காலையை அழகுபடுத்தி
சென்றுகொண்டிருந்தன
பள்ளிக்குழந்தைகள்
என்னை கவர்ந்த
ஒரு குழந்தைக்குப்
பெயரிட்டேன்
மான்யா
பள்ளிக் கடக்கும்போதெல்லாம்
என் மான்யாவைப் பார்ப்பது
வழக்கமாயிற்று
அவள் நடைஅசைவும்
கண்களிலிருந்து
கொட்டும் கனவுகளும்
சுகமானவை
பள்ளிவிடுமுறை நாட்களில்
பார்க்க முடியாமல் போகும்
மான்யாவை
சந்திக்க வாய்ப்புக்கிடைத்த
ஒரு தருணத்தில்
அவளிடம் கேட்டேன்
உன் பெயரென்ன
சிரித்தபடி பார்த்தவள்
பேசினாள்
உங்களுக்கு என்ன
பிடிச்சிருந்தா
உங்களுக்கு பிடிச்ச பேர்ல
கூப்பிடுங்க
மான்யா
கேட்டு
நாக்கில் சுவையூறும்படி
சொல்லிப்பார்த்தாள்
பள்ளிமணி அழைக்க
கை அசைத்தபடி ஓடி
தன் தோழியோடு
சேர்ந்துகொண்டு சொன்னாள்
என்னோட
இன்னோரு பேரு
மான்யா
arumaiyaana kavi varikal
ReplyDeleterahini
germany
அருமை... அழகு
ReplyDeleteஅன்பின் ராஜா சந்திரசேகர்,
ReplyDeleteஒரு குழந்தமையின் மனநிலை இப்படி இந்தக் கவிதையில் வரும் மனநிலையில் இருக்க வாய்ப்பிருக்கிறது. நமக்கு பிறகாக வரும் ஒவ்வொரு தலைமுறையும் இளம் வயதில் தம்மைவிட முந்தைய தலைமுறையைக் காட்டிலும் ஒரு விதமான முதிர்ச்சியை பெறுகின்றன. அல்லது இயல்கிறதோ இல்லையோ தனக்கு முதிர்ச்சி வந்துவிட்டதாக நம்பத் துவங்குகின்றன. //உங்களுக்கு பிடிச்ச பேர்ல கூப்பிடுங்க// என்னும் வரிகள் எனக்குள் இந்த பிம்பத்தைத்தான் கொண்டு வந்தன.
இந்தக் கவிதையில் இறுதியாக வரும் குழந்தையின் உற்சாக மனநிலை ரசிக்கத் தகுந்தது.
எனக்கு உங்கள் கவிதைகள் மீதான பொதுவான விமர்சனம் இந்தக் கவிதையிலும் இருக்கிறது. நீங்கள் கவிதையில் ஒரு பூர்ணத்துவத்தை உண்டாக்க முயல்வதுதான் அது. நீங்கள் சூழ்நிலைகளையும், மனநிலையையும் முழுமையாக விவரித்து விடுகிறீர்கள். இப்படி விவரிக்கும் போது கவிதை முழுமையடையும் பிம்பம் வருகிறது. வாசக மனநிலையில் இருந்து எனக்குள்ளாக வேறொரு வடிவத்தையோ அல்லது பொருளையோ தேட முயலவிடாமல் செய்யும் அந்தப் பூர்ணத்துவத்தின் மீது விமர்சனம் இருக்கிறது. எனக்கு கவிதையில் ஒரு வெற்றிடம் தேவைப்படுகிறது. அந்த வெற்றிடம் என் வாசக மனதினை நிலை நிறுத்தும் வெற்றிடமாக இருக்க வேண்டும். அந்த வெற்றிடத்தில் ஏதேனும் ஒன்றினைத் தேடி என் மனம் அலைபாய வேண்டும்.
அந்த வெற்றிடம் இந்தக் கவிதையில் எப்படியோ இல்லாமல் போய்விட்டது.
பிரியத்துடன்,
வா.மணிகண்டன்.
அன்பு மணி
ReplyDeleteமுன்னேற்பாடுகளுடன் ஒரு கவிதையை அணுகுவது அல்லது எழுதுவது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
மீண்டும் ஒரு முறை குழந்தையின் கையைப் பிடித்து நடந்து பாருங்கள் கிடைக்கலாம் நீங்கள் எதிர்பார்க்கிற பூரணத்துவமும்,வெற்றிடமும்.
நன்றியுடன்
ராஜாச்ந்திரசேகர்
கவிதை ரொம்ப நல்லா இருக்கு ராஜா. அதைவிடவும் அந்த பெயர் "மான்யா"....... அழகு ராஜா.
ReplyDelete