Saturday, September 23, 2006

பெருமழை

கனவை நனைக்கும் பெருமழை
மூழ்கிய இரவிலிருந்து
விழித்தெழும் காலை

Sunday, September 10, 2006

மற்றும் சில எண்கள்

டைய்யை சரி செய்து கொண்டவர்
கண்மூடித் திறந்தார்

பெரியவர் வெளியேறுவதில்
தாமதம் ஏற்பட்டது

ஒன்று இரண்டு முன்று
சொல்லியது குழந்தை

அதில் ஒரு சித்திரம்
படிந்திருந்தது

நான்கில் சிரித்து நின்றது
ஒரு ரோஜாப்பூ

அருகாமை நறுமணத்தை
உள்வாங்கியது இளமை

பாடல் முணுமுணுப்பின்
சத்தம் குறைத்தாள் பெண்

போவதும் வருவதுமாய்

மடித்த காகிதங்களைப்
படித்துப் பார்த்தார்
நடுத்தர வயதுக்காரர்

பலவித புன்னகைகளில்
வேலை வேட்டையாடி

நீள் சதுர கண்ணாடி
காட்டிக்கொடுத்த வயதைக்
குறைப்பது பற்றி யோசித்தார் ஒருவர்

கூடவே வந்தது இசை

போவதும் வருவதுமாய்

யாராவது வருவார்களா
பார்த்தபடி இருந்தன
படிக்கட்டுகள்

பதிவு செய்யப்பட்ட
வசீகர பெண் குரல்
அடிக்கடி ஒலித்தது

தயவு செய்து
கதவை மூடவும்

அன்பின் வாசனை

கை குலுக்கி
விடை பெறுகிறாய்
என் உள்ளங்கை எல்லாம்
உன் அன்பின் வாசனை

Sunday, September 03, 2006

விட்டு விட்டு

வானம் அறுத்து
தன்னை
செய்துகொண்ட கவிதை
பறக்கிறது
என்னை விட்டு விட்டு

Friday, September 01, 2006

பூ ஜாடியும் அவனும்

பூ ஜாடியை
மாற்றி வைப்பது
அவன் வேலை
தினம் தினம்
பூக்களை நிரப்பி
அதை செய்கிறான்
புதிய நாளை
டேபிளில் வைத்து
முந்தைய நாளை
எடுத்துப்போவது போலிருக்கும்
அவன் செய்வது
காற்றில் ஆடி
நன்றி சொல்லும் பூக்கள்
பூக்களுக்கும் அவனுக்குமான இசைவில்
வாசம் இருந்தது
பூ ஜாடியை
மாற்றி வைப்பது
அவன் வேலை
அலுப்பிலாமல்
செய்கிறான் இதை
பூக்கள் பஞ்சம்
வந்ததில்லை அவனுக்கு
அவன் புன்னகையில்
சில பூக்கள் ஒட்டி இருக்கும்
அவனே உதிர்ந்து
பின் மலர்வது போலிருக்கும்
ஒவ்வொரு முறை
இதை செய்யும் போதும்