Wednesday, December 27, 2017

ஒரு கணம்...

ஒரு நாளைக்கு
எத்தனைப் பட்டாம்பூச்சிகளைக்
கொல்வீர்கள் என்று
எழுதிய கை
ஒரு கணம்
பாம்பாகி மீண்டது
நான் நடுக்கம் கலைந்து
வரியின் அடியில் கிடந்த‌
பட்டாம்பூச்சிகளை எடுத்து
ஒவ்வொன்றாகப்
பறக்கவிட்டேன்

Sunday, December 03, 2017

எவ்வளவோ இருக்கிறது

மருத்துவமனை  வெளிப்புறத்தில்
கண்ணீரைத் துடைத்துக்கொண்டு
எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும்

கண்ணீரைத் துடைக்காமல்
அவரையே பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கும்
பெரிய தூரமில்லை

அருகில் போய்
பேசிக்கொள்ள
எவ்வளவோ இருக்கிறது


Tuesday, October 24, 2017

குழப்பம்

எந்தக் கண்ணாடியிலும்
என் முகம் தெரியவில்லை
குழப்பமாக நான் பார்க்கிறேன்
குழப்பமாகக் கடைக்காரர் பார்க்கிறார்
குழப்பமாகக் கண்ணாடி பார்க்கிறது

Tuesday, October 10, 2017

சிறைக்கம்பிகளின் வழியே

சிறைக்கம்பிகளின் வழியே
அப்பா நிலவைப் பார்ப்பார்
நினைவுகள் முடிந்து போக
நிலவு மறைந்து போகும்
நிலா இல்லாத இரவில்
அப்பா எதைப் பார்ப்பார்
கேட்கிறது குழந்தை
அம்மா பதில் சொன்னாள்
உன்னை


Friday, October 06, 2017

அழித்து விட்டேன்


வழிப்போக்கன் நான்
சாலை விசாரிப்புகள்
போதும் எனக்கு
*
விடுகதைப் போட்டுவிட்டுப்
போகிறது பட்டாம்பூச்சி
வழியில் தென்படும்
வேறு ஒரு பட்டாம்பூச்சியிடம்
விடை கேட்க வேண்டும்
*
கை அசைவை
கிளை அசைவு கவனிக்கிறது
இந்த வரி
மனதில் அசைகிறது
*
நனைந்து
நடக்கும்போது
மழையும்
உடன் வருகிறது
*
நிழல் கடந்து
போகிறேன்
நினைவுகளில்
இளைப்பாறிக்கொள்ளலாம்
*
இரண்டு கால்கள் உறங்க
எதிரே நடந்து போகிறார்
எட்டுக் கால்களுடன்
நின்று நகர்கிறேன்
*
பேருந்து
காலியாக இருக்கிறது
நடத்துநர்
ஏறச் சொல்கிறார்
நிரம்பி இருக்கிறேன் நான்
போகச் சொல்கிறேன்
*
பயணம்
சொல்லப்போவதை
எழுத
இருந்த எல்லாவற்றையும்
அழித்து விட்டேன்

Saturday, September 30, 2017

குழந்தையிடம் கேட்டேன்

ஒரு கையில் பூ 
ஒரு கையில் மிட்டாய்
எது வேண்டும் 
குழந்தையிடம் கேட்டேன் 
தலையில் பூவை 
வைக்கச்சொல்லிவிட்டு 
மிட்டாயை வாங்கிக்கொண்டு 
ஓடி விட்டது 

      

Thursday, September 28, 2017

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது

உங்களை நினைத்தால்
சிரிப்பு சிரிப்பாய் வருகிறது

உண்மையில்
உங்களை நீங்கள் எடை போடலாம்

தைரியத்தில்
உங்களை எடை போடலாம்

நம்பிக்கையில்
உங்களை எடை போட்டுப் பார்க்கலாம்

அன்பில் கூட
அதைச் செய்யலாம்

நட்பில்
உறவில்
பகிர்தலில்
உபச்சரிப்பில் என
உங்களை நீங்கள்
எடை போட்டுப் பார்க்கலாம்

இதையெல்லாம் விட்டுவிட்டு
தராசில்தான்
என்னை நான் எடை போட்டுப் பார்க்க வேண்டும் என்று
நீங்கள் சொல்வதை நினைத்தால்

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது

Sunday, September 24, 2017

சிரிப்பு வந்தது

நான் ஐந்தரை அடி
உயரம் கொண்ட பொய்
சொல்லுங்கள்
இப்போது
நான் உங்களுக்கு
மிகவும் குள்ளமாகத் தெரிகிறேனா

அப்படி எல்லாம் இல்லை

பிறகு ஏன் சிரித்தீர்கள்

நான் அளவிட முடியாத
உயரம் கொண்ட பொய்
அதை நினைத்தேன்
சிரிப்பு வந்தது 

Saturday, September 02, 2017

உண்மையும் உண்மையும்

கற்பனையும் உண்மையும்
கலந்த கதை

அல்லது

உண்மையும் உண்மையும்
கலந்த  கதை

அவர் கண்ணீரில் ஆரம்பித்து
கண்ணீரில் முடித்தார்

பெண் குழந்தை
பிறந்திருக்கு சார்

அனிதான்னு
பேரு வச்சிருக்கேன்

நான் நம்பிக்கையில் ஆரம்பித்து
பிரார்த்தனையில் முடித்தேன்

நல்லா படிக்க வைங்க
எப்பாடுபட்டாவது

டாக்டராக்குங்க

Tuesday, August 29, 2017

முதல் கோப்பைத் தேநீர்

முதல் கோப்பைத் தேநீர்
நாளின் சுவை
*                                                           
புன்னகைக்கும் போது
இலேசாகி விடுகிறேன்
புன்னகைகள்
பறவையாக்கி விடுகின்றன‌  
*                                     
இந்த நடையில்
பெரிய திட்டமிடல்
எதுவுமில்லை
சாலையின்
ஆசிகள் உண்டு                 
*
பசியின் கேள்விக்கு
பதில்
உணவில் இல்லை
தேடலில் இருக்கிறது
 *
மனம் உச்சரிக்கும் சொற்களை
மறந்து விடுவதற்குள்
எழுதி விட வேண்டும்
*
இது போதும்
இந்த இரட்டைச் சொற்களை
வந்தடைய
முழு மொழியையும்
கடக்க வேண்டி இருக்கிறது
*
பேச எதுவுமில்லை
சரி
நீங்களுமா இல்லை

*

Thursday, July 20, 2017

காகிதங்களைப் புரட்டுகிறீர்கள்

அறையில் 
அமர்ந்துகொண்டு 
வானம் பற்றி 
எழுதுகிறீர்கள் 
பார்க்க வந்த 
மழைத்துளிகளை 
அனுமதித்திருக்கலாம் 
கதவடைத்துக்கொண்டு 
காகிதங்களைப் புரட்டுகிறீர்கள்


Tuesday, July 18, 2017

காட்சிக்காக

காட்சிக்காக அவர்களுக்குக்
கண்ணீர் தேவைப்பட்டது
குத்தி வரவழித்தார்கள்
காட்சிக்காக அவர்களுக்கு 
மரணம் தேவைப்பட்டது
குத்தி குத்தி கொன்றார்கள்

Tuesday, July 04, 2017

பாதை

புதிர்கள் நிறைந்தது இந்தப் பாதை
பூக்கள் காணாதது இந்தப் பாதை
வன்மம் கொண்டது இந்தப் பாதை
வார்த்தைகள் இல்லாதது இந்தப் பாதை
வளைந்து நெளிவது இந்தப் பாதை
கலைத்துப் போடுவது இந்தப் பாதை
நிழல்கள் இழந்தது இந்தப் பாதை
தொலைக்க வைப்பது இந்தப் பாதை
துயரம் பாடுவது இந்தப் பாதை
அமைதி அழிப்பது இந்தப் பாதை
அழகை சிதைப்பது இந்தப் பாதை
வண்ணம் காட்டாதது இந்தப் பாதை
மயக்கம தருவது இந்தப் பாதை
திரும்ப விடாதது இந்தப் பாதை
பயத்தை ஊட்டுவது இந்தப் பாதை
நீர்ச்சுனை இல்லாதது இந்தப் பாதை
தீ முனைப் போன்றது இந்தப் பாதை
சொல்லிக்கொண்டே போகிறீர்களே
முடிந்து விட்டதா சொல்லுங்கள்
நான் ஒரு வரியை சேர்க்க வேண்டும்


போகக்கூடியது இந்தப் பாதை

Wednesday, June 28, 2017

கலப்படம்

நாளுக்கொரு கலப்படம் நடக்குது
நாடுதான் எங்கேயோ போகுது

அரிசியில கலப்படம்
அரசியல்ல கலப்படம்
உணர்வுல கலப்படம்
உண்மையில கலப்படம்
மிச்சமீதி இல்லாம
எல்லாத்துலயும் கலப்படம்
பாலுல கலப்படம்
மருந்துல கலப்படம்
தண்ணியில கலப்படம்
சொல்லுல கலப்படம்
சொல்றதுலகலப்படம்
சாமியாரு கலப்படம்
சகலமும் கலப்படம்
மாறி மாறி கலப்படம் நடக்குது
மனசாட்சி வேற வழி போகுது
பணத்துல கலப்படம்
குணத்துல கலப்படம்
கொள்கையில கலப்படம்
கூட்டத்துல கலப்படம்
இயற்கைய ஆக்கிப்புட்டோம்
இன்னும் இன்னும் கலப்படம்
நாளுக்கொரு கலப்படம் நடக்குது
நாடுதான் எங்கேயோ போகுது


Tuesday, May 30, 2017

என்னைப் பார்க்கிறேன்

எனக்குள்ளிருந்து
வெளி வந்து
என்னைப் பார்க்கிறேன்

ஒரு குழந்தையைப் போல‌
பூவைப் போல‌
பெய்யும் மழையைப் போல‌

எனக்குள் திரும்பும் போது
என் நாவில் 
குழந்தையின் பாடல் இருந்தது
கையில்
பூ இருந்தது
நான் நனைந்திருந்தேன்


Thursday, May 25, 2017

ரயில் போய் விட்டது

நான் தற்கொலை செய்து கொள்ள
வந்த ரயில்
போய் விட்டது என்றான்

திடுக்கிட்டேன்

நீங்களும் தற்கொலை செய்து கொள்ள
வந்த ரயிலா கேட்டான்

சிரித்தபடி சொன்னேன்

நாம் பயணம்
செய்ய வேண்டியநான் தற்கொலை செய்து கொள்ள
வந்த ரயில்
போய் விட்டது என்றான்

திடுக்கிட்டேன்

நீங்களும் தற்கொலை செய்து கொள்ள
வந்த ரயிலா கேட்டான்

சிரித்தபடி சொன்னேன்

நாம் பயணம்
செய்ய வேண்டிய ரயில்
போய் விட்டது

போய் விட்டது

Saturday, May 13, 2017

வழிப்போக்கன்

நான் வழிப்போக்கன்
வழிகள்
என் முகவரிகள்
*
மழையில்
நனைவது
எப்போதும் இருக்கும்
மழை நீர்
அருந்துவது
எனக்குப் பிடிக்கும்
*
இளைப்பாறும் போதெல்லாம்
நான் நிழலுடன்
பேசுகிறேன்
மனம் மரத்துடன்
பேசுகிறது
*
என் பயணம்
அடைதலில் இல்லை
தொடர்தலில் இருக்கிறது
*
வெகுதூரம்
வந்த பின்னும்
வெகு தூரம்
இருக்கு இன்னும்
இந்த வரி
அதிகம்
உறங்க விடுவதில்லை
*
வேகமான நடையில்
இமை மூடித் திறக்க
முடிகிறது தூக்கம்
*
கால்களுக்கிடையில்
முடிகின்றன‌
நெடும் பயணத்தின்
சிறு பயணங்கள்
*
காதுகளை நிரப்புகிறது
காற்றின் பாடல்
அதில் நான்
கலந்து போன
ஒரு சொல்
*
கை வீசி நடக்கிறேன்
பிரபஞ்சத்தை
பின்னுக்குத் தள்ளி
பிரபஞ்சத்தோடு
கை கோர்த்து
பிரபஞ்சத்தை
எதிர்கொண்டு
*
'தி இந்து'வில்(மே 10,2017) தேநீர் கவிதை பகுதியில் வெளியானது.

Sunday, April 16, 2017

பேருந்து

மறந்து போய்
இறங்கி விட்டார்

கிளம்புகிறது பேருந்து

அங்கிள் நீங்க அவருக்கு
மீதி சில்லரைக் கொடுக்கல
ஞாபகப்படுத்துகிறது குழந்தை

விசிலடிக்கிறார்

நிற்கிறது பேருந்து

இறங்கியவர் ஓடி வருகிறார்

நடத்துனர்
சில்லரைக் கொடுத்து
நன்றியை வாங்கிக்கொள்கிறார்

குழந்தை புன்னகை
தாய் புன்னகை
நடத்துனர் புன்னகை
ஒரு புன்னகைச் சித்திரமாய் விரிய
போகிறது பேருந்து      







Thursday, April 06, 2017

மன்னிக்கவும்

நீங்கள் குறிபார்த்து
சுடக் கற்று தந்தபடி
துப்பாக்கி குறிபார்க்கிறது
துல்லியம் பிசகாமல்

இப்போது
குறி நீங்களாகப்
போய் விட்டீர்கள்

மன்னிக்கவும்

Thursday, March 30, 2017

கொலை செய்த ரயில்

தற்கொலை செய்து கொண்டவனை
சுற்றி வந்து
தண்டவாளத்தை
பல முறை உதைத்து
கத்திக்கொண்டிருந்தான்
பைத்தியக்காரன்
இவனை
கொலை செய்த ரயில்
தப்பித்துப் போய் விட்டது

Saturday, March 18, 2017

அருகில் போய்

அழும் பெண்ணின்
அருகில் போய்
கண்ணீரைத் துடைத்துக்கொள்
என்று சொல்வதற்கு
கருணை வேண்டும்
இதற்கு
யார் காரணம்
என்று கேட்க‌
துணிவு வேண்டும்
அருகில் போய்
துணிந்து கேட்டேன்
சொன்னாள்
உன்னைப் போல்
ஒருவன்தான் என்று

Thursday, March 16, 2017

மனதில் அசைகிறது

மனதில் அசைகிறது
மறந்து போகாத‌
வாக்கியம் ஒன்று

அதிலிருந்து
குதித்தோடும் சொற்கள்
திரும்ப வந்து
வேறு வேறு
இடங்களில் அமர்ந்து
புதுப்புது வாக்கியங்களை
உருவாக்குகின்றன‌

இப்போது
மனதில் அசைகிறது
மறந்து போகாத‌
பாடல் ஒன்று

Wednesday, February 15, 2017

நாமும் காதலும்

          
1
நான் மூங்கில்
நீ தொடு
புல்லாங்குழலாகிறேன்

2
மனதில்
தோட்டம் இருக்கிறது
மெளனம் பறிக்கலாம் வா

3
நம்மை அழைத்துச் செல்லும்
பாதைகளா இவைகள்
கேட்கிறாய் நீ 
நம் கேள்விகளுக்கான 
பதில்களும்தான்
சொல்கிறேன் நான் 

4
ஒரு முறை
உன்னைப் பார்த்துவிட்டுப் 
போக வேண்டும் என்று
காத்திருக்கிறேன்
நீயோ
நான் போனபின்தான்
வரவேண்டும் என்று
காத்திருக்கிறாய்

5
குறைவான சொற்களை
வைத்துக்கொண்டு
நெடுங்கவிதை
எழுத முடியாது
என்கிறேன் நான்
நெடும் பயணம் 
போக முடியும்
என்கிறாய் நீ

6
சந்திப்பும்
வலிதான்
பிரிவும் 
வலிதான்
வலிகளைப் 
பழகலாம் வா

7
மின்னல் வெட்டிய நேரத்தில்
அணைத்துக்கொண்டோம்
நமக்குள் இருந்த மின்னல்களைக்
கண்டுகொண்டோம்

8

உன் உள்ளிருக்கும்
கண்ணீரில்
கரைய விரும்புகிறது
என் பிரார்த்தனை

9
ரூமியின் 
கவிதைப் போல
புன்னகைக்கிறாய்
எளிமையின்
கனவுப் போல்
பார்க்கிறேன்

- குங்குமம்(17.2.2017) இதழில் வெளியானது -

Saturday, February 11, 2017

மனசாட்சிய பேசவுடுங்கடா

தேநீர் குடித்துவிட்டு
கை நடுங்க‌
எட்டு ரூபாய் நாணயங்களாக‌
எண்ணிக்கொடுத்துவிட்டு
சத்தம் போட்டுச் சொல்லியபடியே
போனார் பெரியவர்

நீங்களே கத்திக்கிட்டு இருக்காதீங்க‌
உங்க மனசாட்சிய பேசவுடுங்கடா