Wednesday, April 29, 2020

பசி


அங்கிருந்த எல்லோருக்கும் பசித்தது
அதில் பழைய பசியும் புதிய பசியும்
சேர்ந்து கொண்டது
இட்டு நிரப்ப வேண்டிய பள்ளம் போல்
இருந்தது வயிறு
ஆளாளுக்கு ஒரு கதைச் சொல்லி
பசியை மறக்கப்பார்த்தனர்
குழந்தைப் பறவைகளுக்கு
தானியம் போட்டு
நட்பாக்கிக்கொண்ட கதையைச் சொன்னது
ஒரு தம்பி பிறை நிலவுக்கு
கதைச் சொன்னபோது
அது பௌர்ணமியாகி விட்டதைச் சொன்னான்
அப்பா வனத்திற்குப் போய்
பழங்களைப் பறித்து வந்த கதையைச் சொன்னார்
அம்மாவிற்குக் கதை ஏதும் தோன்றவில்லை
எல்லோரையும் மிரள மிரள பார்த்தாள்
சோறுதான் எனக்குக் கதை
யாராவது அத நிறையப் போடுங்க
கூட்டத்திலிருந்து கேட்டது ஒரு குரல்

Monday, April 27, 2020

கண்ட நாள் இன்று


கிளையிலிருந்து
பறித்துத் தருவது போல்
பையிலிருந்து
பழங்களை எடுத்து
மூதாட்டிக்குத் தருகிறார்
கனிந்தக்
கருணைச் சித்திரத்தைக்
கண்ட நாள் இன்று

-          ராஜா சந்திரசேகர்

Friday, April 17, 2020

அப்பாவும் குழந்தையும்

இருப்பது ஒரு பழம்
மூன்று பேர்
சாப்பிட முடியுமா
உரித்தபடியே
அப்பா கேட்டார்
இருக்கிறது ஆறு சுளை
ஆறு பேர் சாப்பிடலாம்
குழந்தை சொன்னது
- ராஜா சந்திரசேகர்

Wednesday, April 15, 2020

அரைநொடியில்

ஆசுவாசமாக அழுதபின்
அரைநொடியில்
துடைத்துக்கொண்டேன்
யாரோ கதவைத் தட்டுகிறார்கள்
   

Saturday, April 11, 2020

இசைத்தட்டின் மேல்...


நான் இப்போது
சுழலும்
இசைத்தட்டின் மேல்
விழுந்திருக்கும் இறகு
நீங்கள் எனக்கு
எந்த ராகத்தின்
பெயரையும் வைக்கலாம்

Saturday, April 04, 2020

என்ன செய்யலாம்

உடைந்த மனதை
வைத்துக்கொண்டு
என்ன செய்யலாம்

மேலும் உடையாமல்
பார்த்துக்கொள்ளலாம்


Friday, April 03, 2020

நடந்து நடந்து

நடந்து நடந்து
மரணத்தை அடைந்தான்
என்ற வரியை
எளிதாக
எழுதிவிட முடிகிறது
கடந்து வர முடியவில்லை