Sunday, January 30, 2011

காரணம்

பல காரணங்கள்
சொல்லியாயிற்று
நான் வாழ்வதற்கு

செவி குவித்து
கேட்காதது
உங்கள் தவறுதான்

பல நூறு காரணங்கள்
சொல்லியாயிற்று
நான் வாழ்ந்தே தீருவதற்கு

செவி குவித்து
கேளாதுபோனது
உங்கள் தவறுதான்

சரி
இப்போது கேளுங்கள்

ஓரே ஒரு
காரணம்தான் இருக்கிறது

நான் மரணித்துப் போகாமல்
இருப்பதற்கு

ஒரே ஒரு காரணம்

நான் வாழ வேண்டும்

Saturday, January 29, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

340-

நான் மரமல்ல
இளைப்பாறிச்செல்ல

341-

பசியிடம் சொன்னேன்
நீ சாப்பிட்டதுபோல்
நினைத்துக்கொள்

பொய்கூழ் ஊற்றி
என் நெருப்பை
வீரியமாக்குகிறாய்
சொல்லியபடியே
சுட்டது பசி

நிலம்

கன்னிவெடி பதிக்கப்பட்ட
நிலத்தின் மீது
ஓடி வந்துகொண்டிருக்கிறது
ஒரு குழந்தை

கன்னிவெடி பதிக்கப்பட்ட
நிலத்தின் மீது
ஓடி வந்துகொண்டிருந்தது
ஒரு குழந்தை

Thursday, January 27, 2011

நன்றி பிகாஸோ

பிகாஸோவுடன்
பேசிக்கொண்டிருந்தேன்
கனவிலிருந்து
வெளியேறும் வரை

கடைசி தருணத்தில்தான்
பார்த்தேன்

அவர் என் பெயரை
எழுதிவிட்டுப்
போயிருப்பதை

பாதரசம் போல்
ததும்பியது பெயர்

என்னையே வரைந்திருக்கலாமே
என்ற ஆதங்கத்துடன்
பெயரை ஊத
முகம் வந்தது

என் முகம்தான்

நம்புங்கள்

என் முகமேதான்

நன்றி பிகாஸோ

Monday, January 24, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

334-

கனவில் கொட்டுகின்றன வண்ணங்கள்
எழுகிறான் ஓவியன்
ஓவியங்களைப் பிடிக்க

335-

ஏறி
ஏறி

மேலேறி
மேலேறி

வானம்
மேலேறி

336-

காட்டிய இடத்தில்
எதுவுமில்லை என்றார்

எதுவுமில்லாததைதான்
காட்டினேன் என்றேன்

பார்க்க ஆரம்பித்தார்
எதுவோ இருப்பதுபோல்

337-

நொடிக்கும்
குறைவான கணத்தில்
இறந்துபோனது
நசுக்கிய எறும்பு

பெரும் குற்றமாகி
நசுக்குகிறது
அதன் ஆயுளின் கனம்

338-

அமைதியில்
தொடங்குகிறது
பாடலின் இசை

339-

வாங்கிக்கொண்டீர்களா
என்கிறீர்கள்

வெறும் கை
எங்களிடம்

கிடைத்தது
உங்களிடம்

சேர்ந்து சொல்கிறோம்

வாங்கிக்கொண்டோம்

Sunday, January 23, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

330-

இது தவமல்ல

வெறும் கண்மூடல்தான்

நீங்கள்
கல்லெறியலாம்

331-

என் கேள்வி உங்களை
பாரமாக அழுத்துகிறதா

இல்லை
விடையாக இலேசாக்குகிறது

332-

கிளையில் ஏறிய எறும்பு
கேட்டது மரத்திடம்
பாரமாக இருக்கிறேனா
கிளை அசைத்து
சொன்னது மரம்
உன் கேள்விதான்
பாரமாக இருக்கிறது

333-

நீங்கள் நினைத்த இடத்தில்
முடித்துக்கொள்ளலாம்

நினைக்கும் இடத்தில்
தொடங்கலாம்

அதுபோல்
வடிவமைக்கப்பட்டிருக்கிறது
இந்தக் கவிதை

Sunday, January 16, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

324-

நாடகம் முடித்து நடக்க
தொடர்நது வந்தது
மேடையின் குரல்

325-

சொல்வதற்கு ஒன்றுமில்லை
சொற்களிலும்
ஒன்றுமில்லை

326-

குழந்தையின் கண்கள்
எனக்கு

இளமையா
உலகம் இருக்கு

327-

வாசிக்காத போதும்
வாசித்தவன் கேட்கிறான்
இசையை

328-

வெள்ளைதாள் முழுதும்
தேடினேன்
எழுத

329-

பிடி தராவிட்டாலும்
எட்டிப் பிடித்துவிடுகின்றன
ஒன்றிரண்டு

Saturday, January 15, 2011

தொடர்ந்து...

தொடர்ந்து தோற்கிறாய்
தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறாய்
தொடர்ந்து காக்க வைக்கப்படுகிறாய்
தொடர்ந்து இறக்கி விடப்படுகிறாய்
தொடர்ந்து வெளியேற்றப்படுகிறாய்
தொடர்ந்து துரத்தப்படுகிறாய்
தொடர்ந்து தூக்கி எறியப்படுகிறாய்
தொடர்ந்து காயங்கள் பெறுகிறாய்
தொடர்ந்து முகவரி மாற்றப்படுகிறாய்
தொடர்ந்து ஒளித்து வைக்கப்படுகிறாய்
தொடர்ந்து அனாதையாகிறாய்
தொடர்ந்து மையம் இழக்கிறாய்
தொடர்ந்து துண்டிக்கப்படுகிறாய்
தொடர்ந்து ரத்தம் சிந்துகிறாய்
தொடர்ந்து இறந்து போகிறாய்
எத்தனையோ தொடந்தாலும்
தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறாய்

Friday, January 14, 2011

கோப்பையில்

போதையின்
தீப்பற்றி எரிய
மதுவும் நானும்
வழிகிறோம்
கோப்பையில்

ஒன்று

ஒன்றுதான்

கால் தாவிப்போகும்
மலையாகவும்

கை குவித்து ஆடும்
கல்லாகவும்

இரண்டும்
ஒன்றுதான்

Thursday, January 13, 2011

பார்த்துக்கொள்

பார்த்துக்கொள்

காணாமல்போனவர்கள் பட்டியலில்
உன் பெயர் வராமல்
பார்த்துக்கொள்

கோழைகளின் குவியலில்
உன் நிழல் விழாமல்
பார்த்துக்கொள்

குழந்தைகளின் கண்களில்
கண்ணீர் துளிர்க்காமல்
பார்த்துக்கொள்

பார்த்துக்கொள்

உன் குதிரையை
தூங்கவிடாமல்
பார்த்துக்கொள்

உன் காலண்டரில்
ஒட்டடைப் படியாமல்
பார்த்துக்கொள்

உன் கண்ணீரை
கடலாகாமல்
பார்த்துக்கொள்

உன் கனவுகளை
ஒதுங்கிப் போகாமல்
பார்த்துக்கொள்

உன் அன்பை
வியாபாரமாக்காமல்
பார்த்துக்கொள்

பார்த்துக்கொள்

உன் தனிமையை
துணை தேடாமல்
பார்த்துக்கொள்

உன் பூக்களை
உதிராமல்
பார்த்துக்கொள்

பார்த்துக்கொள்

உன் கால்களை
நிற்காமல்
பார்த்துக்கொள்

உன் ஜன்னல்களை
மூடாமல்
பார்த்துக்கொள்

உனது வயதை
வருந்தாமல்
பார்த்துக்கொள்

பார்த்துக்கொள்

உன் தோல்வியை
பாடமாகப்
பார்த்துக்கொள்

தருணங்களைத்
தவறாமல்
பார்த்துக்கொள்

எழும்போது
விழாமல்
பார்த்துக்கொள்

விழும்போது
உடையாமல்
பார்த்துக்கொள்


பார்த்துக்கொள்

சுற்றத்தை
சொர்க்கமாகப்
பார்த்துக்கொள்

நட்பை
நுட்பமாகப்
பார்த்துக்கொள்


வாழ்க்கையை
ஈர்ப்பாகப்
பார்த்துக்கொள்

மரணத்தை
நட்பாகப்
பார்த்துக்கொள்

பார்த்துக்கொள்

உலகத்தை
உன்னைப்போல்
பார்த்துக்கொள்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

320-

கடலாய்
விரியும் காமம்
துளிக்குள் பதுங்கும்

321-

முத்தங்கள்
அடியில்
அன்பின் விஷம்

322-

உறக்கத்தின்
ஏதோ ஒரு ஓரத்தில்
விழித்திருக்கிறேன்

323-

சிக்காமல் வெளிவந்தேன்
இருந்தும் வதைக்கிறது
சிக்கிக்கொண்ட
துகள்களின் துயரம்

Tuesday, January 11, 2011

திறத்தல்

மெளனத்தைத் திறக்க
ஒவ்வொருவரும்
சாவிகள் தயாரிக்க
மெளனத்தாலேயே
திறக்கிறது
ஒரு குழந்தை

விழுங்குதல்

உன் பெயரை
விழுங்குகிறேன்
விதையைப் போல

நீ உள்ளோடி
வேர்பிடித்து
வனமாகி விரிகிறாய்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

315-

இரவு
பார்க்காவிட்டால் என்ன
இருள் பார்க்கிறது

316-

எதுவும் கேட்காமல்
வெளியேறுகிறாய்
நீ எவ்வளவோ
எடுத்துப்போவதுபோல்
தோன்றுகிறது

317-

முன்நாக்கு வரை
கொண்டுவந்த ஓவியத்தைப்
போட்டுக் கிழித்தேன்
சொற்களின் குழப்பத்தால்

318-

புள்ளியைத் தொட்டேன்
ஒளிந்திருந்த மேகம்
நனைத்துச் சிரித்தது

319-

அமைதியாக
வெளியேறச் சொல்கிறார்கள்
அமைதியை வெளியேற்றத்
துடிப்பவர்கள்

பிறகு

இந்த நேரம்
பிறகு கிடைக்காது
சொல்லிவிடுங்கள்

இந்த நேரம்
பிறகு வராது
செய்துவிடுங்கள்

இந்த நேரம்
பிறகு வாய்க்காது
பேசிவிடுங்கள்

இந்த நேரம்
பிறகு இருக்காது
பார்த்துவிடுங்கள்

இந்த நேரம்
பிறகு அரும்பாது
முளைத்துவிடுங்கள்

இந்த நேரம்
பிறகு பேசாது
கேட்டுவிடுங்கள்

இந்த நேரம்
பிறகு பிறக்காது
வாழ்ந்துவிடுங்கள்

இந்த நேரம்
பிறகு பார்க்காது
பார்த்துவிடுங்கள்

இந்த நேரம்
பிறகு திரும்பாது
எழுதிவிடுங்கள்

Sunday, January 09, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

307-

நானூற்றிய நான்
வழிகிறது
நானற்ற வெளியில்

308-

எத்தனையோ முறை
பதுங்கிப்போனேன்
ஒரு முறையும்
பாயக்காணோம்

309-

யார் அள்ளிப்போட
மனதில் தேங்கிய
மலம்

310-

நான் சென்றபோது
யாருமில்லை
வெளியேறியபோது
எல்லோரும்
இருந்தார்கள்

311-

வாடிப்போயிருக்கிறது
வனத்தின் ஞாபகம் வந்த
பால்கனிச் செடி

312-

கண் மூட
கண்டேன்
தூசிகளின் தியானம்

313-

எவ்வளவோ கிடைத்தும்
நழுவிப்போனவை மீதே
தொற்றித் திரிகிறது ஏக்கம்

314-

அப்பாவும் நானும்
ஒன்றாகவேப் பிறந்தோம்
வேறு வேறு வருடங்களில்

Friday, January 07, 2011

முடிந்தபின்

ஒவ்வொரு துளையிலும்
வார்த்தைகளைப்
போட்டுக்கொண்டே வந்தேன்
முடிந்தபின்
வாசித்தேன் வார்த்தைகளை
பாடியது புல்லாங்குழல்

வயது

உடைந்துபோன
தாத்தாவின் கைத்தடியில்
ஒரு துண்டை
எடுத்துப் பார்த்தேன்
வயது குறைந்தது போலிருந்தது

விழித்தபடி

அவள் கடைசி ஆசையைச் சொன்னாள்

ஒரு மெழுகுவத்தி வெளிச்சத்தில்
இறந்துபோக வேண்டும் என்று

அவள் கண்மூடும் வரை
விழித்தபடியே இருந்தது மெழுகுவத்தி

நெருக்கம்

தள்ளி நிற்கும்
பெண்ணுக்கும் எனக்கும்
நடுவில்
நெருக்கமாய் நிற்கிறாள்
அதே பெண்

Tuesday, January 04, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

306-

என் திருச்சபையில்
என்னை மன்னித்துவிட்டேன்
தலை வெட்டப்போகும்
உங்கள் தீர்ப்பைக் கொஞ்சம்
தளர்த்தப் பாருங்கள்

பிரம்புக்கடியில்

அம்மாதான் சொன்னாள்
அப்பாவின் பிரம்புக்கடியில்
அன்பு இருப்பதை
அதன் பிறகு
வலிக்கவேயில்லை

நீங்கள்

இந்தக் கவிதையின் உள்ளிறங்கி
நீங்கள் வருகையில்
எதிர்பார்த்திருப்பேன்
உங்களை வரவேற்க்க

வராமல்
திரும்பிவிடுவீர்கள் எனில்
காத்திருப்பேன்
உங்களை வழியனுப்ப

Monday, January 03, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

300-

வானம் கொறிக்கும் பறவைக்கு
தானியமாகிறது
மழை

301-

நீண்ட சுவர்
உலகத்தை மறைக்கிறது
ஒற்றை ஜன்னல்
உலகத்தை இணைக்கிறது

302-

மிதந்தபோது
இறந்துபோனேன்
இறந்தபோது
புதைந்துபோனேன்

303-

தனியாய்
எனக்கெதுவும்
அடையாளமில்லை
எல்லாமே அன்புதான்

304-

கடல் உண்ட மலைப்பாம்பு
இறந்துபோனது
விக்கல் எடுத்து

305-

நுனி நாக்கில்
முறிந்து கிடக்கும் மரம்
சொற்களின் பாரம் தாங்காமல்

Sunday, January 02, 2011

அதே பெயர்

கடந்துபோன பெண்ணுக்கு
நானே ஒரு பெயர் வைத்து
மெளனமாய்க் கூப்பிட்டேன்

அதே பெயரைச் சொல்லி
யாரோ அவளைக் கூப்பிட்டார்கள்

அவள் வந்துகொண்டிருந்தாள் இங்கும்
சென்றுகொண்டிருந்தாள் அங்கும்

Saturday, January 01, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

297-

ஒற்றை வரி
உறங்குகிறது
அதில் மொத்த கவிதையும்
விழித்திருக்கிறது

298-

பொய் வண்ணங்கள்
தொட அஞ்சுகிறது
தூரிகை

299-

சத்தமின்றி
காலருகே
வரும் பாதை
நடக்கையில்
முன்போய்
விரிந்து
வழி காட்டும்

300-

படிக்காத புத்தகம்
என் சோம்பலைப்
படித்தபடி

அபியின் கவிதை

விடிவதற்கு இன்னும்
நேரமிருக்கிறது
என்று முடியும்
அபியின் கவிதையில்
தொடங்கும் கவிதையை
எப்படி கண்டெடுப்பது

பொய்

குழந்தைக் கேட்டாள்

அப்பா பொய்
சொல்கிறீர்களா

முன்சொன்ன
எல்லாப் பொய்களையும் விட
இல்லை என்று
அப்போது சொன்ன பொய்
கொன்று போட்டது என்னை

நண்பர்

யார் என்றேன்

உங்கள்
நண்பரின் நண்பன் என்றார்

எந்த நணபர் என்றேன்

சிரித்தார்

நான் நண்பர்களை
யோசித்துக்கொண்டிருந்தேன்

அவர் நண்பராகிக்கொண்டிருந்தார்