Tuesday, December 19, 2006

ஆகாரம்

சுட்டு வீழ்த்திய
பறவையின் வாயிலிருந்தது
குஞ்சுக்கான ஆகாரம்

கதை

தட்டச்சில் கதை
பாதியில் இருக்கிறது
ஆஸ்ட்ரேயில் அணையாத சிகிரெட்

ஒரு பூ

நீண்ட நூலகம்
அதன் அமைதியின் மீது விழுகிறது
கதையிலிருந்து ஒரு பூ

Tuesday, December 12, 2006

துளி

ஒரு கண்ணீர் துளியுடன்
பேச ஆசைப்பட்டேன்
வெளிவந்து
உலகம் பார்த்த பரவசத்தில்
மறைந்து போனது

அரங்கம்

அரங்கம் நிரம்பிவிட்டது
டிக்கெட் கிடைத்த நீ உள்ளே
இல்லாத நான் வெளியே
எனது காட்சி தொடங்குகிறது
கம்பிமேல் நடக்கும்
சிறுமியைப் பார்ப்பதிலிருந்து

Monday, October 30, 2006

பயணி

எழுதும் போதெல்லாம்
கவிதை வாய்க்கிறதோ இல்லையோ
பயணம் வாய்க்கிறது

சர்க்கஸ் சிங்கம்

தனக்குள் தேடும்
தொலைந்த காட்டை
சர்க்கஸ் சிங்கம்

Wednesday, October 11, 2006

சாம்பலுக்கு அடியில் பெயர்கள்

பற்றி எரிகிறது பூந்தோட்டம்

இருக்கும் தேனை ஊற்றி
தீயை
அணைக்கப் பார்க்கின்றன பூக்கள்

நெருப்புக்குத் தெரியவில்லை
தேனும் இனிப்பும்

ஒவ்வொரு இதழாகப்
பொசுங்கியது

விடை பெற முடியாத
தேனீ ஒன்று
மரணத்தைச் சுவைத்தபடி
முடிந்துபோனது பூக்களோடு

சாம்பல் நிறமாய் நிலம்

பெயர் வைத்துக் கூப்பிட்ட
எந்தப்பூக்களும் இல்லை

சாம்பலுக்கு அடியில்
நெளிகின்றன பெயர்கள்
வலிகளுடன்

இறந்து போகலாம் அவைகளும்

தீயைச் சபிக்கிறது மனம்
சாம்பல் நிறமாய் நிலம்

பின் எப்போதாவது
தோன்றலாம் பூந்தோட்டம்

அதை உயிரோடு
வைத்திருக்க வேண்டும்
அப்போதய கனவு

Saturday, September 23, 2006

பெருமழை

கனவை நனைக்கும் பெருமழை
மூழ்கிய இரவிலிருந்து
விழித்தெழும் காலை

Sunday, September 10, 2006

மற்றும் சில எண்கள்

டைய்யை சரி செய்து கொண்டவர்
கண்மூடித் திறந்தார்

பெரியவர் வெளியேறுவதில்
தாமதம் ஏற்பட்டது

ஒன்று இரண்டு முன்று
சொல்லியது குழந்தை

அதில் ஒரு சித்திரம்
படிந்திருந்தது

நான்கில் சிரித்து நின்றது
ஒரு ரோஜாப்பூ

அருகாமை நறுமணத்தை
உள்வாங்கியது இளமை

பாடல் முணுமுணுப்பின்
சத்தம் குறைத்தாள் பெண்

போவதும் வருவதுமாய்

மடித்த காகிதங்களைப்
படித்துப் பார்த்தார்
நடுத்தர வயதுக்காரர்

பலவித புன்னகைகளில்
வேலை வேட்டையாடி

நீள் சதுர கண்ணாடி
காட்டிக்கொடுத்த வயதைக்
குறைப்பது பற்றி யோசித்தார் ஒருவர்

கூடவே வந்தது இசை

போவதும் வருவதுமாய்

யாராவது வருவார்களா
பார்த்தபடி இருந்தன
படிக்கட்டுகள்

பதிவு செய்யப்பட்ட
வசீகர பெண் குரல்
அடிக்கடி ஒலித்தது

தயவு செய்து
கதவை மூடவும்

அன்பின் வாசனை

கை குலுக்கி
விடை பெறுகிறாய்
என் உள்ளங்கை எல்லாம்
உன் அன்பின் வாசனை

Sunday, September 03, 2006

விட்டு விட்டு

வானம் அறுத்து
தன்னை
செய்துகொண்ட கவிதை
பறக்கிறது
என்னை விட்டு விட்டு

Friday, September 01, 2006

பூ ஜாடியும் அவனும்

பூ ஜாடியை
மாற்றி வைப்பது
அவன் வேலை
தினம் தினம்
பூக்களை நிரப்பி
அதை செய்கிறான்
புதிய நாளை
டேபிளில் வைத்து
முந்தைய நாளை
எடுத்துப்போவது போலிருக்கும்
அவன் செய்வது
காற்றில் ஆடி
நன்றி சொல்லும் பூக்கள்
பூக்களுக்கும் அவனுக்குமான இசைவில்
வாசம் இருந்தது
பூ ஜாடியை
மாற்றி வைப்பது
அவன் வேலை
அலுப்பிலாமல்
செய்கிறான் இதை
பூக்கள் பஞ்சம்
வந்ததில்லை அவனுக்கு
அவன் புன்னகையில்
சில பூக்கள் ஒட்டி இருக்கும்
அவனே உதிர்ந்து
பின் மலர்வது போலிருக்கும்
ஒவ்வொரு முறை
இதை செய்யும் போதும்

Sunday, August 27, 2006

சொல்

உன் பெயர் எனக்குத் தேவையில்லை
மொழி வேண்டாம்
பூர்வீகம் இன்ன பிற
எல்லாம் தேவையற்றது
உன்னை நீ வரிசைப்படுத்தப் பார்க்காதே
சிபாரிசுக் கடிதங்களைக் கொடுத்து
கெஞ்சுதல் தவிர்
குனிந்து பவ்வியமாய் நிற்காதே
அது வேஷம் போடக்
கற்றுக் கொடுத்துவிடும்
நிமிர்ந்து பார்
கண்களில் திமிரும் எதிர்பார்ப்பை
எடுத்தெறி
நாக்கில் படர்ந்திருக்கும்
பொய்களை விழுங்காமல்
ஒரம் போய்த் துப்பிவிட்டு வா
உன் இந்த எதுவும்
எனக்குத் தேவையில்லை
உன்னால் முடிந்தால் சொல்
அன்பைச் சொல்
அன்பை மட்டுமே

Tuesday, August 22, 2006

கேள்விகள் நிறைந்த பெட்டி

அசைய ஆரம்பித்தது பெட்டி

பெட்டிக்குள் கேள்விகள்

உடனே பதில் வேண்டும்
உருண்டது ஒரு கேள்வி

எனக்கென்ன கிடைக்கும்
முனகியது சின்னதாய் ஒரு கேள்வி

நமக்குத் தேவை
பதில் மட்டுமல்ல விடுதலையும்
குரல் உயர்த்தியது ஒன்று

பெட்டியை குலுக்கின கேள்விகள்

தூக்கியபடி நடந்தேன்

எனது ஆயுள் அதிகம்
பதில் கிடைக்கும் வரை
உயிர் போகாது
உரக்கச் சொன்னது ஒரு கேள்வி

காதுகளோடு மோதி
திரும்பியது சத்தம்

வேண்டாம் இந்த பெட்டி

வைத்துவிட்டு
நகர்ந்து நின்றேன்

நிசப்தமாய் இருந்தது
உயிரற்று

கண்களில்
பேராசை பிசுபிசுக்க
அருகே வந்த நபர்
தூக்கி நடந்தார்

மறுபடியும்
அசைய ஆரம்பித்தது பெட்டி

விடை

ஒரே ஒரு
சரியான பதிலை
கைப்பற்றினால் போதும்
அதையே
பிரித்து பிரித்து
நிறைய கேள்விகளுக்கு
விடையாக்கி விடலாம்

Sunday, August 20, 2006

மனிதக்காடு

தொலைந்த குழந்தையை
தேடிக்கொண்டிருந்தேன்
கிடைக்கவில்லை

எங்கு தொலைந்தது

பேருந்தில் ஏறும்போது
பள்ளிவிட்டு வந்தவேளை
அம்மாவின் கைமறந்து
யார் பின்னாலோ ஓடி
முகவரி மறந்து
எப்படி போயிருக்கும்

தொலைந்த குழந்தையை
தேடிக்கொண்டிருந்தேன்

இருளில் மறைந்திருக்குமா
கடல் குடித்திருக்குமா
தேசம் கடந்து எங்காவது

தொலைந்த குழந்தையை
தேடிக்கொண்டிருந்தேன்

பசியால் அழுமா
நிலவை வேடிக்கைப்பார்த்து
அழுகை நிறுத்துமா
வாகனம் அழுத்தும்
உலோக சாலையில்
ஒதுங்கி நிற்குமா
கால் சூட்டுக்கு
நிழல் தேடுமா
மனிதக்காடு பார்த்து
பயப்படுமா

தொலைந்த குழந்தையை
தேடிக்கொண்டிருந்தேன்

தேடத்தேட
கடைசியில்
தொலந்த குழந்தை
யாரென்று தெரிந்தது
அது என் வயதுக்குள்
புதைந்து போயிருந்தது

Wednesday, August 16, 2006

மணல் பூங்கா

சிறுவர்கள் விளையாடுவார்கள்

ஓங்கி அடிக்கும் பந்தை
பார்த்தபடி இருக்கும்
மைதானம்

இந்த இடத்தில்
எங்கும் உட்காரலாம்

மூச்சை இழுத்து
விடும்போது
மைதானம் உள்போய்
வருவது போலிருக்கும்

மணல் பூங்கா என்று
அதற்கு செல்லமாய்
ஒரு பெயர் வைத்தேன்

அங்கு சினிமா தியேட்டர்
வந்தது

எதாவது ஒரு பெண்
போஸ்டரில்
சிரித்துக்கொண்டிருப்பாள்

மைதானம்
ஒரு பிரிந்து போன
தோழனைப்போல
ஞாபகத்திற்கு வரும்

பிறகு திருமண மண்டபமாயிற்று
ஊர்வலம் போகும்
பாட்டு வரும்
சாலைகள் திணறிவிடும்

கல்யான மண்டபம்
காணமல் போனது

இப்போது
அடுக்கு மாடி குடியிருப்புகள்

எல்லாம் விலைபோனதாகப்
பேசிக்கொண்டார்கள்

ஏதாவது ஒருகுடியிருப்புச் சிறுவன்
பந்து விளையாடுவான்
வீட்டின் எல்லைகளை
மனதில் வைத்து

பழைய மைதானத்து
சிறுவர்கள் அளவிற்கு
வீச்சு இருக்காது

குடியிருப்பின் சிறைகள்
கட்டிப்போடும்
பலவற்றை

பிரிந்து போன நண்பனின்
நினைவுகளைப்போல
மங்கி வருகிறது
மணல் பூங்கா

மையம்

ஏதாவது ஒரு
கனவில் குவியும்
இரவின் மையம்
0
கை அசைவில்
பேசும் பெண்
காற்றில் செய்கிறாள் சிலை
0
தத்தி தத்தி
சுவர் மீது விளையாடும்
மெழுகுவர்த்தி ஏற்றிய இருள்
0

Saturday, August 12, 2006

சிவப்பு ரிப்பன்

நேந்துக்கிட்ட சாமிக்கிட்ட
நேரா புள்ளைய கொண்டு போயி
முடி எறக்கணும்

கடவுள் காரியம்
கடன வாங்கிப் போயி பண்ண
அப்பனுக்கு மனசு ஒப்பல

புள்ளைக்கு முடி சேர்ந்து
நீளமாச்சி

சிக்கு தலை
பாரம் தாங்காம
சத்தம் போடுறான்

கூலி வேல அப்பங்காரன்
ஆகாசத்த பாத்து கும்பிட்றான்
வேலையும் காசும்
வேகமா வரணும்னு

சீக்கிரம் முடி எறக்கு
அபபதான் நம்ம கஷ்டமெல்லாம்
இறங்கிப்போவும்

சிவப்பு ரிப்பனால
புள்ள முடிய கட்டி
பொலம்பித் தீக்கறா பொண்டாட்டி

Friday, August 11, 2006

ஒட்டிக்கிடக்கும் கண்கள்

பேருந்தின்
ஓர இருக்கையில்
அமர்ந்திருக்கும் பெண்
தன் மேல்
ஒட்டிக்கிடக்கும்
கண்களை
பிடுங்கி எறிகிறாள்

வானத்தின் மொழி

செய்யும் போதே
பேசியது பட்டம்
வானத்தின் மொழியை

மாறுவேஷம்

முதல் நாள் இரவு
முடிவாகிறது
மறு நாளுக்கான
மாறுவேஷம்

நானாகவே
உங்களுக்குத் தெரிவேன்
ஆனாலும்
மாறுவேடத்தில்
இருப்பேன்