Tuesday, August 31, 2010

தேடுதல்

மண்புழுவைப் பற்றி
எழுதி வரச்சொன்னார் டீச்சர்
குழந்தையிடம்

மண்ணில் தொலைந்த
மண்புழுவை
‘நெட்’டில்
தேடிக்கொண்டிருந்தார் அப்பா

அனுபவ சித்தனின் குறிப்புகள்

171-

நான்கள்
மொய்த்துக் கிடக்கும் என்னை
விடுவிப்பதெப்படி

172-

கிடைக்காது எனப்போட்டுப்
பூட்டி வைத்த கேள்விகள்
பெட்டியை சவப்பெட்டியாக்கி
உடைத்து வெளியேறின
கிடைக்கும் பதில்கள் என்ற
பாய்ச்சலுடன்

Sunday, August 29, 2010

கண்ணீரில் வரைதல்

கண்ணீரை
எந்த வண்ணத்தில்
வரைந்தாலும்
ஓவியமாகவே இருந்தது

கண்ணீரில்
வரைந்தபோது
ஓவியம் வெளியேறியது

சைத்தான்

பாட்டிலில்
அடைக்கப்பட்ட சைத்தானைப்
போட்டுடைத்தேன்

உடைந்து போன சைத்தான்
ஒன்றாகிப் போனது
உடையாத பாட்டிலுக்கு
ஒரு முத்தம் வைத்துவிட்டு

Saturday, August 28, 2010

அந்த வரி

அந்த ஆங்கில வரியை
மொழிபெயர்த்தபோது
அழகாக வந்திருந்தது

துப்பாக்கியைக் கொல்லுங்கள்

சுட்டுக் கொண்டிருந்தவன்
சரியாக இல்லை என்றான்

இறந்து கொண்டிருந்தவன்
கேட்கவில்லை என்றான்

Friday, August 27, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

168-

என்னைத் தேடாதீர்கள்
எழுதும் கவிதை
வழி நுழைந்து
வெளியேறி விடுவேன்

169-

பூமியில் பறக்கவும்
வானில் நடக்கவும்
கற்றுக் கொடுக்கின்றன
குதிரையின் கால்களும்
பறவையின் சிறகுகளும்

170-

இந்த தோல்விகளை வைத்து
ஆடப்போகும் விளையாட்டில்
ஜெயித்துவிட முடியும்

Wednesday, August 25, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

164-

மை இருட்டில்
மெய் இருட்டை எழுத
போனது
பொய் இருட்டு

165-

இல்லாதது எதுவும்
இருப்பதில்லை
நுரைத்த வார்த்தைகளை
துப்பிவிட்டு நடந்தேன்
எச்சில் பொய்களுடன்

166-

காற்றை
உளியால்
செதுக்கும் போதெல்லாம்
உதிர்கிறது இசை
சிலையென

167-

மரணத்தை சிறிதளவு
ஒரு மாத்திரையைப் போல
விழுங்கிவிட்டுப் படுத்தேன்
நன்றாகத் தூக்கம் வந்தது

வெட்டி எறியும் வார்த்தைகள்

கைவீசி
நீங்கள் வெட்டி எறியும்
வார்த்தைகளுக்கிடையில்
ஒளிந்திருக்கும் பாம்பு
கூர்ந்து பார்க்கிறது
உங்கள் கைகளைக் கொத்த

Monday, August 23, 2010

வாழ்விடம்

தான் இறந்து போனது தெரியாமல்
அவன் திரும்பிக் கொண்டிருந்தான்
வாழ்விடம் நோக்கி

இழுத்தல்

கதாபாத்திரங்கள் எல்லோரும்
கதைக்குள் இழுத்து
என்னையும் ஒரு
பாத்திரமாக்கிவிட்டார்கள்

யாராவது
படிக்கும்போதுதான்
சொல்ல வேண்டும்

தயவு செய்து
என்னை வெளியில்
எடுங்கள் என்று

Sunday, August 22, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

160-

காலங்கள்
ஓடிவிட்டதை நினைத்துக்
கவலைப்படுகிறீர்களா

இல்லை காலங்களோடு
ஓடிக்கொண்டிருப்பதை நினைத்து
சந்தோஷப்படுகிறேன்

161-

என்னுடன் யாருமில்லை
இந்த வரி தந்த கலக்கம்
அவர்களுடன் நானிருக்கிறேன்
என்று மாற்றியபோது
இல்லாமல் போனது

162-

யார்கூடி நகர்த்த
தேருக்கடியில்
நசுங்கிய காலம்

163-

தூண்டிலில் சிக்கிய
மீனின் கண்களில்
விடை பெறும் நதி

Thursday, August 19, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

156-

கண்களில்
குவிந்து கிடக்கும் தைரியம்
போ எனச் சொல்லி
வெளியேற்றுகிறது
கையாலாகாத கண்ணீரை

157-

தயங்கி தயங்கி
பிரார்த்தனையைச் சொன்னேன்
போயிருந்தார் கடவுள்

158-

இந்த சிறையிலிருந்து
வெளியே
வந்தபோதுதான்
நிறைய சிறைகளுக்குள்
என்னை பூட்டி வைத்திருப்பது
தெரிய வந்தது

159-

பெருங்காட்டை
தரிசித்து
வெளிவந்தேன்
உள்ளங்கையில்
பூத்திருந்தது
மூலிகைச் செடி

Tuesday, August 17, 2010

மாமிசம்

உன் ஈர நிர்வாணம்
என் கண்களின் உடை

இந்த வரியில்
ஒட்டி இருந்த
மாமிசத்தில்
மொய்த்த ஈக்களில்
தனிப்பெரும்
ஈயாய் நான்

கடவுளுடன் உரையாடல்

கடவுளிடம்
என் டேட் ஆப் டெத்
பற்றிக் கேட்டேன்

சிரித்தார்

மீண்டும் கேட்டேன்

சிலதை ரசிக்கப் பழகு
சிலதை ஒதுக்கப் பழகு
சிலதை விரும்பப் பழகு
சிலதைப் பார்க்கப் பழகு

சொல்லிக் கொண்டே சென்றார்

மீண்டும் என்
சாவு தேதி குறித்து
சத்தமாய்க் கேட்டேன்

சொன்னார்

சிலதை
தெரிந்து கொள்ளாதிருக்கப் பழகு

அந்த அசரீரியோடு
முடிந்து போனது
கடவுளுக்கும் எனக்குமான
உரையாடல்

Monday, August 16, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

151-

என் பாத்திரத்தில்
மழை
உங்கள் பாத்திரத்தில்
உணவு
அதனாலென்ன

152-

யாரும் என்னைத் தேடாதீர்கள்
ஜென் கவிதைகளில்
என்னைத் தேடுகிறேன்

153-

அவன் கனவில்
ஒரு கத்தியை
சொருகிவிட்டுப் படுத்தான்
காலையில் இறந்து கிடந்தான்

154-

மலைப் பாம்பை
விழுங்கிய எறும்பு
எறும்பாகவே நகர்கிறது

155-

வலி விழுங்கு
கண்ணீர் குடி
யுத்தம் கையெடு

Saturday, August 14, 2010

வேர் கொண்டான்

மேடை ஏறி
பின் பக்கம் போய்
வேஷம் போட்டிருந்தவரை
உற்றுப் பார்த்து
அவர் கேட்டார்
நீங்க கந்தசாமிதானே

அவர் சொன்னார்
இந்த கதாபாத்திரத்தின் பேரு
வேர் கொண்டான்
அது மட்டும்தான்
இப்போது
எனக்குத் தெரியும்

ஆதி ஒளி

மூதாட்டியை
கொல்ல வந்தது பாம்பு

அதைப் பார்த்து சிரித்து
புரண்டு படுத்தாள் பாட்டி

அவள் கனவிலிருந்து
போகிறது பாம்பு
சிறகை விரித்து
பறவையாய் ஆகி

ஆதி ஒளியை
தரிசித்தபடி

Wednesday, August 11, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

146-

சிறைபட
உணர்கிறேன்
விடுதலை

147-

யாரும் கவனிக்காத
தப்பை செய்தேன்
நான் கவனிக்க

148-

வெற்றுப் பாத்திரத்தில்
நிரம்புகிறது இசை
மழை

149-

இமை மூடி
திற
தூக்கம் முடி

150-

என் கால்களின்
மேலே இருப்பது
நானல்ல
ஒரு உலகம்

Monday, August 09, 2010

கல் புத்தகம்

வலிக்கவில்லை
நீ எறிந்த கல்
நிறைய பக்கங்கள் கொண்டது
படித்துக் கொண்டிருக்கிறேன்

கற்றுத் தந்தவை

நகரவாசியானவன்
கிராம ஆசிரியருக்கு
விரிவாக
எழுதிய கடிதத்தை
இப்படி முடித்திருந்தான்

அய்யா
நீங்கள் கற்றுத் தந்தவை
இன்னும்
கற்றுக் கொடுக்கின்றன

குரங்குகள்

உங்கள் குரங்கு
என் மேலேறி
விளையாடுகிறது
தூக்கிப் போங்கள் என்றேன்
அவரிடம்

எதுவுமில்லையே என்றார்

பார்த்தேன்
எதுவுமில்லை

ஆனாலும்
விளையாடியது குரங்கு
அவர் பெயரை
என் பெயரை
யார் யார் பெயரையோ
சொல்லியபடி

Sunday, August 08, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

143-

நான் தேடி வந்தவன்
கூட்டத்தில் இல்லை
என்னைத் தேடி
வந்தவன் இருந்தான்

144-

யாரும் காப்பாற்றக் காணோம்
சொல்லிடுக்கில்
சிக்கிக் கொண்ட மெளனம்

145-

சில உரையாடல்களுக்கு
நடுவில்
இறந்து போகின்றன
பல உரையாடல்கள்

Friday, August 06, 2010

ஏறுதல்

மலையில்
ஏறுவது போல்
கவிதையில்
ஏறியது எறும்பு

மலை உச்சியிலிருந்து
தொங்குவது போல்
எறும்பின் காலடியில்
தொங்கியது கவிதை

Tuesday, August 03, 2010

காலம்

குளிர் சாதன பெட்டிக்குள்
வைத்திருந்த காலத்தை
எடுத்துப் பார்த்தேன்
உள்ளிருந்த மீன்கள்
தின்றது போக
மீதி இருந்தது
பிணவாடை அடிக்க

இறந்து போன காலம்
இன்னொரு முறை
இறந்து போயிருந்தது

ரத்த சிவப்புள்ள ஆப்பிள்கள்

ரத்த சிவப்புள்ள ஆப்பிளை
ரத்த சிவப்புள்ள மனிதன்
ரத்த சிவப்புள்ள காரின் மேல் சாய்ந்து
கடித்துத் தின்கிறான்
ரத்த சிவப்பில்லாத சிறுமி
பார்த்தபடி இருக்க

ரத்த சிவப்பான கண்கள் கொண்டவன்
ரத்த சிவப்பான குத்திய கத்தியை எடுக்கிறான்
ரத்த சிவப்புள்ள மனிதனின்
வயிற்றிலிருந்து
விழுந்து கொண்டிருக்கின்றன
ரத்த சிவப்புள்ள ஆப்பிள்கள்

Sunday, August 01, 2010

குட்டிகள்

மழையில் நனையும்
நாய்க்குட்டியைத்
தூக்கி வருகிறேன்
கூடவே வருகின்றன
மழைக் குட்டிகளும்

விடுதல்

மனநிலை பிசகியவன் என்று
அவனைச் சொன்னார்கள்
அவன் மழையிடம்
சொன்னான்
அவர்கள் பேசுவதை
நீ கழுவி விடு
நான் மறந்து விடுகிறேன்