Friday, February 27, 2009

யாரோ ஒருவர்

விலாசத்தைக் காட்டி
விசாரித்த போது
நிதானமாகப் பார்த்தார்
பொறுமையாகச் சொன்னார்
புரிந்து கொண்டது
முகத்தில் தெரிந்தவுடன்
புன்னகைத்தபடியே போனார்
நகரத்தில்
தன் விலாசத்தைத் தொலைக்காத
யாரோ ஒருவர்

Sunday, February 22, 2009

வெள்ளை நிறத்தில் ஒரு பூனை

யாரும்
பார்க்காத நேரம்
பூங்காவின் ஓரத்தில்
இறக்கி விடுகிறேன்
வெள்ளை நிறப்
பூனையை

கை நழுவும் போது
ஒரு கணம்
அதன் கண்களைப்
பார்க்கிறேன்

நெருக்கடி நிறைந்த வீட்டில்
இருக்கக் கூடாது
என்று எதிர்ப்பு கிளம்பியதால்
இந்த ஏற்பாடு

கூப்பிட்டால்
போய் விடலாம் என்ற
நம்பிக்கையில்
குழந்தைகளின் விளையாட்டை
கவனிக்கிறது பூனை

நெடுந்தூரம்
வந்த பின்னும்
என்னைச் சுற்றி சுற்றி
வருகிறது
பூனைக்கு
நான் வைத்த பெயர்

ஒரு அஞ்சலி

இறந்த போது
எவ்வளவோ பேர் வந்து
கண்ணீர் சிந்தினார்கள்

இருந்த போது
ஒருவரும் வந்து
கண்ணீர் துடைக்கவில்லை

Tuesday, February 17, 2009

நமது மழை

எல்லோரையும் முடக்கிப்
போட்டிருந்தது மழை
நான் திட்டிக்கொண்டிருந்தேன்
எப்போதும் மழையைக்
குழந்தை போல ரசிக்கும்
பக்கத்து வீட்டு அக்காவுக்கு
பிரசவ வலி வர
அவசரமாய் ஆட்டோவில்
ஏற்றிக் கொண்டு போனார்கள்
தலை பிரசவம் என்பதால்
பதற்றம் கூடி இருந்தது
மழை நிற்காத காலையில்
செய்தி வந்தது
சுக பிரசவம்
ஆண் குழந்தை என்று
அப்போது பார்த்த மழையை
உள்ளபடியே
ரசிக்கத் தோன்றியது

வானம்

தன் குஞ்சுக்குப்
பறவை ஊட்டியது
உணவை
பின் கொஞ்ச கொஞ்சமாய்
வானத்தை

கண்ணீரின் நாக்குகள்

கண்ணீரின் நாக்குகளில்
பற்றி எரியும் வார்த்தைகள்
யாரால் அணைக்க இயலும்

நினைவுகளின் தாய்

எங்கள் குழந்தைப் பருவம்
இன்னமும் இருக்கிறது
அம்மாவிடம்
ஊர் போகும்
ஒவ்வொரு முறையும்
தன் நினைவுகளில் பிசைந்து
ஊட்டத் தவறியதே இல்லை

Sunday, February 15, 2009

இடுப்பிலிருக்கும் குழந்தை

முண்டியத்து
முன்னேறி
இடம் பிடித்து
அமர்ந்து
வெற்றி பெருமூச்சு விட்டு
பின் பார்க்க
ஏற முடியாமல்
திணறி
வெளியேறி
வெயில் கவ்வ
தள்ளி நிற்கும் தாயின்
இடுப்பிலிருக்கும் குழந்தை
சிரித்தபடியே
கையசைத்துக் கொண்டிருந்தது
என்னைப் பார்த்து

என்னிடம்...

என்னிடம் இருக்கின்றன
பதினேழு கவிதைகளும்
இருபது மதுக்கோப்பைகளும்

நீங்கள் விரும்பினால்
அருந்தலாம்
கவிதையிலிருந்து மதுவும்
படிக்கலாம்
மதுவிலிருந்து கவிதையும்

அந்தக் கவிதை

எழுதியது போலிருந்த
அந்தக் கவிதையை
இதுவரை
நான் எழுதவே இல்லை

Thursday, February 12, 2009

பேச நினைத்தவை

நீங்கள் பேசாமல் போனால்
உங்களிடம் நான் பேச
நினைத்தவை எல்லாம்
வார்த்தைகளின் சீழாக
என் காதுகளில்
வடியும் என
பரிதாபமாக சொல்லியவனைப்
பார்த்தபடி இருந்தேன்
அவன் சொன்னதுபோல்
வார்த்தைகளின் சீழ் வடிந்தது
என் காதுகளிலிருந்து

Monday, February 09, 2009

எழுதிய என்னாலும் அவனைக் காப்பாற்ற முடியவில்லை...

காலையை வணங்கினான்
சில உடற்பயிற்சிகள் செய்தான்
அவசர குளியல்
ஏதோ திருப்தி தந்தது
தேநீர் நட்பானது
நடந்தான்
பள்ளிக் குழந்தைகளுக்கு
கையசைத்தான்
ஒரு பாட்டி
அவன் கை பிடித்து
சாலைக் கடந்தாள்
கடந்து போய்
திரும்பி வந்து
கடவுளைக் கும்பிட்டான்
மனதிலிருந்த திட்டத்தில்
மாற்றமில்லை
நண்பனுக்கு
கடிதம் எழுதினான்
சம்பளம் வாங்கி
ஊருக்கு அனுப்பினான்
சில நிராகரிப்புகளை
நினைத்துப் பார்த்தான்
அதற்காக வருத்தப்படவில்லை
புன்னகை நிறைந்த தருணங்களுக்கு
நன்றி சொன்னான்
கால் நனைத்த
அலையைத் தொட்டான்
தொட நினைத்த அலை
போயிருந்தது
சாதகமான உயரத்திலிருந்த
மின்விசிறியை நிறுத்தினான்
அவனை வழி அனுப்புவதுபோல்
மெதுவாகி
நின்றன இறக்கைகள்
முன்பாக ஒரு
கணம் யோசித்தான்
இதை முதலில் செய்திருந்தால்
இன்றைய இவ்வளவு
நிகழ்வுகளை
இழந்திருப்போமே என்று
ஹாலில் நிறுத்தப்படாத டீவி
ஈழத்தமிழர்களின் இறப்புகளைச்
சொல்லிக் கொண்டிருக்க
அவன் கைபேசி
ஒலித்துக் கொண்டே இருந்தது

பறவையே...

பறவையே
மன்னிக்க வேண்டும்
உனக்கு உணவு
கொடுக்க முடியவில்லை
எனவே உனனை
உணவாக்கிக் கொள்கிறோம்

Sunday, February 08, 2009

அமைதியின் பெருவெளி

அமைதியிலிருந்து
உதிரும் வார்த்தைகள்
கொண்டு சேர்க்கும்
அமைதியின் பெருவெளிக்குள்

இரவின் முடிவில்

காலையில்
அறுக்கப்போகிறவனின்
கையை நக்கி
கருணையை பொழிகிறது
கன்றுக்குட்டி

இருவரும்

ஜன்னலோர இருக்கையில்
அமர்ந்து கொள்ளலாமா என
கேட்கும் பெண்ணுக்கு
இடம் கொடுத்து
மாறி அமர்ந்தேன்
பயணம் முடியும் வரை
பேசிக்கொள்ளவில்லை
இருவரும்
ஆனாலும் பழக்கமாயின
அவளுக்கு இயற்கையும்
எனக்கு அவள் ரசனையும்

Tuesday, February 03, 2009

பூக்களின் குழந்தை

மரத்தை அசைக்கிறாள் சிறுமி
பூக்கள் உதிர்கின்றன
கைதட்டி சிரிக்கிறாள்
மறுபடி அசைக்கிறாள்
தொலைவிலிருந்து
கூப்பிடுகிறார் தாத்தா
சிறுமியின் கைகள்
சொன்னதைக் கேட்டு
வடிந்து விட்டன்
அநேகமாய்
எல்லா பூக்களும்
அழைத்துப் போகிறார் தாத்தா
திரும்பிப் பார்த்தபடி செல்லும்
சிறுமியின் தலையில்
ஒட்டிக் கொண்டிருக்கின்றன
சில பூக்களும்
மரத்தின் பிரியமும்

(நேத்ராவுக்கு)

Sunday, February 01, 2009

யாருக்கும் தெரியாதவன்

நான் வில்லனாக சித்தரிக்கப்பட்ட
உங்கள் நெடுங்கதையில்
என்னை கதாநாயகனாக
வைத்திருந்த பக்கங்களை
கிழித்து விட்டீர்கள்

உங்கள் கொடூரமும் வன்மமும்
ஏற்றப்பட்டு நான்
உலவ ஆரம்பித்தேன்

சண்டையிட்டேன்
குரூரம் பயின்றேன்
கொன்றேன்
இன்ன பலவும் செய்தேன்

என் ரத்தத்தை
உங்கள் பேனாவில் நிரப்பி
எழுதிக் கொண்டிருந்தீர்கள்

உங்கள் பசி அடங்க
எனனை பசிக்க வைத்தீர்கள்

என்னிடமிருந்து மனிதம்
எட்டிப் பார்க்கும் போதெல்லாம்
உள் தள்ளிப் பூட்டினீர்கள்

இரவு போதையில்
என்னை உங்களோடு அமரவைத்து
உரையாடி
மேலும் பல வியூகங்களை உருவாக்கினீர்கள்
என் கண்ணோரத் துளியைப்பற்றி
கவலைப்படாமல்

உங்கள் எழுத்தின் நியமனங்களின்படி
முடிவில் நான்
இறந்து விடுவேன்

உங்கள் கதை விவாதிக்கப்படும்
நீங்கள் பேசப்படுவீர்கள்
முடிந்திருப்பேன் நான்
யாருக்கும் தெரியாத கதாநாயகனாய்

அவனும் நானும்

இடது கை இழந்த
ஒரு மனிதனை
நான் வரைந்து கொண்டிருந்தபோது
அவன் வலது கையை நீட்டி
வண்ணங்களை எடுத்து
தன் இடது கையை
வரைந்து கொண்டிருந்தான்
புன்னகைத்தபடியே