ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Friday, June 27, 2014
பிரார்த்தனை
என் பிரார்த்தனையில்
உப்புக் கரித்தது
என்றார் கடவுள்
கண்ணீர் கலந்திருந்தது
என்றேன் நான்
Thursday, June 26, 2014
ஒரு வரி போதும்
இறந்து போக
எத்தனையோ தருணங்கள்
இருக்கின்றன
உயிர்த்தெழ
ஒரு வரி போதும்
பயம் மேயும் ஆடு
பயம் மேயும் ஆடு
என்ற வரியை
அடுத்த வரியில்
வந்த சிங்கம்
அடித்துக் கொன்றது
Saturday, June 14, 2014
தெரியவில்லை
குட்டிப்பூனைப் போல
கண்கள் மெல்ல
வெளியே வந்து
உடல் மேல் குதித்து
விளையாடுகிறது
எப்படிப் பார்க்கிறேன்
தெரியவில்லை
Friday, June 13, 2014
நான் கடவுளுடன் விளையாடுகிறேன்
நான் கடவுளுடன்
விளையாடுகிறேன்
கடவுள் பட்டாம்பூச்சியுடன்
விளையாடுகிறார்
பட்டாம்பூச்சி என்னுடன்
விளையாடுகிறது
சொல்கிறாள் மான்யா
அவள் சொற்களில் மயங்கி
கடவுளைப் பார்க்காமல்
விட்டு விட்டேன்
Tuesday, June 10, 2014
கடந்து போ
சில சொற்களை
நகர்த்தி
பல மைல்
கடந்து போ என்றவர்
தொலைதூரம்
போயிருந்தார்
Sunday, June 08, 2014
ஒரு பறவை
அந்தரத்தில்
மிதக்கும் என்னை
ஒரு பறவை
தொட்டுத் தள்ளிவிட்டுப்
போகப் பார்க்கிறது
வைக்கோல் கன்றுக்குட்டி
கண்களில்
ஆச்சர்யம் குவித்து
இந்த கன்றுக்குட்டிக்கு
அம்மா யார்
கேட்கிறாள் குழந்தை
குழந்தையின் குரலில்
உயிர் பெற்ற
வைக்கோல் கன்றுக்குட்டி
தன் தாயைத் தேடி
ஓடுகிறது
Monday, June 02, 2014
பொம்மை
தற்கொலை செய்துகொண்டது போல்
தண்டவாளத்திற்குப் பக்கத்தில்
கிடக்கிறது பொம்மை
ஆடு மேய்க்கும் சிறுமி
ஓடி வந்து எடுத்துப் போக
மெல்ல உயிர் வருகிறது
பொம்மைக்கு
Newer Posts
Older Posts
Home
View mobile version
Subscribe to:
Posts (Atom)