மெழுகுவத்தி வெளிச்சத்தில்
எப்போதும் குடிக்கும் பழக்கம்
நண்பனுக்கு
அவன்
நான்
மெழுகுவத்தி
அல்லது
அவன்
மெழுகுவத்தி
இந்த அட்டவணையில்
நிகழ்வு இருக்கும்
உட்கொள்ளும் துளிகளுக்கேற்ப
சொற்களை நடனமிடச் செய்வான்
அப்போது
நானும் மெழுகுவத்தியும்
கேட்கும் காதுகளாவோம்
அவன் பேச்சிலிருந்து
குதிக்கும் தவளைகள்
சத்தமிட்டு தாண்டிப்போகும்
இருளில் மறையும்
பேசும்போது
அவனை அறியாமல்
வரும் கண்ணீர்த்துளி
அதை மெழுகுவத்தியின்
உருகும் துளியோடு
கலந்து பார்ப்பான்
எந்த வாளினால்
உலகை அறுத்தாலும்
அது மீண்டும்
ஒன்று சேரும்
அன்பை வழங்கும் என்று
அபூர்வமாக ஏதாவது சொல்வான்
ஒவ்வொரு காயத்திலும்
தத்துவத்தை தடவினால்
வலிக்கவே வலிக்காது என்பான்
போதை அவனை
செல்லமாகத் தாலாட்டும்
அந்த ஊஞ்சலின்
அசைவுக்கேற்ப ஆடுவான்
சில நேரங்களில்
எல்லாம் துண்டிக்கப்பட்ட
அமைதி நிலவும்
அது பயத்தைத் தரும்
அப்போது மெழுகுவத்தி
சொட்டுவது மட்டும் கேட்கும்
பார் இது பேசுகிறது என்பான்
மெழுகுவத்தி
கோப்பையில் நிலவைப்போல
அசைந்தாடுகையில்
குடிக்காமல் கவனிப்பான்
எல்லாவற்றிலும்
நம்மை நட்டுவைத்து
சுயநலத் தோப்பாகிப்போனோம்
இந்த அவனது வாசகம்
எனக்கு மிகவும்
பிடித்த ஒன்று
ஒரு நாள் கேட்டேன்
மெழுகுவத்தி அணைந்துபோனால்
என்ன செய்வாய்
சிரித்தான்
சத்தமிட்டான்
அமைதியானான்
சொன்னான்
நான் ஏற்றும் மெழுகுவத்திகள்
அணைவதே இல்லை
எல்லாம் எனக்குள்
எரிந்துகொண்டிருக்கின்றன
அப்போது
அவன் கண்களில்
ஆடிய ஜூவாலை
என்னை கவனிக்கவைத்தது
No comments:
Post a Comment