Friday, April 10, 2009

இரவுக் காவலாளி

யாராவது வந்தால்
எழுப்பு
தன் தூக்கத்திடம்
சொல்லிவிட்டு
உறங்கப் பார்க்கிறார்
இரவுக் காவலாளி

பயணம்

இரவுப் பயணம்
காலையில் பேருந்திலிருந்து
இறங்கியபோது
புன்னகை மாறாமல்
ஓட்டுனர் கேட்டார்
நல்லாத் தூங்கனீங்களா சார்

இடம்

ஆளறவமற்ற இடத்தில்
நானிருந்தேன்
எனக்குள்
கத்திக் கொண்டிருந்தார்கள்
எல்லோரும்
மீனின் கண்கள் வழியே
பார்க்க வேண்டும்
கடலை

Monday, April 06, 2009

தன்னைப் பிடிக்கச் சொல்லி
ஓடிய பட்டாம் பூச்சி
பறக்க வைத்துப்
பார்த்தது என்னை

Friday, April 03, 2009

குற்றவாளிகள்

குற்றவாளிகள் எல்லோரும்
தப்பி ஓடினார்கள்
வேகமாக விரட்டி வந்தும்
நம்மால் பிடிக்க
இயலவில்லை
கூடி நின்றவர்கள்
நம் முயற்சிகளுக்காக
பாராட்டி கைதட்டினார்கள்
குற்றவாளிகள்
ஓடிய திசையில்
புகை மூட்டம்
இறங்கிக் கொண்டிருந்தது
அடுத்த முறை
விட்டு விடாதீர்கள் என்று
வாழ்த்துக்களை வழங்கியபடி
பிரிந்து போனார்கள்
எனக்குள் ஒன்றும்
உனக்குள் ஒன்றுமாக
இரண்டு குற்றவாளிகள்
பதுங்கிப் போனதை
உணராத அவர்கள்
அலாதியான இரவு
மாதாகோயில் மணிசத்தம்
நனைகிறது மழையில்

குழந்தையின் கடல்

நள்ளிரவில் எழுந்து
கடல் பார்க்க வேண்டும் என்று
அடம் பிடித்த
குழந்தையை
சமாதானப்படுத்தி
நாளை போகலாம்
எனச் சொல்லி
தூங்க வைக்க
பெரும்பாடாயிற்று
பின் விடியும் வரை
அலைகள் எழுப்பி
தூங்க விடாமல்
செய்தது
குழந்தையின் கடல்

Tuesday, March 17, 2009

இந்த கவிதை
பூமியின் கனத்தைப் போன்றது
நீங்கள் தூக்குவதற்கு
ஏதுவாய்
பறவையின் இறகைப் போன்றது

வண்ணங்களின் நறுமணம்

ஓவிய அரங்கம்
நேரம் முடிந்து
மூடப்படுகிறது

பார்வையாளர்கள்
வெளி வருகின்றனர்

சிலர் கண்களில்
வண்ணம்
ஒட்டி இருக்கிறது

நிசப்த இரவில்
நிறங்கள்
ஆறாகப் பெருகி
அரங்கம் எங்கும்
வழிந்தோடுகிறது

நான்காவது ஓவியப் பெண்
ஓடி வந்து
ஏழாவது ஓவியத்திலிருக்கும்
பெரியவரை
நலம் விசாரிக்கிறாள்

மூன்றாம் ஓவியத்திலிருக்கும்
மஞ்சள் பூக்களை
இரண்டாவது ஓவியத்தின் குழந்தை
கை நீட்டிப்
பறித்து எறிகிறது

வண்ணங்களில்
விளையாடிப் போகின்றன
பூக்கள்

ஏழாவது ஓவியத்தில்
வராமல் பயந்தபடி
பார்க்கும் பூனையைத்
தூக்கி வருகிறாள்
ஒரு தாய்

அவள் கைகளை
நக்குகிறது பூனை
அன்பின் வண்ணங்கள் மின்ன

பசிக்கும் குழந்தை
நீலத்தை சாப்பிட்டு
பச்சை நீரைக் குடிக்கிறது

அடுத்த நாள் ஞாயிறு

விடுமுறை குதூகலத்தில்
எல்லோரும்

திங்களன்று
பார்வையாளர்கள் வருகைக்காக
கதவைத் திறக்கும் காவலாளி
காலடியில் தட்டுப்படும்
மஞ்சள் பூவை எடுத்து
மெல்ல முகர்ந்தபடி
ஓவியங்களைப் பார்க்கிறான்

வண்ணங்களின் நறுமணம்
அவனுள்
பரவத் தொடங்குகிறது

(ஆனந்த விகடன்,27.05.08 இதழில்
விடுமுறை வண்ணங்கள் என்ற தலைப்பில்
பிரசுரமானது)

Saturday, March 14, 2009

இரவல் சிறகுகள்

சிலையாகவும்
சிலை மீது
அமர்ந்திருக்கும்
பறவையாகவும் இருந்தேன்
ஒரு மாய கணத்தில்

இரவல் சிறகுகள் பெற்று
பறந்து போனது சிலை
பறவை சிலையாக

இப்போது நான்
தொலைவில் புள்ளியான
பறவையைப் பார்த்தபடி

பறக்க முடியாமல்
சிலைக்குள்
இருந்தபடி

நேத்ராவின் மீன்குட்டிகள்

புதிதாய் இடம் பிடித்தது
மீன் தொட்டி

குதிக்கிறாள் நேத்ரா

தன் குட்டி விரல்களால்
தொட்டுப் பார்க்கிறாள்

அவள் கண்களைப் போல்
அசைகின்றன மீன்குட்டிகள்

ஒவ்வொரு மீனுக்கும்
ஒரு பெயரை வைத்துக்
கூப்பிடுகிறாள்

கூப்பிடும் போதெல்லாம்
ஓடி வருகின்றன மீன்கள்

கைதட்டி எல்லோரையும்
அழைத்துக் காட்டுகிறாள்

மீன்குஞ்சுகள்
ஓய்வெடுக்கும் சமயங்களில்
அவள் வைத்த பெயர்கள்
நீந்துவதைப் பார்க்க முடிகிறது

Thursday, March 12, 2009

ஆசிர்வதிக்கப்பட்டவன்

இந்த பயணத்தில்
எங்கும் இறங்குவதாக
உத்தேசமில்லை
நான் வழிகளால்
ஆசிர்வதிக்கப்பட்டவன்

தங்குதல்

நெரிசல்களைத் தவிர்க்க
அடிக்கடி
தங்கிவிடுகிறேன்
கவிதைகளில்

கால வெளியில்

நள்ளிரவில்
கனவின் மீது
ஒரு அபூர்வ நட்சத்திரத்தின்
ஒளி கடந்து போனது

கனவும் ஒளியும்
சந்தித்த தருணத்தில்
மிதந்து கொண்டிருந்தேன்
எதுவுமற்ற
கால வெளியில்

Monday, March 09, 2009

புள்ளிகள்

எனது புள்ளிகளை
எடுத்துக் கொண்டபின்னும்
நூற்றுக்கணக்கான
புள்ளிகள் இருந்தன
நேர்க்கோட்டில்

அப்பாவின் சைக்கிள்

பல பயணக் கதைகளையும்
பல நூறு மைல்களையும்
தன்னுள் புதைத்து
வைத்திருக்கிறது
அப்பாவின் சைக்கிள்

ஓட்டும் போதெல்லாம்
ஒன்றிரண்டை சொல்வதுண்டு
என்னிடம்

Sunday, March 08, 2009

விசிறி விற்கும் பாட்டி
அவள் சொற்களிலிருந்து
இறங்கிப் போகிறது காற்று

தொலைந்து போதல்

கூட்டங்களில்
தொலைந்து போவது
பிடித்திருக்கிறது
அனுபவ நெரிசல்களோடு
திரும்ப வந்து சேர்ந்து
தனித்து நடக்கையில்
கூட்டம் தொலைந்து போவதும்
பிடித்திருக்கிறது

Sunday, March 01, 2009

குழந்தை,பட்டாம் பூச்சி மற்றும் நான்

தூங்கிக் கொண்டிருக்கும்
குழந்தை மேல்
சுற்றுகிறது பட்டாம் பூச்சி
ரசிக்க முடிகிறது இரண்டையும்
பட்டாம் பூச்சி போல்
என்னால்
குழந்தையை ரசிக்க முடியுமா
தெரியவில்லை

வார்த்தைகளின் நடனம்

எவ்வளவோ கூப்பிட்டும்
வந்து சேராமல்
நனைகின்றன
சில வார்த்தைகள்
பூர்த்தியாகாதக் கவிதை
ரசிக்கிறது
மழையோடு சேர்ந்து
வார்த்தைகளின்
நடனத்தையும்

Friday, February 27, 2009

யாரோ ஒருவர்

விலாசத்தைக் காட்டி
விசாரித்த போது
நிதானமாகப் பார்த்தார்
பொறுமையாகச் சொன்னார்
புரிந்து கொண்டது
முகத்தில் தெரிந்தவுடன்
புன்னகைத்தபடியே போனார்
நகரத்தில்
தன் விலாசத்தைத் தொலைக்காத
யாரோ ஒருவர்

Sunday, February 22, 2009

வெள்ளை நிறத்தில் ஒரு பூனை

யாரும்
பார்க்காத நேரம்
பூங்காவின் ஓரத்தில்
இறக்கி விடுகிறேன்
வெள்ளை நிறப்
பூனையை

கை நழுவும் போது
ஒரு கணம்
அதன் கண்களைப்
பார்க்கிறேன்

நெருக்கடி நிறைந்த வீட்டில்
இருக்கக் கூடாது
என்று எதிர்ப்பு கிளம்பியதால்
இந்த ஏற்பாடு

கூப்பிட்டால்
போய் விடலாம் என்ற
நம்பிக்கையில்
குழந்தைகளின் விளையாட்டை
கவனிக்கிறது பூனை

நெடுந்தூரம்
வந்த பின்னும்
என்னைச் சுற்றி சுற்றி
வருகிறது
பூனைக்கு
நான் வைத்த பெயர்

ஒரு அஞ்சலி

இறந்த போது
எவ்வளவோ பேர் வந்து
கண்ணீர் சிந்தினார்கள்

இருந்த போது
ஒருவரும் வந்து
கண்ணீர் துடைக்கவில்லை

Tuesday, February 17, 2009

நமது மழை

எல்லோரையும் முடக்கிப்
போட்டிருந்தது மழை
நான் திட்டிக்கொண்டிருந்தேன்
எப்போதும் மழையைக்
குழந்தை போல ரசிக்கும்
பக்கத்து வீட்டு அக்காவுக்கு
பிரசவ வலி வர
அவசரமாய் ஆட்டோவில்
ஏற்றிக் கொண்டு போனார்கள்
தலை பிரசவம் என்பதால்
பதற்றம் கூடி இருந்தது
மழை நிற்காத காலையில்
செய்தி வந்தது
சுக பிரசவம்
ஆண் குழந்தை என்று
அப்போது பார்த்த மழையை
உள்ளபடியே
ரசிக்கத் தோன்றியது

வானம்

தன் குஞ்சுக்குப்
பறவை ஊட்டியது
உணவை
பின் கொஞ்ச கொஞ்சமாய்
வானத்தை

கண்ணீரின் நாக்குகள்

கண்ணீரின் நாக்குகளில்
பற்றி எரியும் வார்த்தைகள்
யாரால் அணைக்க இயலும்

நினைவுகளின் தாய்

எங்கள் குழந்தைப் பருவம்
இன்னமும் இருக்கிறது
அம்மாவிடம்
ஊர் போகும்
ஒவ்வொரு முறையும்
தன் நினைவுகளில் பிசைந்து
ஊட்டத் தவறியதே இல்லை

Sunday, February 15, 2009

இடுப்பிலிருக்கும் குழந்தை

முண்டியத்து
முன்னேறி
இடம் பிடித்து
அமர்ந்து
வெற்றி பெருமூச்சு விட்டு
பின் பார்க்க
ஏற முடியாமல்
திணறி
வெளியேறி
வெயில் கவ்வ
தள்ளி நிற்கும் தாயின்
இடுப்பிலிருக்கும் குழந்தை
சிரித்தபடியே
கையசைத்துக் கொண்டிருந்தது
என்னைப் பார்த்து

என்னிடம்...

என்னிடம் இருக்கின்றன
பதினேழு கவிதைகளும்
இருபது மதுக்கோப்பைகளும்

நீங்கள் விரும்பினால்
அருந்தலாம்
கவிதையிலிருந்து மதுவும்
படிக்கலாம்
மதுவிலிருந்து கவிதையும்

அந்தக் கவிதை

எழுதியது போலிருந்த
அந்தக் கவிதையை
இதுவரை
நான் எழுதவே இல்லை

Thursday, February 12, 2009

பேச நினைத்தவை

நீங்கள் பேசாமல் போனால்
உங்களிடம் நான் பேச
நினைத்தவை எல்லாம்
வார்த்தைகளின் சீழாக
என் காதுகளில்
வடியும் என
பரிதாபமாக சொல்லியவனைப்
பார்த்தபடி இருந்தேன்
அவன் சொன்னதுபோல்
வார்த்தைகளின் சீழ் வடிந்தது
என் காதுகளிலிருந்து

Monday, February 09, 2009

எழுதிய என்னாலும் அவனைக் காப்பாற்ற முடியவில்லை...

காலையை வணங்கினான்
சில உடற்பயிற்சிகள் செய்தான்
அவசர குளியல்
ஏதோ திருப்தி தந்தது
தேநீர் நட்பானது
நடந்தான்
பள்ளிக் குழந்தைகளுக்கு
கையசைத்தான்
ஒரு பாட்டி
அவன் கை பிடித்து
சாலைக் கடந்தாள்
கடந்து போய்
திரும்பி வந்து
கடவுளைக் கும்பிட்டான்
மனதிலிருந்த திட்டத்தில்
மாற்றமில்லை
நண்பனுக்கு
கடிதம் எழுதினான்
சம்பளம் வாங்கி
ஊருக்கு அனுப்பினான்
சில நிராகரிப்புகளை
நினைத்துப் பார்த்தான்
அதற்காக வருத்தப்படவில்லை
புன்னகை நிறைந்த தருணங்களுக்கு
நன்றி சொன்னான்
கால் நனைத்த
அலையைத் தொட்டான்
தொட நினைத்த அலை
போயிருந்தது
சாதகமான உயரத்திலிருந்த
மின்விசிறியை நிறுத்தினான்
அவனை வழி அனுப்புவதுபோல்
மெதுவாகி
நின்றன இறக்கைகள்
முன்பாக ஒரு
கணம் யோசித்தான்
இதை முதலில் செய்திருந்தால்
இன்றைய இவ்வளவு
நிகழ்வுகளை
இழந்திருப்போமே என்று
ஹாலில் நிறுத்தப்படாத டீவி
ஈழத்தமிழர்களின் இறப்புகளைச்
சொல்லிக் கொண்டிருக்க
அவன் கைபேசி
ஒலித்துக் கொண்டே இருந்தது

பறவையே...

பறவையே
மன்னிக்க வேண்டும்
உனக்கு உணவு
கொடுக்க முடியவில்லை
எனவே உனனை
உணவாக்கிக் கொள்கிறோம்

Sunday, February 08, 2009

அமைதியின் பெருவெளி

அமைதியிலிருந்து
உதிரும் வார்த்தைகள்
கொண்டு சேர்க்கும்
அமைதியின் பெருவெளிக்குள்

இரவின் முடிவில்

காலையில்
அறுக்கப்போகிறவனின்
கையை நக்கி
கருணையை பொழிகிறது
கன்றுக்குட்டி

இருவரும்

ஜன்னலோர இருக்கையில்
அமர்ந்து கொள்ளலாமா என
கேட்கும் பெண்ணுக்கு
இடம் கொடுத்து
மாறி அமர்ந்தேன்
பயணம் முடியும் வரை
பேசிக்கொள்ளவில்லை
இருவரும்
ஆனாலும் பழக்கமாயின
அவளுக்கு இயற்கையும்
எனக்கு அவள் ரசனையும்

Tuesday, February 03, 2009

பூக்களின் குழந்தை

மரத்தை அசைக்கிறாள் சிறுமி
பூக்கள் உதிர்கின்றன
கைதட்டி சிரிக்கிறாள்
மறுபடி அசைக்கிறாள்
தொலைவிலிருந்து
கூப்பிடுகிறார் தாத்தா
சிறுமியின் கைகள்
சொன்னதைக் கேட்டு
வடிந்து விட்டன்
அநேகமாய்
எல்லா பூக்களும்
அழைத்துப் போகிறார் தாத்தா
திரும்பிப் பார்த்தபடி செல்லும்
சிறுமியின் தலையில்
ஒட்டிக் கொண்டிருக்கின்றன
சில பூக்களும்
மரத்தின் பிரியமும்

(நேத்ராவுக்கு)

Sunday, February 01, 2009

யாருக்கும் தெரியாதவன்

நான் வில்லனாக சித்தரிக்கப்பட்ட
உங்கள் நெடுங்கதையில்
என்னை கதாநாயகனாக
வைத்திருந்த பக்கங்களை
கிழித்து விட்டீர்கள்

உங்கள் கொடூரமும் வன்மமும்
ஏற்றப்பட்டு நான்
உலவ ஆரம்பித்தேன்

சண்டையிட்டேன்
குரூரம் பயின்றேன்
கொன்றேன்
இன்ன பலவும் செய்தேன்

என் ரத்தத்தை
உங்கள் பேனாவில் நிரப்பி
எழுதிக் கொண்டிருந்தீர்கள்

உங்கள் பசி அடங்க
எனனை பசிக்க வைத்தீர்கள்

என்னிடமிருந்து மனிதம்
எட்டிப் பார்க்கும் போதெல்லாம்
உள் தள்ளிப் பூட்டினீர்கள்

இரவு போதையில்
என்னை உங்களோடு அமரவைத்து
உரையாடி
மேலும் பல வியூகங்களை உருவாக்கினீர்கள்
என் கண்ணோரத் துளியைப்பற்றி
கவலைப்படாமல்

உங்கள் எழுத்தின் நியமனங்களின்படி
முடிவில் நான்
இறந்து விடுவேன்

உங்கள் கதை விவாதிக்கப்படும்
நீங்கள் பேசப்படுவீர்கள்
முடிந்திருப்பேன் நான்
யாருக்கும் தெரியாத கதாநாயகனாய்

அவனும் நானும்

இடது கை இழந்த
ஒரு மனிதனை
நான் வரைந்து கொண்டிருந்தபோது
அவன் வலது கையை நீட்டி
வண்ணங்களை எடுத்து
தன் இடது கையை
வரைந்து கொண்டிருந்தான்
புன்னகைத்தபடியே

Thursday, January 29, 2009

உங்கள் பெயர்

அருகில் வர
அச்சப்படுகிறது
பறவையின் தானியங்களில்
உங்கள் பெயரை
எழுதி வைத்திருக்கிறீர்கள்

குழந்தையின் வரிகள்

முதல் வரியிலிருந்து
ஒரு பட்டாம் பூச்சி பறந்தது

இரண்டாம் வரியில்
ஒளிர்ந்தது வானவில்

மூன்றாம் நான்காம் வரிகளில்
ஒரு மூங்கில் சாதுர்யத்துடன்
புல்லாங்குழல் இசைத்தது

ஐந்தாம் வரியின் மேல்
தூறல் நடனமிட்டது
இசையின் லயத்திற்கேற்ப

ஆறு ஏழு மற்றும் எட்டாம் வரிகளில்
மான்களின் ஓட்டமும்
மயில்களின் ஆட்டமும்
வனத்தின் பேச்சும்
காண கேட்கக் கிடைத்தன

ஒன்பதாம் வரியை
துடைத்து விட்டுப் போனது
ஒரு மேகம்

பத்தாம் வரியில்
ஒரு பெரியவர் சிதையூட்டப்பட்டு
எரிந்து கொண்டிருந்தார்

வரி பதினொன்றில்
பிறந்த குழந்தை
தான் எழுதிய இந்த கவிதையை
முதல் வரியிலிருந்து
வாசித்துப் பார்க்க
குழந்தைக்குப் பெயர் வைத்த
பட்டாம் பூச்சி
சுற்றிக் கொண்டிருந்தது
பெயரை சொல்லியபடி

Tuesday, January 27, 2009

அனுபவ சித்தன்

அனுபவ சித்தன் நான்
கவிதையில் கனிந்து
உருகும் உலகு

உண்மை திசை

பொய் கலப்புகள் நிறைந்த
இந்த கவிதையை
படித்து முடித்தவுடன்
எரித்து விடுங்கள்
மிஞ்சிய சாம்பலை
கடலில் கரைத்து விடுங்கள்
பின் திரும்பிப் பார்க்காமல்
செல்லுங்கள்
எழுதப்படாத கவிதையின்
உண்மை திசை நோக்கி

மின்மினி பூச்சி

என்னைப் பிடிக்க முடியாமல்
தவ்வி தவ்வி
காற்றில் அலைகிறது
இந்த மின்மினி பூச்சி

Monday, January 26, 2009

பதினேழு முறை...

இதுவரை
பதினேழு முறை நான்
இறந்து விட்டேன்

உன் வலி இறக்கிய வார்த்தைகளில்
இரண்டு முறை

நண்பனின் ஏளன மெளனத்தில்
ஓரிரு முறை

தன் துரோகத்திற்கு
என் பெயர் சூட்டி மகிழ்ந்த
உறவினரின் செயலுக்கு
ஒரு முறை

தம் செளகர்யங்களுக்குத் தக்கபடி
என்னை பிடுங்கி
பின் நட்டு வைக்கும்
கரங்களில் பலமுறை

இப்படி இதுவரை
பதினேழு முறை நான்
இறந்து விட்டேன்
(சில விடுபட்டிருக்கலாம்)

வேண்டுமானால்
நீங்களும் என்னை
சாகடித்துக் கொள்ளலாம்

என் நிஜ மரணத்தில்
சேர்த்து வைப்பேன்
எல்லா இந்த
மிச்ச மரணங்களையும்

Sunday, January 25, 2009

விரல் நுனியில்

உடல் திமிர
கை நீட்டி உங்களை
குற்றம் சொல்லும்
என் விரல் நுனியில்
தொங்கிக் கொண்டிருக்கிறேன் நான்
உங்களுக்குத் தெரியாத
ஒரு குற்றமாக
அல்லது
குற்றவாளியாக

கல் மழை

நீ முகத்தில் எறிந்த
முதல் கல்லும்
பிறகு எறிந்த கற்களும்
விதவிதமான காயங்களை
உருவாக்கி இருந்தன

உன் கையில்
கல் மழை

கடைசியாக
நீ எறிந்த கல்
என் உதட்டைப் பார்த்து

குருதி சிந்திய கணத்தில்
திரும்பிப் போனாய்

உனக்குத் தெரியாது
நீ வீசிய
இறுதிக் கல்
என் புன்னகையின் மேல் என்று

ஏதாவது ஒரு நான்

பெரும் பாடுபட்டு
என்னை
ஒன்று திரட்டும் போதெல்லாம்
வெளியேறி விடுகிறது
ஏதாவது ஒரு நான்

பூமியின் கருணை

கண் நெகிழ
வணங்கி
மண்டியிட்டு
முத்தமிட்ட மண்
உதடெங்கும் ஓடி
உள் எங்கும்
பெய்தது
பூமியின் கருணையை

பார்வை குறிப்புகள்

உன் பார்வை குறிப்பில்
நானொரு
உயிரற்ற தாவரம்
ஆனாலும்
உனக்குத் தெரியாமல்
காலடியில்
பனி சூழப் பூத்திருக்கும்
புல்

இரு நூறு ஆண்டுகள்

இரு நூறு ஆண்டுகளுக்கு
முன்பிருந்து
நான் செதுக்கிய பாறைக்கு
இன்று உயிர் வந்து விட்டது
என் உளியைத் தின்று
என்னைத் தள்ளிவிட்டு
ஓடிக்கொண்டிருக்கிறது
இரு நூறு ஆண்டுகள்
முன் நோக்கி

நட்பின் ரகசியங்கள்

நட்பின் ரகசியங்களை
மிக நுட்பமாய்
சொல்லியபடி
மலை உச்சி வரை
என்னை அழைத்து வந்த நீ
தள்ளி விட்டாய்
பின் தற்கொலை
கொடூரமானது
எனச் சொல்லியபடியே
இறங்கிப்போனாய்
எந்த வித
பதற்றங்களும் அற்று

Monday, December 22, 2008

புன்னகையோடு முடிந்துபோவதை
பாழும் மனம்
போர்களமாய்ப் பார்க்கிறது

என்ன சொல்கிறீர்கள்

என்ன சொல்கிறீர்கள்

உங்கள் வண்ணங்கள் புரிகிறது
ஓவியம் புரியவில்லை
இரவிலிருந்து
கவிதையில் குதிக்கிறது
கனவில் வரும் டால்பின்

Wednesday, December 17, 2008

வாருங்கள்

இளைப்பாறுகையில்
ஓடச்சொல்கிறீர்கள்
வாருங்கள்
ஓடிக்கொண்டே
இளைப்பாறலாம்

Sunday, December 14, 2008

புது வண்ணம்

கட்டிடத்திற்கு
நிறங்கள் பூசிவிட்டு
இறங்கியவன் உடலெங்கும்
புது வண்ணம்

சிறுவன்

வாங்காத சைக்கிள்
நனைகிறது மழையில்
கனவைத் திட்டும் சிறுவன்

அப்பாவின் கடிதம்

கண்ணீர் துளிகளை
தவிர்த்திருக்கிறார் அப்பா
கடிதத்தில்
அவருக்குத் தெரியாது
எழுத்துக்களில்
நீர் கோர்த்திருப்பது

Thursday, November 27, 2008

குழந்தை ஓட்டும் கார்

காரில் அமர்ந்து
ஸ்டீயரிங் அசைத்து
ஹாரன் எழுப்பி
வேகமாக
ஓட்டுகிறது குழந்தை
குழந்தையின்
ஓட்டும் பாவனையில்
பயணமாகும்
தந்தையின் சந்தோஷம்

சிரிக்கிறது உயிர்

தமிழீழ மண்ணில்
சுதந்திரமாய்
சுற்றித் திரிந்த காகிதத்தில்
கலைந்து போகாமல்
ஒளிர்ந்த வரிகள்

நீங்கள்
எம் மரணத்தை
ஒரு பெட்டியில்
அடைக்கப் பார்க்கிறீர்கள்
மீறிப் பிதுங்கி
சிரிக்கிறது உயிர்

(கவிஞர் அறிவுமதி தொகுத்த
'அரைக்கம்பத்தில் தொப்புள் கொடி'
புத்தகத்தில் வெளியானது)

Sunday, November 23, 2008

பெயரற்று இருக்கும் கவிதை

என் பெயரற்று இருக்கும்
இந்த கவிதையை
நீங்கள் படிக்கும் போது
எங்கேயாவது
நான் தென்படலாம்
ஒரு புன்னகையுடன்
அப்போது நீங்களும்
புன்னகைப்பீர்கள்
என் பெயர்
கேட்க மறந்து

Thursday, November 20, 2008

மீன்கள்

ஓடி வருகின்றன மீன்கள்
நேற்று பொறி போட்ட கையில்
இன்று தூண்டில்

வனத்தின் புன்னகை

சிறுமி அள்ளிய மணலோடு
சேர்ந்து வந்த விதை
மெல்ல முளைத்து
அவள் கைபடர்ந்து
செடியாகி சிரித்தது
செடியின் பிரியத்தை
சொல்லிவிட்டுப் போனது
ஒரு பறவை
குதித்துப் போன
குழந்தை மனதில்
வனத்தின் புன்னகை

Sunday, November 09, 2008

விளையாட்டு

பேரனின் பால்யத்தை
தாத்தாவும்
தாத்தாவின் முதுமையை
பேரனும்
வீசி வீசி
விளையாடுகின்றனர்

...முடிப்பதற்குள்

பறப்பேன் என்று
அடம் பிடிக்கிறது
வரைந்து முடிப்பதற்குள்
இந்த பட்டாம்பூச்சி

பறந்தோடும் நதி

கனவில் வந்த ஒட்டகம்
அழைத்துப் போய் காட்டியது
பாலைவனத்தில்
பறந்தோடும் நதியை

Monday, October 27, 2008

கண் அள்ளிய மழை

கண் அள்ளிய
மழையை எதற்கு
கவிதையில் கொட்ட
அதுவாய்
வழிந்தோடுகிறது
உள் எங்கும்
ஒரு ரீங்காரத்துடன்

Sunday, October 26, 2008

குவியும் காட்சிகள்

ஒருவர்
பலர் கடக்க
சாலை சுவரில்
சிறுநீர் போகிறார்
ஒருவர்
இலவசமாக படித்த
தினசரியை
தன்னிச்சையாக
எடுத்துப் போகிறார்
ஒருவர்
துயரம் மிகுந்த
மருத்துவமனை வராண்டாவில்
தான் பார்த்த
சினிமா கதையை
சொல்லி மகிழ்கிறார்
ஒருவர்
பஸ்ஸில் டிக்கெட் எடுக்காமல்
ஏறி இறங்கியதாக
மார் தட்டுகிறார்
ஒருவர்
சாலை நிறுத்தத்தில்
விலகிய புடவையை
பார்த்த கண் எடுக்காமல்
சிக்னல் விழ கிளம்புகிறார்
ஒருவர்
நேற்றோடு நிறுத்தியதாக
சொன்ன குடியை
நண்பனின்
இலவச விஸ்கிக்காக
தளர்த்திக் கொள்கிறார்
ஒருவர்
காசு கொடுத்தால்தான்
காரியம் நடக்கும் என்று
லஞ்சத்தை
தன் வார்த்தைகளால்
அழிக்கப் பார்க்கிறார்
இப்படி
ஒருவர் ஒருவராய்
குவியும் காட்சிகள்
சில நேரங்களில்
இந்த ஒருவர் குறிப்பேட்டில்
நானும் வந்து விடுவது
சங்கடமாக இருக்கிறது
முற்றுப்புள்ளிகளை
உடைக்கிறது
குழந்தையின் மொழி

Thursday, October 23, 2008

என்றோ விதைத்த சொல்

புல் ஒற்றி எடுக்க
விரல் வந்த பனித்துளி
மாற்றிக்கொண்டிருந்தது
என்னை ஒரு
தாவரமாய்
--------------------
என்றோ விதைத்த சொல்
பெருக்கெடுத்தோடும்
அன்பாய் இன்று
--------------------
விடுபட்ட
ஒரு கண்ணீர் துளி
குதிக்கிறது
புன்னகையில்
----------------

Monday, October 13, 2008

காடும் மரமும்

ஒரு மரத்திடம் கேட்டேன்
இந்த காட்டைப்பற்றி
உன் மொழியில் சொல்
சிரித்தது மரம்
சில பூக்கள் விழ
காடு அகராதி
நான் சிறுசொல்
எனச்சொல்லி
முடித்துக் கொண்டது

பயண வழியில்

பேருந்தில் குழந்தை
எல்லோரையும் பார்த்து
சிரிக்கிறது
பேருந்தும் சிரிக்கிறது

Saturday, August 23, 2008

பென்சில் நதி

நதி பற்றிய கவிதையை
நான் எழுதியபோது
அருகில் வந்த மகள்
வரைந்த நதியைக் காட்டினாள்
தாளில் ஓடியது
பென்சில் நதி
என் கவிதையை
அதில் கரைத்துவிட்டு
மறுபடி பார்க்க
இன்னும் முடியவில்லை
எனச் சொல்லியபடியே
ஓடிய அவள்
கண்களில் மீதி நதி

(26.10.08 கல்கி
இதழில் பிரசுரமானது)
----------------------

யாரும் படித்து
முடிக்கவில்லை
மழைபுத்தகம்
-----------------

Thursday, August 21, 2008

பெருவழி

அருகில் போய்
மிக ரகசியமாய்
பனித்துளியிடம்
சின்ன கவிதையை
சொன்னேன்
கேட்டு
புன்னகைத்தது
கவிதையில்
பனித்துளி பூத்தது
----------------
கையிருக்கும்
முகவரியிலிருந்து
நீள்கிறது பெருவழி
கால்கள் கடக்க
வழி நெடுகிலும்
சிறுசிறு முகவரிகள்
-----------------

Tuesday, August 12, 2008

வழிக்குறிப்புகள்

வந்து பார்க்காத
கடிதம் போடாத
மகனுக்கு
தந்தை எழுதினார்
ஊர் பக்கத்தில்
இருக்கிறது
நீதான் தொலைவாக
இருக்கிறாய்

(26.10.08 கல்கி
இதழில் பிரசுரமானது)

------------------

பார்த்த வானவில்
அடுப்புக் கறியில்
வரையும் சிறுமி

(26.10.08 கல்கி
இதழில் பிரசுரமானது)

------------------
தவறவிட்ட ரயில்
வழி அனுப்புகிறேன்
கையசைத்து
------------------
வெயிலில் நனைந்து செல்கிறேன்
என்று கதை மனோபாவத்துடன்
யோசித்தபடி
வெயிலில் காய்ந்து சொல்வது
கடினமாக இருக்கிறது
-------------------

Saturday, August 09, 2008

இரு வார்த்தைகள்

சற்று வயது கூடிய
வேலைக்காரன்
தன் நுட்பம் கலையா
விரல் பாவங்களுடன்
மிக மெதுவாய்
மரம் அறுத்து
சரி பார்த்து
தக்கபடி பொறுத்தி
வடிவம் அளந்து
ஆணிகள் அடித்து
வருடிக் கொடுத்து
தன்னையே
ஒரு முறை பெயர்த்து
கிடத்தி
பின் எடுத்து
கண்ணோரம் வந்த
ஒரு சொட்டை
போட்டுபோல் வைத்து
துக்க வண்ணம் பூசி
மரத்துகள்களை
அப்புறப்படுத்தி
மஞ்சள் வெயில் பட
உருவாக்கிய சவப்பெட்டியை
பார்த்தபடி
இருக்கும்போது
அவன் உதடு
சத்தமின்றி சொல்கிற
இரு வார்த்தைகள்
உயிர் வந்திடுச்சி

Monday, August 04, 2008

மழையின் கணங்கள்

மழையைப் பற்றி
எவ்வளவோ பேசினாய்
மழை விட்டப் பிறகும்
ஒரு மழையைப்போல

இப்போதெல்லாம்
பெய்யும்
ஒவ்வொரு மழையும்
பேசுகிறது
உன்னைப் பற்றி

Tuesday, July 15, 2008

கல் நதி

வார்த்தைகளை
மாற்றிப்பாடுகிறது குழந்தை
குழந்தையின் பாடலில்
தன்னைப் புதிது
செய்து கொள்கிறது கவிதை
----------

பிரசாதம் வாங்கிய
சிறுவனிடம்
கும்பிட்ட சாமியின்
பெயர் தெரியுமா கேட்டேன்
எனக்கு பசிக்குது சாமி
சொல்லியபடியே ஓடினான்

(26.10.08 கல்கி
இதழில் பிரசுரமானது)

-----------

உள் உளி
பாய
நகர்கிறது
கல் நதி
------------
தான் வரைந்த கடலில்
நேற்றுப் பார்த்த கடல்
இருக்கிறதா
கேட்டாள் சிறுமி
அவள் நீலக் கோடுகளிலிருந்து
எம்பிக் குதித்த வண்ணமீன்
ஆம் என்று
சொல்லச்சொல்லி
உள் ஓடி
மறைந்து போனது
--------------

Sunday, June 29, 2008

அன்பின் கையெழுத்து

ஒரு மழை நாளில்
ஓர் குடைகீழ்
நாம் நிற்க
என் கையெழுத்திட்டு
நான் உனக்கு
வழங்கிய புத்தகம்
இதோ இத்தனை
வருடங்கள் கழித்து
ஒரு பழைய
புத்தகக் கடையில்

வாங்கிச் செல்கிறேன்

புத்தகத்தில் அழிந்திருக்கிறது
என் பெயரும்
நம் அன்பும்

(1.10.08 ஆனந்த விகடன்
இதழில் பிரசுரமானது)

Wednesday, June 25, 2008

நீங்களும் ஒரு பறவையும்

நீங்கள் ஒரு பறவையை
சுடும்போது
கவனத்துடன் குறிவைக்க வேண்டும்

தோட்டா பட்டதும்
செத்து விழ வேண்டும் பறவை

மீதி உயிர் இருந்து
மண்ணில் புரண்டு
மெதுவாய் போகும்படி ஆகக்கூடாது

சுடப்பட்ட பறவை
விழுந்த பிறகு
சில நொடிகள் முடிந்தால்
அஞ்சலி செய்யலாம்

பறவையின் இன்ன பிற
உறவுகளுக்காக
ஒரு வருத்தச்சொட்டு சிந்தலாம்

பின் பறவையை
எப்படி சமைப்பது
என்னென்ன செய்வது
என்பது பற்றி பேசலாம்

மதுக் கோப்பைகளின் நடுவே
மேசை மீது
நிரப்பப்பட்டிருக்கும் கறி

நீங்கள் சுவைக்கிறீர்கள்
பற்களில் நசுங்கும்
பறவையின் சத்தம் கேட்டபடி

அப்போது உங்கள்
கண்களை கலைத்துப்
போகிறது ஒரு பறவை

உங்கள் துப்பாக்கியை
முகம் திருப்பி வைத்து
காற்றில் நீந்தி
வானத்தில் அதன் சிறகுகள்
நடனமிடுவதைப் பாருங்கள்
முடிந்தால் ரசித்து

Thursday, June 19, 2008

பார்த்தபடி படிக்கட்டுகள்

லிப்ட் வாய்க்கப் பெறாத
மூன்றாவது மாடி

மூச்சு இறைப்பதைப்
பார்த்தபடி படிக்கட்டுகள்

காலெடுத்து வைக்க
முடியும் அப்பார்ட்மெண்ட்

இருந்து பார்த்து
ஊருக்குப் போய்விட்டார் அப்பா

அவர் விட்டுச் சென்ற
வார்த்தைகளில்
விதிக்கப்பட்ட இந்த வீடெங்கும்
பரவிக் கிடக்கும்
எங்கள் கிராமம்

Wednesday, June 18, 2008

பொம்மைகள்

குழந்தை உடைத்த
பொம்மையிலிருந்து
குழந்தைக்கு கிடைத்தன
மூன்று பொம்மைகள்

கூண்டிலிருந்து...

தொழில் மாற்ற
உத்தேசித்து
கூண்டைத் திறந்து
போகச் சொல்கிறான்
ஜோஸ்யக்காரன்

அவன் காலை
சுற்றி சுற்றி வருகிறது
சுதந்திரம் மறந்த கிளி

கூர்காவின் கடிதம்

ஒருவன் கடிதம் படிக்க
மற்றவன் கேட்க
இசைக் கச்சேரி போலிருந்தது
கூர்காக்களின் மொழி

கேட்டுக் கொண்டே வந்தவன்
குழந்தையை கைகளில்
கொஞ்சுவது போல்
பாவனை செய்து
ஆட ஆரம்பித்து சிரித்தான்

தான் அப்பா ஆனதாக
மார் தட்டி
சத்தம் போட்டான்

ஓடிப்போய்
மிட்டாய் வாங்கி வந்து
எனக்கும் தந்ததில்
நினைத்தது சரி என்று
தெரிந்தது

தூர உணர்வுகளை
கொட்டிக் கொண்டிருந்தது
கடிதம்

என் நடை முடிந்து
வருகையில்
போயிருந்தான்
கடிதம் படித்தவன்

கடிதத்தின் எழுத்துக்களில்
விளையாடியபடியே இருந்தன
அமர்ந்திருந்த
கூர்காவின் கணகள்

(1.10.08 ஆனந்த விகடன்
இதழில் பிரசுரமானது)

Tuesday, May 06, 2008

பாதையின் கருணை

கை நீட்டிக் கேட்பவனை
ஏற்றிச் செல்ல
நிற்கவில்லை
எந்த வாகனமும்

வேகமாய்க் கடக்கின்றன

நடப்பவன் ஏற்றிச் செல்கிறான்
நிலவின் புன்னகையை
மழைத் தூறல்களை
நிற்காமல் போகச் சொல்லும்
பாதையின் கருணையை

பாட்டியின் கதை

கதைச் சொல்லிக்கொண்டே
வந்த பாட்டி
தூங்கிப்போனாள்

விழித்திருக்கிறது குழந்தை
கதாபாத்திரங்களுடன்

Sunday, April 20, 2008

மான்யா

காலையை அழகுபடுத்தி
சென்றுகொண்டிருந்தன
பள்ளிக்குழந்தைகள்

என்னை கவர்ந்த
ஒரு குழந்தைக்குப்
பெயரிட்டேன்

மான்யா

பள்ளிக் கடக்கும்போதெல்லாம்
என் மான்யாவைப் பார்ப்பது
வழக்கமாயிற்று

அவள் நடைஅசைவும்
கண்களிலிருந்து
கொட்டும் கனவுகளும்
சுகமானவை

பள்ளிவிடுமுறை நாட்களில்
பார்க்க முடியாமல் போகும்
மான்யாவை

சந்திக்க வாய்ப்புக்கிடைத்த
ஒரு தருணத்தில்
அவளிடம் கேட்டேன்

உன் பெயரென்ன

சிரித்தபடி பார்த்தவள்
பேசினாள்

உங்களுக்கு என்ன
பிடிச்சிருந்தா
உங்களுக்கு பிடிச்ச பேர்ல
கூப்பிடுங்க

மான்யா

கேட்டு
நாக்கில் சுவையூறும்படி
சொல்லிப்பார்த்தாள்

பள்ளிமணி அழைக்க
கை அசைத்தபடி ஓடி
தன் தோழியோடு
சேர்ந்துகொண்டு சொன்னாள்

என்னோட
இன்னோரு பேரு
மான்யா

Thursday, April 17, 2008

...என்றொரு மருத்துவர்

என் நோய்கள் குறித்து
அக்கறையோடு விசாரித்தார்
மருத்துவர்

தெரியாத பலவும்
தெரிவித்தார்

மருந்துகளின் வரிசை
நீண்டது

மதுக்கடைப்பக்கம்
போகக்கூடாது
கட்டளையிட்டார்

வயது கூட
அது நோய்களுக்குக்
கதவுகளைத் திறந்து விடுகிறது
மறக்காதே என்றார்

கடைசியாய்க் கேட்டார்

என்ன தொழில்
செய்கிறீர்கள்

எழுத்தாளன்
கதை கவிதை
எனது தொழில்

புன்னகைத்தார்

உங்கள் எழுத்து
வாழ்க்கையை நகர்த்துகிறதா

அறை மின்விசிறி
நின்று போக
வெளிக் காற்றில்
தாள்கள் படபடக்க
முகம் துடைத்தபடிப்
பார்த்தேன்

வயது கூட
அது நோய்களுக்குக்
கதவுகளைத் திறந்து விடுகிறது
ஆரம்பித்திருந்த
என் கதையின் வரி
அங்கேயே நின்றிருந்தது

Tuesday, April 15, 2008

அணைந்தது விளக்கு
தெரிந்தது
இருளின் ஒளி

Friday, April 11, 2008

வெளவால் மண்டபம்

இருளில்
பசியில்
ஏதுமில்லாமல்
கிடந்த
பிச்சைக்காரியைப்
புணர்ந்தவர்கள்
விலகிப்போனார்கள்
வேகமாய்

அவள் அழுகை
அங்குமிங்குமாய் அலைந்து
வழி அறியாமல்
திரும்புகிறது
அவளிடமே

நடுங்கும்
வெளவால் மண்டபம்
அவளோடு சேர்ந்து

உதவிக்கு வர இயலாமல்
புரண்டு படுக்கிறான்
கல்லறைக்குள் இருப்பவன்

அவள் ரத்தம் கலைக்கப்
பெய்கிறது மழை

துன்பம் பார்த்து
நகர்கிறது பெளர்ணமி

மண் அள்ளி வீசி
உலகை சபிக்கிறது
ஒரு பைத்தியத்தின் குரல்

(புதிய பார்வை ஏப்ரல்16-30,08இதழில்
பிரசுரமானது)

சொற்களில் பெய்த மழை

நின்றவுடன் போகலாம்
இருக்கச் சொன்னேன்
வேலை இருப்பதாகப்
புன்னகைத்தபடியே
போனார் நண்பர்

அடுத்த முறை
வந்தபோது
அவர் சொற்களில்
பெய்து கொண்டிருந்தது
நனைந்து சென்ற மழை

(புதிய பார்வை ஏப்ரல்16-30,08இதழில்
பிரசுரமானது)

Saturday, March 08, 2008

ஒவ்வொரு முறையும்

ஒரு தேநீர் நேரத்தில்
கசாப்புக் கடைக்கார நண்பர்
மௌனமாய் சொன்னார்
ஒவ்வொரு முறை
வெட்டும் போதும்
என் மரணத்தையும்
பார்க்கிறேன்

மொழியற்ற மொழியில்

சிறுமியும் பறவையும்
பேசிக்கொண்டிருக்கிறார்கள்
மொழியற்ற மொழியில்
--------
பள்ளி விடுமுறை
சிலேட்டை மழையில்
நீட்டும் சிறுமி
----------

என் மரணத்தை கொண்டாடுங்கள்

என் மரணத்தை கொண்டாடுங்கள்
உங்கள் சிரிப்பில்

இந்த வரிகளை
யோசித்தபோது
ஒரு மரணம் நிகழ்ந்தது

எழுதியபோது
ஒரு மரணம் எரியூட்டப்பட்டது
ஒன்று புதைக்கப்பட்டது

வெளியானபோது
சில மரணங்கள் நெருங்கிக்கொண்டிருந்தன

படித்து புன்னகைத்தவர்
புறப்பட்டுப்போனார்
ஒரு மரணசேதி கேட்டு

பழைய காகித கடையில்
அதைப் பார்த்த சிறுவன்
தாத்தாவை நினைத்து கொண்டான்

என் மரணத்தை கொண்டாடுங்கள்
உங்கள் சிரிப்பில்

சத்தம் போட்டுச் சென்றவனை
எல்லோரும் பார்த்தார்கள்

எப்போதும் பார்க்கும்
ஒரு பைத்தியத்தைப் போல

Friday, March 07, 2008

காசோலையின் கண்கள்

சற்றுத் தள்ளி
தேதி இடப்பட்டிருக்கும்
இந்த காசோலையை
உடனே வங்கியில்
போட முடியாது

சத்தம் குறைத்துள்ளேன்
கோரிக்கைகளை

எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்
என் நாள் பதற்றத்தைப்
பார்த்தபடி
கண் சிமிட்டுகின்றன
காசோலையின் கண்கள்

Saturday, March 01, 2008

வழி அறியாக் குளிர்

முட்டும் காற்றில்
அசையும்
மழைக்கயிறுகள்

கண்ணாடியில் மொய்க்கும்
துளிகள்கூட்டம்

வழி அறியாக் குளிர்

கைகள் அணைத்த
தேநீர் கோப்பை

இறங்கும் சூடு

துன்பம் தராத தனிமை

பழகிய காத்திருப்பு

கூப்பிட்டாய்
கைபேசியில்
உன் பெயர்
ஒரு புதிரைப்போல

அழகான பொய்களோடு
சில உண்மைகளும்

வராதது குறித்து
வருத்தம் தெரிவித்தாய்
இந்த முறையும்

என் மௌனம் உன்னை
ஒன்றும் செய்யவில்லை

பிறகு பேசுவதாகத்
துண்டித்தாய்

உன் குரல் மறைய
கேட்கத் தொடங்கினேன்
மழையின் பேச்சை