Monday, May 31, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

106-

மனம் கண்ட வலி
உருள்கிறது பந்தென
கால் உதைத்த பந்து
உடைகிறது பனியென

107-

பறவையோடு நண்பனானேன்
பறப்பதும்
நட்பாயிற்று

108-

இன்று நான்
எந்த எறும்பையும்
கொல்லவில்லை
இதோ என் கையில்
ஊர்ந்து செல்லும்
இந்த எறும்பு உட்பட

109-

என்ன வேண்டும் என்று
எனக்குத் தெரியவில்லை
என்பது கூட
எனக்குத் தெரியவில்லை

110-

என்னைத் தின்னத்தொடங்கிய கனவு
அதிகாலையில்
ஒப்படைத்துப் போனது முழுமையாய்

Saturday, May 29, 2010

விரல்களுக்கிடையில்...

விரல்களுக்கிடையில் பென்சிலை
சுழற்றுகிறாள் சிறுமி
பென்சிலுக்குள் இருந்து
பிளிறும் சத்தம் கேட்க
வரையத் தொடங்குகிறாள் யானையை
தும்பிக்கை பாய்ச்சலுடன்

Thursday, May 27, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

101-

எந்த கல்லறையிலும்
நான் இல்லை
திரும்புகிறேன் ஏமாற்றத்துடன்

102-

ஜென் தோட்டத்தில்
வண்ணத்துப்பூச்சி
அழைக்கிறது என்னை

103-

வழிப்போக்கன் பாடலில்
விழித்தெழுகின்றன
சாலைகள்

104-

இறந்த மீனுக்குள்
இறந்து போயிருந்தது
கொஞ்சம் கடலும்

105-

ஆழ்மனத்தில்
மிதக்கும் இலை
நான்தான்

கொண்டு வந்த மழை

ஏணி வரைந்தாள் குழந்தை
இதில் எவ்வளவு
உயரம் போகலாம் என்றேன்
வானம் வரை என்றாள்
போய் வந்ததை
உறுதி செய்வதுபோல்
கொண்டு வந்த மழையை
முகத்தில் தெளித்தபடி ஓடினாள்

Sunday, May 23, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

98-

தோன்றுவதில்
எனக்கும் சில
தோன்றுகிறது

எது சரி

தோன்றுவதா
தோன்றியதா

99-

உன் உள்ளொளி
இருளென்றது
இருள்

உன் உள்ளிருள்
ஒளியென்றது
ஒளி

100-

அன்பு மட்டுமே
என்னிடம் இருக்கிறது
எவ்வளவு தூரம் போகலாம்

நீங்கள் பாக்கியவான்
உங்கள் அன்பு முன்
உலகம் ஒரு கைக்குட்டை
நீங்கள் வெகுசுலபமாய்
சுருட்டி விடலாம்
அல்லது வெகுவேகமாய்
கடந்து விடலாம்

Thursday, May 20, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

93-

எப்போதும் பயணிப்பவன்
பார்த்துக் கொண்டிருப்பான்
திசைகளை மணிகளாக

94-

இரவு நகர்கிறது
எறும்பு போல
கனவின் மீது

95-

பசியால் திருடியவனை
அடைத்தார்கள்
தப்பித்துப் போனான்
பசியால்

96-

தந்தது எதையும்
கேட்பதில்லை உலகம்
உலகம் போல்
உள்ளம் வேண்டும்

97-

கூண்டிலிருந்த பறவை
வெளியேறி விட்டது
கூண்டிற்கு
சுதந்திரம் கிடைத்து விட்டது

மலை சொன்ன கதை

ஏறும்போது
கேட்டுக்கொண்டே சென்றேன்
மலை சொன்ன கதையை

இறங்கும்போது
திரும்ப
அதனிடம் சொல்லி
சரிபார்த்துக் கொண்டேன்

Monday, May 17, 2010

எனக்கானது

மெளனத்தின் மீது
அமர்ந்திருந்த பறவையை
விரட்டினேன்
அது போனபோது
விழுந்த சிறகில்
எழுதி இருந்தது
மெளனத்திற்கான நன்றியும்
எனக்கான தண்டனையும்

Thursday, May 13, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

90-

நிரம்பி வழிகிறது
மழை
சவப்பெட்டியில்

91-

எழுதாத கவிதை
எழுதிய பிறகும் இருந்தது
எழுதாத கவிதையாக

92-

என்னுள் போகும்போது
கதவுகளே இல்லை
திரும்பும்போது
நானே இல்லை

போதைகள்

வாகனங்கள் சாலையை
கிழித்துக் கொண்டிருந்தன


போதையில் விழுந்து கிடந்தவன்
சொல்லிக் கொண்டிருந்தான்

என் உடைந்த
காலைத் தேடுகிறேன்

அவனை முழுசாய்
பார்த்தவன் சொன்னான்

நீ முதலில்
காலை உடை
பிறகு தேடு

சாலை வாகனங்களால்
கிழிந்து கொண்டிருந்தது

Tuesday, May 11, 2010

உலகின் கரம்

எங்கள் வலிகளை
நீங்கள் எழுதினீர்கள்

எங்கள் ரத்தங்களை
நீங்கள் எழுதினீர்கள்

எங்கள் கண்ணீரை
நீங்கள் எழுதினீர்கள்

எங்கள் மரணங்களை
நீங்கள் எழுதினீர்கள்

எங்கள் துயரங்களை
நீங்கள் எழுதினீர்கள்

இன்ன பிற
தேடி எழுதினீர்கள்

உங்கள் வரிகளில் வந்த
அவை எல்லாம்
பாராட்டைப் பெற்றது

பரவலாக
வரவேற்பை பெற்றது என்று
புளகாங்கிதம் கொண்டீர்கள்

பின் போய்விட்டீர்கள்
வேறு ஒன்றுக்கு

நிகழ்ச்சி நிரலில்
மாற்றம் வேண்டும்
உங்களுக்கு

இப்போது

எங்கள் வலி
கூடுதலாகி

எங்கள் ரத்தம்
உறைந்துபோய்

எங்கள் கண்ணீர்
திசைகள் இழந்து

எங்கள் மரணம்
கணக்கைத் தொலைத்து

எங்கள் துயரம்
தனிமை சேர்த்து

உலகின் கரம் நீளமானது
என்று சொன்னவர்களே
அது எங்களை நோக்கி
எப்போது நீளும்
சொல்ல முடியுமா

Saturday, May 08, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

87-

கடக்க கடக்க
கால்களுக்கிடையில்
பிடிபடும் உலகு

88-

எந்த சத்தமும் எழுப்பாமல்
பிணத்திற்கு சமமாய்
இந்த மெளனம்

89-

என் உள் உள்
உள்
உள்
நான் காணா
உள் உள்

Thursday, May 06, 2010

இப்போது

வரைந்த சிலுவையின் மேல்
வந்தமர்ந்தது பறவை

உடல் குவித்தபோது
சில துளிகள்
சிறகுகளைப் போல
பறந்து விழுந்தன

எப்படி உன்னால்
அமர முடிந்தது

கேள்வியை அலகால்
கொத்திக் கொண்டு
பறந்து போனது

இப்போது சிலுவைமேல்
பறவை ஓவியமாய்

பறவையின் கீழ
சிலுவை உண்மையாய்

Tuesday, May 04, 2010

நடுங்கும் கை
அனுமதிக்கும் போதெல்லாம்
முதியவர் குடிக்கிறார் காப்பியை

அனுபவ சித்தனின் குறிப்புகள்

81-

என்னை அடுக்குகையில்
பலவீனமானவர்கள்
கலைந்து போனார்கள்
பலமானவர்கள்
இணைந்து போனார்கள்

82-

வெளியே வந்தவன்
மெல்ல அழிக்கிறான்
சிறை பிம்பத்தை

83-

சுவாசிக்கையில்
சிறைபடும்
சுதந்திர காற்று

84-

உள் சிந்தி
ரத்தம் கலக்கும்
ஒளித்து வைத்த கண்ணீர்

85-
உழைத்து முடித்தவன்
தன் வியர்வையை
பார்த்துச் சொன்னான்
ஏன் சோம்பேறித்தனமாக
உருள்கிறாய்
வேகமாய்ப் போ

86-

தூண்டிலில் மாட்டிய மீன்
இறந்து கொண்டிருந்தது
இறப்பது தெரியாமல்

Monday, May 03, 2010

நான்காவது முறை

நான்காவது முறையாக
தற்கொலைக்கு முயற்சித்தவன்
மனதிற்குள் சொன்னான்
இந்த முறையும்
தோற்றுப் போக வேண்டும்

Sunday, May 02, 2010

புல்லாங்குழலில் விழுந்த எறும்பு

விரல்களால் பேசுகிறார்
பியானோவுடன்
வாசிக்கும் பெரியவர்

----

என் ஆரவாரம் எறியும் பூக்கள்
வாங்கிக் கொண்டோடும் நதி
இசைலயத்துடன்

---

புல்லாங்குழலில் விழுந்த எறும்பை
எடுத்துப் போட்டேன்
இசையில் விழுந்த எறும்பை
முடியவில்லை

இரண்டு குழந்தைகள்

விழும் போதெல்லாம்
எழுந்து விடுகிறது குழந்தை
தன்னைப் பிடித்து

---

விழிக்காத அம்மா
அவள் தூக்கத்தில்
ஏறி விளையாடும் குழந்தை

அனுபவ சித்தனின் குறிப்புகள்

78-

உறங்கும் போது
தொலைத்த நேரங்களை
தேடுகிறேன் விழித்தபடி

79-

வழிப்போக்கனிடம்
முகவரி கேட்டேன்
கிழித்துப் போட்டுவிட்டு
தேடச் சொன்னான்

80-

எங்கு சுற்றினால் என்ன
வந்து சேர வேண்டும்
வாழ்க்கைக்கு