Tuesday, March 17, 2009

இந்த கவிதை
பூமியின் கனத்தைப் போன்றது
நீங்கள் தூக்குவதற்கு
ஏதுவாய்
பறவையின் இறகைப் போன்றது

வண்ணங்களின் நறுமணம்

ஓவிய அரங்கம்
நேரம் முடிந்து
மூடப்படுகிறது

பார்வையாளர்கள்
வெளி வருகின்றனர்

சிலர் கண்களில்
வண்ணம்
ஒட்டி இருக்கிறது

நிசப்த இரவில்
நிறங்கள்
ஆறாகப் பெருகி
அரங்கம் எங்கும்
வழிந்தோடுகிறது

நான்காவது ஓவியப் பெண்
ஓடி வந்து
ஏழாவது ஓவியத்திலிருக்கும்
பெரியவரை
நலம் விசாரிக்கிறாள்

மூன்றாம் ஓவியத்திலிருக்கும்
மஞ்சள் பூக்களை
இரண்டாவது ஓவியத்தின் குழந்தை
கை நீட்டிப்
பறித்து எறிகிறது

வண்ணங்களில்
விளையாடிப் போகின்றன
பூக்கள்

ஏழாவது ஓவியத்தில்
வராமல் பயந்தபடி
பார்க்கும் பூனையைத்
தூக்கி வருகிறாள்
ஒரு தாய்

அவள் கைகளை
நக்குகிறது பூனை
அன்பின் வண்ணங்கள் மின்ன

பசிக்கும் குழந்தை
நீலத்தை சாப்பிட்டு
பச்சை நீரைக் குடிக்கிறது

அடுத்த நாள் ஞாயிறு

விடுமுறை குதூகலத்தில்
எல்லோரும்

திங்களன்று
பார்வையாளர்கள் வருகைக்காக
கதவைத் திறக்கும் காவலாளி
காலடியில் தட்டுப்படும்
மஞ்சள் பூவை எடுத்து
மெல்ல முகர்ந்தபடி
ஓவியங்களைப் பார்க்கிறான்

வண்ணங்களின் நறுமணம்
அவனுள்
பரவத் தொடங்குகிறது

(ஆனந்த விகடன்,27.05.08 இதழில்
விடுமுறை வண்ணங்கள் என்ற தலைப்பில்
பிரசுரமானது)

Saturday, March 14, 2009

இரவல் சிறகுகள்

சிலையாகவும்
சிலை மீது
அமர்ந்திருக்கும்
பறவையாகவும் இருந்தேன்
ஒரு மாய கணத்தில்

இரவல் சிறகுகள் பெற்று
பறந்து போனது சிலை
பறவை சிலையாக

இப்போது நான்
தொலைவில் புள்ளியான
பறவையைப் பார்த்தபடி

பறக்க முடியாமல்
சிலைக்குள்
இருந்தபடி

நேத்ராவின் மீன்குட்டிகள்

புதிதாய் இடம் பிடித்தது
மீன் தொட்டி

குதிக்கிறாள் நேத்ரா

தன் குட்டி விரல்களால்
தொட்டுப் பார்க்கிறாள்

அவள் கண்களைப் போல்
அசைகின்றன மீன்குட்டிகள்

ஒவ்வொரு மீனுக்கும்
ஒரு பெயரை வைத்துக்
கூப்பிடுகிறாள்

கூப்பிடும் போதெல்லாம்
ஓடி வருகின்றன மீன்கள்

கைதட்டி எல்லோரையும்
அழைத்துக் காட்டுகிறாள்

மீன்குஞ்சுகள்
ஓய்வெடுக்கும் சமயங்களில்
அவள் வைத்த பெயர்கள்
நீந்துவதைப் பார்க்க முடிகிறது

Thursday, March 12, 2009

ஆசிர்வதிக்கப்பட்டவன்

இந்த பயணத்தில்
எங்கும் இறங்குவதாக
உத்தேசமில்லை
நான் வழிகளால்
ஆசிர்வதிக்கப்பட்டவன்

தங்குதல்

நெரிசல்களைத் தவிர்க்க
அடிக்கடி
தங்கிவிடுகிறேன்
கவிதைகளில்

கால வெளியில்

நள்ளிரவில்
கனவின் மீது
ஒரு அபூர்வ நட்சத்திரத்தின்
ஒளி கடந்து போனது

கனவும் ஒளியும்
சந்தித்த தருணத்தில்
மிதந்து கொண்டிருந்தேன்
எதுவுமற்ற
கால வெளியில்

Monday, March 09, 2009

புள்ளிகள்

எனது புள்ளிகளை
எடுத்துக் கொண்டபின்னும்
நூற்றுக்கணக்கான
புள்ளிகள் இருந்தன
நேர்க்கோட்டில்

அப்பாவின் சைக்கிள்

பல பயணக் கதைகளையும்
பல நூறு மைல்களையும்
தன்னுள் புதைத்து
வைத்திருக்கிறது
அப்பாவின் சைக்கிள்

ஓட்டும் போதெல்லாம்
ஒன்றிரண்டை சொல்வதுண்டு
என்னிடம்

Sunday, March 08, 2009

விசிறி விற்கும் பாட்டி
அவள் சொற்களிலிருந்து
இறங்கிப் போகிறது காற்று

தொலைந்து போதல்

கூட்டங்களில்
தொலைந்து போவது
பிடித்திருக்கிறது
அனுபவ நெரிசல்களோடு
திரும்ப வந்து சேர்ந்து
தனித்து நடக்கையில்
கூட்டம் தொலைந்து போவதும்
பிடித்திருக்கிறது

Sunday, March 01, 2009

குழந்தை,பட்டாம் பூச்சி மற்றும் நான்

தூங்கிக் கொண்டிருக்கும்
குழந்தை மேல்
சுற்றுகிறது பட்டாம் பூச்சி
ரசிக்க முடிகிறது இரண்டையும்
பட்டாம் பூச்சி போல்
என்னால்
குழந்தையை ரசிக்க முடியுமா
தெரியவில்லை

வார்த்தைகளின் நடனம்

எவ்வளவோ கூப்பிட்டும்
வந்து சேராமல்
நனைகின்றன
சில வார்த்தைகள்
பூர்த்தியாகாதக் கவிதை
ரசிக்கிறது
மழையோடு சேர்ந்து
வார்த்தைகளின்
நடனத்தையும்