Tuesday, April 15, 2025

பசியின் குரல்

சாலையோரம்

படுத்துக்கிடப்பவன்

கொசுக்களோடு போராடுகிறான்

 புரண்டு படுக்கிறான்

 விழித்திருக்கும் பசிக்குப்

பதில் சொல்ல முடியாமல்

தவிக்கிறான்

 எனக்கு

யாருமே இல்லயா

குரல்  உள்ளிருந்து வருகிறது

 நானிருக்கிறேன்

எனச்சொல்லி

கண்ணீர் வழிகிறது

 துடைத்தபடியே

எழுகிறான்

பாதி பீடியைப்

பற்ற வைக்கிறான்

பீடியின் புகையோடு

கலக்கிறது

துயரப் புன்னகை

போலீஸ் ஜீப்

அருகில் வந்து

நிற்கிறது

அவனைக் கேள்விகளால்

குடைகிறார்கள்

பசியின் குரலில் சொல்கிறான்

அய்யா என்ன

இப்படியே விட்டுட்டுப்

போனா போங்க

இல்ல கூப்பிட்டுப்போயி

உள்ளப் போடுங்க

வேலத் தேடி

பட்டணம் வந்தேன்

நான் தொலையறதுக்குள்ள

கிடைச்சிடும் நம்பறேன்

நாளைக்கு ஒரு எடத்துல

வரச்சொல்லி இருக்காங்கா

 அவனைப் பார்க்கிறார்

இன்னும் சில நாட்களில்

ஓய்வு பெறப்போகிற போலீஸ்காரர்

குறுக்கும் நெடுக்கும்

சிந்தனைகள் ஓட

போகலாம் என

டிரைவரிடம் சொல்கிறார்

 மெல்லப் போகும்

ஜீப்பைப் பார்த்து

எதிர் திசையில் நடக்கிறான்

 எனக்கு

யாருமே இல்லையா

சத்தம் போட்டுச் சொல்கிறான்

இப்போது

கண்ணீர் இல்லை

 நகரின் மெளனத்தை

அவன் குரல் அசைக்கிறது

 

 


No comments:

Post a Comment