Wednesday, August 10, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

613-

நைந்து கிழிந்து போயிருந்தது துணி

இதை அணியவும் முடியாது
இது எதற்கும் பயன்படாது என்றேன்

எதுவும் எதற்கும் பயன்படும்
எனச் சொல்லியபடியே
வந்த அனுபவ சித்தன்
அதை மேலும் கிழித்து
ஒரு மெல்லிய திரியாக்கி
விளக்கேற்றிக் காட்டினான்

அசைந்த சுடரில்
காணமல் போயிருந்தன
நைந்து கிழிந்த இருள்கள்

2 comments:

  1. உண்மைதான். எதற்கும் பயன்படாதது என்று எதுவுமில்லை.

    ReplyDelete