உன்னைத் துப்பாக்கியால் விசாரிக்கப்போகிறேன்
என்றது குரல்
துப்பாக்கி பிடித்த கரம் தெரிந்தது
மங்கலான வெளிச்சத்தில் அசைந்தது
உயிர் மீது வைக்கப்பட்ட குறி என்பதால்
பயம் சகதியாகி உள்ளிறக்கியது
தொடங்கியது விசாரணை
உன்னை சுடுவதில் தவறில்லை
நீ நாட்களை சோம்பேறித்தனத்துடன் துவக்குகிறாய்
காலைச் சூரியனைப் பார்த்ததில்லை
சுயநலத்தின் வலை
உன் நகர்வுகளைப் பின்னுகிறது
துப்பாக்கியின் கோபம் கூடியது
நேற்று கூட
காசு கேட்ட ஒரு சிறுமியை
உற்றுப்பார்த்துப் போடும் போது
கையை அழுத்திப்பிடித்தாய்
பூவை
நிலவை
நாய்க்குட்டியை
நீ ரசித்ததில்லை
இன்னும் விசாரணையை
நீட்ட விரும்பவில்லை
தீர்ப்பைத் தரப்போகிறேன்
சொன்ன துப்பாக்கி வெடித்தது
அதிர்ச்சியில் உறைந்து எழுந்தேன்
வலி
ரத்தம்
மரணம்
எதுவுமில்லை
இரவைத் துளைத்திருந்தன
துப்பாக்கியின் தோட்டாக்கள்
நன்றாக உள்ளது. தொடரவும்...
ReplyDeleteவிக்னேஷ்வரன்
சுய விசாரணை வரிகள் அருமை ராஜா.
ReplyDelete