Wednesday, August 22, 2007

உடைந்த இசைத்தட்டு
சுழலுகிறது காற்றில்
வலி மறந்து

Tuesday, August 21, 2007

எண்களின் வலை

கணித பாடத்தின்
விடை கேட்டு வந்த குழந்தை
உம்மென்று
முகத்தை வைத்திருந்தாள்

எண்களுக்குள்
சிக்கிக் கிடந்த அவளை
வெளியில் எடுக்க
பெரும் சிரமமாயிற்று

பென்சிலைக் கடித்தபடி
சொல்லித்தரச் சொன்னாள்

என் பால்ய பூஜ்யத்தை
மறைத்துப் போட
கிடைத்தது
சரியான விடை

சந்தோஷத்தில் கட்டிப்பிடித்து
முத்தம் கொடுத்துப் போனாள்
பிரம்பின் பயம் நீங்கி

அவள் மேல்
விளையாடிய எண்கள்
காலடியில் கிடந்தன
சத்தங்கள் அற்று

Sunday, August 19, 2007

இழந்த மரம்

அவசரமாய் காகிதம் கிழித்து
காது குடைந்தபடிப் பார்த்தேன்
நான் கிழித்திருந்தது
மகள் வரைந்த மரத்தை
என்னால் தன் மரம்
செத்துப்போனதாக
அழுது புரண்டாள்
நிறுத்த முடியவில்லை
கையிலிருந்த காகிதத்தில்
பிய்ந்துபோன கிளை
கிளையை விட்டு
வெளியேறிய பறவைகள்
அவளோடு சேர்ந்து
சண்டைக்கு வந்தன
கிளை விரிந்து காடானது
காட்டின் சத்தம்
காதை உடைத்தது
நேரமாயிற்று அடங்க
குழந்தையின் அழுகையும்
காட்டின் கோபமும்

Saturday, August 04, 2007

தூறலைப்பிடிக்கும் சிறுமி

கை நீட்டி
தூறலைப் பிடித்துக்கொண்டிருந்த சிறுமி
கண்ணில் மின்னல் பொங்கச் சொன்னாள்
இந்தத் தூறலை வைத்து
மழையை வளர்க்கப்போகிறேன்
விரலிடுக்கில் துளிகள் நழுவ
முகம் சாய்த்துக்
கை குவித்தாள்
பள்ளி விட்டு வந்த
ஒரு நாளில்
சிறுமியிடம் கேட்டேன்
எந்த அளவிற்கு
மழை வளர்ந்திருக்கிறது என்று
தன் புத்தகப் பையில்
சில குட்டி மேகங்களைச் சேர்த்து
வைத்திருப்பதாகப் பூரித்தாள்
நனைய மழை வேண்டுமா
பார்த்தபடி கேட்டாள்
அப்போது எட்டிப்பார்த்த
வானவில் துண்டு சிரித்து
மறைந்து போனது

( செப்டம்பர் 2007 'புதிய பார்வை' இதழில் வெளியானது)