Thursday, January 29, 2009

குழந்தையின் வரிகள்

முதல் வரியிலிருந்து
ஒரு பட்டாம் பூச்சி பறந்தது

இரண்டாம் வரியில்
ஒளிர்ந்தது வானவில்

மூன்றாம் நான்காம் வரிகளில்
ஒரு மூங்கில் சாதுர்யத்துடன்
புல்லாங்குழல் இசைத்தது

ஐந்தாம் வரியின் மேல்
தூறல் நடனமிட்டது
இசையின் லயத்திற்கேற்ப

ஆறு ஏழு மற்றும் எட்டாம் வரிகளில்
மான்களின் ஓட்டமும்
மயில்களின் ஆட்டமும்
வனத்தின் பேச்சும்
காண கேட்கக் கிடைத்தன

ஒன்பதாம் வரியை
துடைத்து விட்டுப் போனது
ஒரு மேகம்

பத்தாம் வரியில்
ஒரு பெரியவர் சிதையூட்டப்பட்டு
எரிந்து கொண்டிருந்தார்

வரி பதினொன்றில்
பிறந்த குழந்தை
தான் எழுதிய இந்த கவிதையை
முதல் வரியிலிருந்து
வாசித்துப் பார்க்க
குழந்தைக்குப் பெயர் வைத்த
பட்டாம் பூச்சி
சுற்றிக் கொண்டிருந்தது
பெயரை சொல்லியபடி

2 comments:

  1. Lao Tzu-
    என் கனவில் பட்டாம்பூச்சி வந்ததா?
    இல்லை ..என் இருப்பே
    அந்தப் பட்டாம்பூச்சியின் கனவில்தானா?

    --Lao Tzu என்ற சைன தேசத்து அறிஞர் சொன்னதாக வாசித்தது நினைவுக்கு வந்தது.

    எது நிஜம்?

    ReplyDelete