண்டாம்

குவிந்துப் பார்த்தார்

அப்போது வரைந்திருந்த
காளிரூபம் கொண்ட பெண்ணின்
ஒரு பகுதியைக்
கிழித்துத் தந்தார்

அதிலிருந்தது
கோடு

நேராய்
வளைவாய்
பலவாய்

பிறகு போய்விட்டார்
தன் வண்ணங்களின்
குகைக்குள்

ஒரு கணம் நின்று
நடந்தேன்

என் கையில்
கோடும்
அதில் கனக்கும் பெண்ணும்

Wednesday, February 02, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

342-

பிஞ்சு ஒளி
நிரம்பி வழியும்
தேநீர் கோப்பையில்

343-

கனவில்
வருகிற கனவுகளை
பார்ப்பது எந்நாள்

344-

சுடர் பெயர்ந்து
போனது காற்றோடு

இருள் இருந்து
பேசுது என்னோடு

345-

என் இலையில்
பசியைப் பரிமாறியது
யார்

346-

மன்னிக்கவும்
உங்கள் வார்த்தைகளில்
சத்தம் மட்டுமே
அர்த்தம் இல்லை

347-

இருள் மெளனம்
என்று தோன்றியது
இருள் கழிந்தது
மெளனம் விட்டு

பறவையின் பெயர்

என் பெயர் சொல்லி
கூப்பிட்டது பறவை

எப்படி என் பெயர்
தெரியும் என்றேன்
ஆச்சர்யத்துடன்

நீயேதான்
சொன்னாய் என்றது

எங்கு
எப்படி

நீ ஒரு மரத்தை
கனவு கண்டபோது
அதன் கிளையில்
நான் வந்து அமர்ந்தேன்

அப்போது
விழுந்தது பழம்

நீ அதை எடுத்து
சுவைத்தபடி
உன் பெயர்சொல்லி
என் பெயர் கேட்டாய்

நீயே ஏதாவது
வைத்துக்கொள்
எனச்சொல்லிவிட்டு
பறந்துபோனேன் என்றது

அப்போது யோசித்த பெயரை
சொல்லி கூப்பிடுவதற்குள்
இப்போதும்
பறந்து போயிருந்தது

நான் மட்டுமே

இந்த அறையில்
நான் மட்டுமே
இருக்கிறேன்

இந்த கவிதையை
நான் மட்டுமே
வாசிக்கிறேன்

இந்த இச்சையை
நான் மட்டுமே
தீர்க்கிறேன்

இந்த அமைதியை
நான் மட்டுமே
கேட்கிறேன்

இந்த சுவரை
நான் மட்டுமே
உடைக்கிறேன்

இந்த மதுவில்
நான் மட்டுமே
கலக்கிறேன்

இந்த கண்ணீரை
நான் மட்டுமே
கடக்கிறேன்

இந்த ஒப்பனையை
நான் மட்டுமே
கலைக்கிறேன்

இந்த வேட்டையை
நான் மட்டுமே
நடத்துகிறேன்

இந்த காயங்களை
நான் மட்டுமே
மறைக்கிறேன்

இந்த சதுரங்கத்தை
நான் மட்டுமே
ஆடுகிறேன்

இந்த பிம்பங்களை
நான் மட்டுமே
சிதைக்கிறேன்

இந்த பறவையை
நான் மட்டுமே
அழைக்கிறேன்

இந்த தானியங்களை
நான் மட்டுமே
இறைக்கிறேன்

இந்தத் தடயங்களை
நான் மட்டுமே
அழிக்கிறேன்

இந்த கூட்டத்தில்
நான் மட்டுமே
வெளியேறுகிறேன்

இந்த கூண்டை
நான் மட்டுமே
திறக்கிறேன்

இந்த மிருகத்தை
நான் மட்டுமே
அனுப்புகிறேன்

இந்த கடிகாரத்தை
நான் மட்டுமே
நிறுத்துகிறேன்

இந்த இருளில்
நான் மட்டுமே
நடக்கிறேன்

இந்த உச்சத்தில்
நான் மட்டுமே
நிற்கிறேன்

இந்த நெருப்பை
நான் மட்டுமே
தீண்டுகிறேன்

இந்த விஷத்தை
நான் மட்டுமே
துப்புகிறேன்

இந்த விசாரணையை
நான் மட்டுமே
நடத்துகிறேன்

இந்த மாத்திரைகளை
நான் மட்டுமே
உண்கிறேன்

இந்த அறையில்
நான் மட்டுமே
இருக்கிறேன்

இந்த அறையில்
நான் மட்டுமே
இறக்கிறேன்