Monday, February 27, 2012

கண்டெடுத்தோம்

உரையாடலின் நடுவில்
ஓடியது அமைதி
நதி போல
அதில் கண்டெடுத்தோம்
புதிய பேச்சுக்கான
வார்த்தைகளை

மழலைக்கிளை

குழந்தை அசைக்கும்
மழலைக்கிளை
உதிர்கின்றன
என் வயதுகள்

Sunday, February 26, 2012

தந்தது குழந்தை

நான் விட்டுப் போன
வரியை
வளைத்து நெளித்து
திரும்ப வந்தபோது
தந்தது குழந்தை

வரியின் வடிவம்
ஓவியமாகவும்
படிக்க கூடிய
கவிதையாகவும்
மாறி இருந்தது

ஏன்

தொலைந்து போனவைகளையே
உங்கள் கவிதையில்
அடுக்கி வைக்கிறீர்கள்
இழந்துபோனவைகளையே
எடுத்துச் செல்கிறீர்கள்
ஏன்

நீங்கள்
தொலைந்து போகாமல் இருக்க
இழந்து போகாமல் கடக்க

அனுபவ சித்தனின் குறிப்புகள்

859-

மறந்து போகாமலிருக்க
பிரபஞ்சத்திடம்
சொல்லிவைத்திருக்கிறேன்

860-

மனதில் இருந்த வரிக்கும்
தாளில் வந்த வரிக்கும்
இடையில் தேடினேன்
தொலைந்த வரியை

861-


இருள் வழி
நடக்க
இருள் ஒளியாச்சு

862-

தள்ளி வைத்த தூக்கம்
சொல்லாமல் வந்து
தட்டுகிறது
இமைகளின் கதவை

பொங்கும் கடல்

இந்தக் கனவு
நேற்றிரவு நீந்தியது
அழகான மீன் தொட்டி
அழகழகான மீனகள்
மேஜையிலிருந்து
விழுந்து கொண்டிருக்கிறது
மேஜையின் அடியில்
நுரைத்துப் பொங்கும் கடல்

Tuesday, February 21, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

849-

இது என்
இன்றைய முகம்
இதுவே என்
முகமல்ல

850-

வசதியாக
கால் நீட்டி நடக்கிறான்
வழிப்போக்கன்

851-

இந்த பூக்களில்
நீங்கள்
எந்த பூவின்
வாசம்

852-

தெரியாமல்
நடந்த வழி
திரும்பி நடக்க
நட்பாச்சு

853-

அன்பின்
கரம் நீளும்
பிரபஞ்ச
விளிம்பைத் தொடும்

854-

நாய் வாலை
நிமிர்த்திய வரியில்
பொய் சுருண்டிருந்தது

855-

முந்திச்
சென்றவனின் பிணம்
பிந்திச் சென்றது

856-

நான் இல்லாது
போனபின்
என் நிழல்
என்ன செய்யும்

857-

உங்கள்
எந்த முகமூடியும்
அந்த வரிக்கு
பொருந்தவில்லை
விட்டுவிட்டுப் போய்
வேறு வேலை
பாருங்கள்

858-

இருள்
மகுடியென

சுடர் அசையும்
பாம்பென

குழந்தையின் வானவில்

வண்ணம் கத்தரித்து
ஒட்டி ஒட்டி வானவில்
உருவாக்குகிறாள் குழந்தை

அதில் மெதுவாய்
பின்னால் வந்து
நிறைகிறது வானம்

அலை ஒளி

அலை ஒளியாய்
ஓடி வந்து
காலை முத்தமிடும்
நீரில் தள்ளிய நிலா

Sunday, February 19, 2012

வரிசை மாற்றம்

நீங்கள்
அவர்கள்
மற்றும்
நான்

இதில்
நான்
விரும்புவதெல்லாம்
வரிசை மாற்றமே

நீங்கள்
நான்
மற்றும்
அவர்கள்

அவர்கள்
நான்
மற்றும்
நீங்கள்

என

Wednesday, February 15, 2012

பார்க்கிறேன்

இறந்துபோன நான்
என்னைப் படுக்க வைத்திருக்கும்
கோணத்திலிருந்து பார்க்கிறேன்
யார் யார் வந்திருக்கிறார்கள் என்று

எவ்வளவோ பேர்
விடுபட்டுப் போயிருக்கின்றனர்

எப்போதும்
என் கால் நக்கி
சுற்றிவரும் நாய்க்குட்டி
நான் மூடிவைக்கப்பட்டிருக்கும்
கண்ணாடிப் பெட்டியை
முட்டி முட்டித் தள்ளி
என் கால்கள் தொடப்
போராடிக்கொண்டிருக்கிறது

மிதத்தல்

குளிர்ந்த திரவத்தை
விஷமாகப் பார்த்தபோது
என் மரணம்
மிதந்துகொண்டிருந்தது
பனிக்கட்டியைப் போல

Tuesday, February 14, 2012

யாரென்று

உங்கள்
துப்பாக்கிக் குறியை
மாற்றிவைத்திருக்கிறேன்
செத்து விழும்போது தெரியும்
யாரென்று

அனுபவ சித்தனின் குறிப்புகள்

842-

பாறை இருள்
தள்ளிப் பார்த்து
முடியாமல்
நின்றுவிட்டேன்

843-

காணமல் போய்
கிடைத்தேன்
வேறு நானாய்

844-

புகையாகவே சுழலும்
வரி வடிவம்
விரும்பா வார்த்தைகள்

845-

கல்லறையில் மழை
புரண்டு
படுக்கிறேன்

846-

கண்ணீரே
கோபித்துக்கொள்ளாதே
அழுவதற்கு
எனக்கு காரணங்கள்
கிடைக்கவில்லை

847-

என் உயரத்திலிருந்த
மிருகத்தை சந்தித்தேன்
பெயர் கேட்டேன்
சொன்னது
என் பெயரை

848-

எழுது என்ற கட்டளை
தூக்கிப்போட்டது
மொழி வனத்திற்குள்

Saturday, February 11, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

839-

ஒரு மரம்
கல்லெறியப்
பறந்தது வனம்

840-

என் உடலில்
எங்கிருந்தும்
நீ என்னைத்
தோண்டி எடுக்கலாம்

841-

வெட்டி எறிந்த
வன்மத்தை
ஒரு நாள் பார்த்தேன்
காயம் ஆறா
மிருகமென

ஒன்றுமில்லை

மழை பெய்கிறது
என்னிடம்
சொல்வதற்கு
ஒன்றுமில்லை

Tuesday, February 07, 2012

பதில்

கவிதையில் ஊர்ந்து சென்ற
எறும்பிடம் சொன்னேன்
ஏதாவது ஒரு எழுத்தை
இழுத்துச் செல்லேன்
உனக்கு உணவாகும் என்று
கவிதையின்
மொத்த அர்த்தத்தையும்
எடுத்துச் செல்கிறேன்
தெரியவில்லையா உனக்கு
எனச் சொல்லிப் போனது

நட்பு

எலியுடன் நட்புகொள்ளாதீர்
எத்தனையோ நாள்
சொல்லியும்
கேட்காத நண்பர்
சிக்கிப் போனார்
ஒருநாள்
எலிப்பொறிக்குள்