Tuesday, September 27, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

672-

அசையும் கல் நான்
தூக்கி எறியலாம்

அசையா மலை நான்
பார்த்துப் போகலாம்

673-

காத்திருக்கிறேன்
கிடைக்கவில்லை
என்றாலும்
காத்திருப்பேன்
கிடைக்கும்

674-

முறிந்து கிடக்கும்
சொற்கள்
ஒட்டப் பார்க்கும்
மழை

675-

குளிருக்கு பயந்து
நிறைய போர்வைகள்
போர்வைகளின் அடியில்
நசுங்கிய தூக்கம்

676-

தாகத்தை
விதைத்தேன்
கிணறு
முளைத்தது

677-

பறந்து பறந்து
என்ன அடைந்தாய்
பறவையிடம் கேட்டேன்

கேட்டு கேட்டு
என்ன சாதித்தாய்
பறவைக் கேட்டது

678-

வழிகள் நண்பர்கள்
வழிப்போக்கன்
நான்

679-

எந்த நீர்குமிழியும்
உடையவில்லை
உடைந்ததெல்லாம்
நான்தான்

680-

இரு பார்வைகள்

என் தியானம்
மெளனத்தில் தொடங்குகிறது

என் தியானம்
மெளனத்தில் முடிகிறது

681-

மரணம்
ஒரு பெரும் கதவாகி
மூடும்போது
நான் அதன்
சிறு துவாரம் வழியே
வெளியேறி விடுவேன்

Thursday, September 22, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

669-

தாகம் நிரம்பிய குளம்
தண்ணீராகவும்
தெரிகிறது

670-

வழிகள் அடைக்கப்பட்டுவிட்டன
அதனாலென்ன
பூமி திறந்திருக்கிறது

671-

குப்பி நிறைந்திருக்கும் நேரம்
குடித்துக்கொண்டிருக்கிறேன்
நிகழ்காலத்தை மாற்றாமல்

சொல்

சொல் திறக்க
வழி

வழி திறக்க
மொழி

மொழி திறக்க
நான்

நான் திறக்க
உலகம்

உலகம் திறக்க
சொல்

Tuesday, September 20, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

665-

வெளியில்
தொலைந்தேன்

வெளியில்
நிறைந்தேன்

666-

சுமந்ததை
இறக்கிய பின்னும்
சுமக்கும் நினைவு

667-

தியானம் முடித்து
கண் திறக்கும்
எழுத்து

668-

பெரிதினும் பெரிதென
பெரிதினும் பெரிதென
பெரிதாகி
சிறிதானேன்

அழகாக இருக்கிறது

மது
நிரம்பி வழியும் கோப்பை
அழகாக இருக்கிறது

இரவு
நிரம்பி வழியும் கனவு
அழகாக இருக்கிறது

நான்
நிரம்பி வழியும் நான்
அழகாக இருக்கிறது

அழகு
நிரம்பி வழியும் அழகு
அழகாக இருக்கிறது

ஒவ்வொரு...

ஒவ்வொரு பிரிவையும்
நம் சந்திப்பில்
உடைத்தோம்

ஒவ்வொரு சந்திப்பையும்
நம் அன்பில்
இணைத்தோம்

முதல் மணி

தன்னை எழுப்ப
முதல் மணியை அடிக்கிறான்
தேவாலய ஊழியன்
பிறகு அடிப்பது
மற்றவர்களுக்காகிறது

Saturday, September 17, 2011

தள்ளி தள்ளி

தள்ளி தள்ளி
கண்ணீரின் அருகில்
கொண்டுபோய்
நிறுத்துகிறீர்கள்

புன்னகைத்தபடியே
பார்க்கிறேன்
துளிகளைத்
துடைத்தபடி

Thursday, September 15, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

660-

கையளவு காற்றை
ஊதி அசைத்தேன்
இசை வீசிப்போனது

661-

வார்த்தைகளுக்கிடையில்
புதைந்து போனதை
எந்த வார்த்தைகள் கொண்டு
எழுத இயலும்

662-

என்ன முடிவு
செய்திருக்கிறீகள்

எதையும் முடிவு
செய்யக்கூடாதென்று

663-

இந்த நள்ளிரவில்
இந்த ஒற்றைத்துளி கண்ணீர்
போதுமானதாக இருக்கிறது

664-

பொய்களின் பாசியில்
வழுக்கி விழுகிறேன்
தாங்கிப் பிடிக்கும்
உண்மை கை தேடி

Tuesday, September 13, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

654-

நான் சினம்
அணிந்த சிவம்
சினம் உதிர்ந்தால்
எதுவுமற்ற சவம்

655-

புள்ளியில்
வந்து நின்றேன்
இனி புள்ளியை
நகர்த்த வேண்டும்

656-

மழை பெய்கிறது
தனிமையின்
மீதும்

657-

கண் மூட
அழைத்துப் போனது
இருள்
கண் திறக்க
வரவேற்றது
வெளிச்சம்

658-

பெரு மூச்சில்
இறங்கி விழும்
ஏக்கம்

659-

தன் நடையில்
பாய்ச்சல் உண்டு என்றவர்
உடனே வந்து சேர்ந்தார்

தன் நடையில்
ஓட்டம் உண்டு என்றவர்
அடுத்து வந்து சேர்ந்தார்

தன் நடையில்
நடை உண்டு என்றவர்
தொடர்ந்து வந்து சேர்ந்தார்

தன் நடையில்
என்ன உண்டு என்றவர்
வந்து சேரவே இல்லை

இன்னொரு மையத்தில்

நான் கொல்லப்படுவேன் என்று
படிக்கிறீர்கள்
பதட்டத்துடன்

சரியாகப் பாருங்கள்

நீங்கள் கொல்லப்படுவீர்கள்
என்று எழுதி இருக்கிறது

அது யார் எவர் ஏன் என்ற
கேள்விகளுக்குள் போய்
உடைந்து வந்து
மேலும் ஒரு முறை
அப்படியேப் படிக்கிறீர்கள்

நான் கொல்லப்படுவேன்


செய்து குவித்த குற்றங்களும்
தவிக்க விட்ட ரணங்களும்
ஒன்றின் மீது
ஒன்று மோதி
வெடித்துச் சிதறுவது
மேலும் உங்களை
பதட்டமடைய வைக்கிறது

இப்போது
மனதைக் கூர்மையாக்கி
மையம் இழக்காமல்
படிக்கிறீர்கள்
மிகச் சரியாக

நீங்கள் கொல்லப்படுவீர்கள்

அப்போது உணர்கிறீர்கள்
அதே மனது
இன்னொரு மையத்தில்
நான் கொல்லப்படுவேன் என்று
படித்திருப்பதை

அறையின் வரைபடம்

நகர மூலையில் உள்ள
எனது சிறு அறையில்
மாட்டப்பட்டிருக்கிறது
அறையின் வரைபடம்

வண்ணங்களின் வீச்சில்
அறை இன்னொரு
அறையாகி விடுகிறது

பார்க்கும் போதெல்லாம்
வரைந்தவனின் கையை
தொட்டுப் பார்க்கத்
தோன்றுகிறது

மஞ்சள் வண்ணத்தில்
ஒளி பாய்ச்சுகிறது சூரியன்
இரவிலும்

வண்ணங்களை திறந்துதான்
ஓவியக்காரன் இந்த
அறைக்குள் நுழைந்திருக்க வேண்டும்

எனது சிறு அறையில்
மாட்டப்பட்டிருக்கிறது
அறையின் வரைபடம்

எனது அறைக்குள் நுழைந்து
அந்த அறைக்குள்
போய் வசிப்பது
இடக்குறையை
நிவர்த்தி செய்து விடுகிறது

சுதந்திரம் ததும்பும்
உணர்வையும் தருகிறது

Thursday, September 08, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

649-

இல்லாத வரியை
உற்றுப் பார்க்கிறேன்
இது வரை

650-

விரும்பி தொலைந்த ஆடு `
விலகி ஓடுகிறது
மந்தையிலிருந்து

651-

நினைவள்ளிப்
போட்டு போட்டு
கனவெல்லாம்
நெறைஞ்சிப் போச்சு

652-

சொல்லிக் கொள்ள
சொந்தம் உண்டு
சொல்லிச் செல்ல இல்லை

653-

வரிகளுக்கிடையில்
நகரும் மேகம்
எங்கே பெய்யும்

Tuesday, September 06, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

646-

நினைவின் மேலேறி
நினைவை எடுத்துக்கொண்டு
போனது நினைவு

647-

கனவை திறக்க
வெளி ஓடின
கனவுகள்

648-

ஜோராய் நடக்கிறது
வியாபாரம்
நீயும் நானும்
விற்கப்படுகிறோம்

வியர்வைகள்

உள்ளங்கையில்
நட்சத்திரங்கள் இல்லை
கை திறந்ததும்
மின்னித் தெறிப்பதற்கு

வியர்வைகள் உண்டு
நீந்தி உழைப்பதற்கு

நீட்சியில்

முற்றுப் புள்ளியை
அனுமதிக்க விரும்பாமல்
நீளமாகிக் கொண்டே
போகிறது வரி

எங்கு முடியும்
எப்படி முடிவை
சென்றடையும்
தெரியவில்லை

நீளும் வரி
தன் நீட்சியில்
அர்த்தங்கள் கரை புரண்டோடும்
நதியாகவும் தெரிகிறது

Sunday, September 04, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

639-

தொலைவான வனம்
தூரம் நிரப்பும்
பறவை ஓலி

640--

புல்லாங்குழலிலிருந்து
மழை பெய்கிறது

கேட்கிறது
மழை பெய்வது

641-

நானே தூசி
என்னை எதற்கு
தூசி தட்ட

642-

எனக்குள் மூழ்க
கண்டேன்
ஓர் கடல்

643-

சொல்
உதிரும்
அழுகையில்

644-

இருந்த இடத்தில் இல்லை
வேறு இடத்தில்
வலி

645-

பெயரின் மையத்தில்
பெயரற்ற
ஒற்றர்கள்

Saturday, September 03, 2011

வேண்டாம்

கண்களில்
நிராகரிப்பின் கசப்பு

உதட்டில்
புன்னகையின் இனிப்பு

உங்கள் முரணில்
எனக்கு உடன்பாடில்லை

பிறகு
எதற்கு சந்திக்க

வேண்டாம்

கூழாங்கல்

இந்தக் கணத்தில்
உள்ளங்கையில் இருக்கும்
இந்தக் கூழாங்கல்
இதமான குளிர்ச்சியைத்
தந்து கொண்டிருக்கிறது

ரகசியமாய்
உனக்கு நானிருக்கிறேன்
என்று சொல்லவும் செய்கிறது

விட்டெறிய விரும்பாத
குட்டிக்கல் இப்போது
என் மேஜையில்

ஒளிப்பட மின்னுகிறது
தன் வசீகரத்துடன்

Thursday, September 01, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

631-

பசி
கனவுத் தேடும்
தாய் முலை

632-

சிரித்தபடியே
குரு சொன்னார்

பிறப்பு
தற்காலிக சொத்து

மரணம்
பூர்வீக சொத்து

633-

ஒன்றிலிருந்து ஒன்று
கிடைக்கும்
அந்த ஒன்று
எப்படி கிடைக்கும்

634-

வரிகளில்
நடந்து சென்றேன்
களைப்பே இல்லை

635-

முள்ளேறும் எறும்பு
முனை அடையாமல்
திரும்புகிறது

636-

பெருவெளியில்
நின்று அழுதேன்
உலகை சுட்டது
என் துளி

637-

படுக்க இடம்
தேடியவன் சொன்னான்
வானம் என் கட்டில்

638-

நிற்க நேரமில்லாமல்
ஓடிக் கொண்டிருக்கிறது
காலம்